வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கக் கூடாது. – AanthaiReporter.Com

வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கக் கூடாது.

தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்தல் வந்துவிட்டது. 5.75 கோடி மக்கள் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாக்களிக்கப் போவதில்லை. ஏனெனில், அரசின் செயல்பாடுகள், வேட்பாளர் தகுதி, நேர்மையில் வெறுப்புற்று, தேர்தலைப் புறக்கணித்து வாக்களிப்பது இல்லை. ஜனநாயகம் என்பது மக்கள் வாக்களிப்பதில்தான் இருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் மக்கள் வாக்களித்தால் அரசியல் பற்றி விழிப்புணர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காரணம்? மக்கள் வாக்கில் இருந்துதான் அதிகாரம் வருகிறது. எனவே, ஒவ்வொரு வாக்கும் முக்கியமாகிறது.
edit apr 3
அதற்காக அரசு, தேர்தல் ஆணையம், கட்சிகள், கூட்டணிகள் மக்களை வாக்களிக்க அழைக்கின்றன. வாக்களிப்பது வாக்காளர் உரிமை; கடமையில்லை. எனவே, வாக்களிக்காததற்காக ஓர் இந்திய வாக்காளரைத் தண்டிக்க முடியாது.அரசியல் கட்சித் தலைவர்கள் அலங்கார மேடையில் நின்று கொண்டு, வாக்காளப் பெருமக்களே! என்று விளித்து முதல்வர் வேட்பாளரான தனக்கும், தன் கட்சிக்கும் வாக்களிக்கும்படி இறைஞ்சி வேண்டுகோள் இடுகின்றனர்.

வாக்காளப் பெருமக்களே!

உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப் போகிறோம். உங்கள் கனவுகளை நினைவாக்கப் போகிறோம் என்பது மட்டும் அல்ல, நீங்கள் காணாத கனவுகளையும், காணவே முடியாத பெருங் கனவுகளையும் நினைவாக்கப் போகிறோம். அதற்காகவே எங்கள் வாழ்வு அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது. அது நிறைவேற, இலவச – விலை யில்லாத பொருள் கள் உங்கள் இல்லம் தேடி வர எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஒவ்வொரு கட்சியும் முழங்குகின்றது. இலவசம், விலையில்லாப் பொருள்கள் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அது வாக்குக்குக் கொடுக்கப்படும் லஞ்சம். வாக்காளப் பெருமக்களே.. பசப்பு வார்த்தைகள் பேசும் கட்சிகளிடம் ஏமாந்து போய்விடாதீர்கள்.

அரசின் பணி என்பது அனைவர்க்கும் தரமான கல்வி, மேலான சுகாதாரம், தடையற்ற மின்சாரம், குடிதண்ணீர், போக்குவரத்து வசதி, வேலைவாய்ப்புகள் செய்து கொடுப்பதுதான். எது செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், இலவசம் என்ற பெயரில் சில்லறைக் காரியங்கள் செய்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிக்கிறார்கள். கல்வி தான் வாழ்க்கைக்கு ஆதாரம். அதுவே நல்ல குடிமக்களை, சிறந்த அறிஞர்களை, விஞ்ஞானிகளை, மருத்துவர் களை உருவாக்குகிறது. மக்களுக்குத் தரமான கல்வி கொடுக்க வேண்டிய அரசு அதனை முழுவதுமாகக் கைவிட்டுவிட்டது. ஆகையால், கல்வி என்பது தனியார் வசமாகி பெரிய விலைக்கு விற்கப்படும் பொருளாகி விட்டது. ஏழை, எளிய, மத்தியதர மக்கள் தரமான கல்வி பெற முடியாமல் போய்விட்டது.

தமிழக அரசு தொலைநோக்குடன் மக்கள் நல்வாழ்விற்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல், செய்யக் கூடாத ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறது. அது மது பான விற்பனை.மக்கள் யாரும் மதுபானம் வேண்டும் என்று போராட்டம் நடத்தவில்லை. அரசாங்கம் பணம் சம்பாதிக்க டாஸ்மாக் என்ற மதுபானக் கடை களை 1983-ஆம் ஆண்டில் இருந்து நடத்துகிறது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் 6,823 கடைகள் இருக்கின்றன. காலை பத்து மணிக்குத் திறக்கும் கடைகள் இரவு பத்து மணி வரையில் இடைவேளை என்பது இல்லாமல் செயல்படுகின்றன. நாளொன்றுக்கு எழுபது லட்சம் பேர் டாஸ்மாக் கடையில் குடிக்கிறார்கள். அது இல்லாமல் எலைட் கடைகளும், பார்களும் இருக்கின்றன. அவற்றில் வசதி படைத்தவர்கள் குடிக்கிறார்கள்.
மது விற்பனையில் ஆண்டுதோறும் வருமானம் கூடிக் கொண்டே வருகிறது. சென்ற ஆண்டு வருமானம் முப்பதாயிரம் கோடி என்று ஒரு கணக்குச் சொல்கிறது. ஆனால், அரசுக்கு அது போதுமானதாக இல்லை. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறக்கிறார்கள். அதனால், சிறுவர்கள் கூட குடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

குடும்பம் சீரழிகிறது என்று பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து “டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்; தொலைதூரத்திற்குக் கொண்டு போக வேண்டும்’ என்று போராட்டங்கள், மறியல்கள் செய்தார்கள். டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போட்டார்கள். அவர்களை காவல் துறையினர் கொண்டு அடித்து விரட்டினார்கள். டாஸ்மாக்கை மூடுங்கள் என்று பாட்டுப் பாடியவரைத் தேசத் துரோக வழக்கில் கைது செய்தார்கள். மதுவை எதிர்ப்பது அரசுக்கு மகத்தான குற்றமாகப்படுகிறது. ஏனெனில், அரசுக்கு மது விற்பனை மூலமாகவே அதிகமான வருமானம் கிடைக்கிறது. அதைக் கொண்டு வாக்காளப் பெருமக்களுக்கு இலவச, விலையில்லாத பொருள்கள் கொடுத்து வாக்குகளைப் பறிக்க முடிகிறது. எனவே, அதிகமான டாஸ்மாக் கடைகள் திறக்கவும், விற்பனையைப் பெருக்கவும் காரியங்கள் நடக்கின்றன.

மதுபானம் உடல்நலத்தைப் பாதிக்கிறது. விரைவில் மரணத்தைக் கொண்டு வருகிறது என்பதைக் கண்டுபிடித்ததும், அதற்கு எதிராகப் போராடி வருகிறார்கள். மது மயக்கம் கொடுக்கிறது; மகிழ்ச்சி தருகிறது என்று குடித்தாலும் மெல்ல.. மெல்ல.. உடல் உறுப்புகளை அரித்து சாவைக் கொண்டு வந்து விடுகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் அதிகம் வந்ததும் குடிக்கிறவர்கள் எண்ணிக்கைப் பெருகுகிறது. அதனால் அதுதொடர்பான மரணமும் தொடர்கிறது. ஆண்கள் இறந்து போக இளம் விதவைப் பெண்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. அதோடு தந்தையை இழந்த சிறுவர்கள் எண்ணிக்கையும் கூடி உள்ளது. குடும்பத்துத் தலைவன் போய்விட்டதால் பெண்கள் வேலைக்குப் போக வேண்டியதாகி விட்டது.

குழந்தைகளைக் கவனிக்க, பாதுகாக்க ஆள்கள் இல்லாமல் போக, சிறுவர்கள் படிப்பை விட்டு விட்டுச் சுதந்திர மாகச் சுற்ற ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் பலர் இளம் குற்றவாளிகளாகி விடுகிறார்கள். சிறுமிகள் பாலியல் தொழிலுக்குப் பிடித்துக் கொண்டு போகப்படுகிறார்கள். சிறப்பாக வர வேண்டிய பல குடும்பங்கள் மதுவால் நிலை குலைந்து போய் விடுகின்றன. விவாகரத்துகள் பெருகிவிட்டன. நெடுங்காலமாகச் சான்றோர்கள் பலரும், சமயத் தலைவர்களும் மதுவிற்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். அதில் முதன்மையானவர் திருவள்ளு வர். அவர் குடிப்பதை எதிர்த்துப் பத்துப் பாடல்கள் பாடியிருக்கிறார். ஒரு பாடலில் “உண்ணற்க கள்ளை’ என்று உத்தரவு போட்டார். இன்னொரு பாடலில் “எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள் உண்பவர்’ — என்று கடிந்துரைத்து இருக்கிறார்.

உலகத்தில் எந்ததொரு சமயமும் குடியை ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல. குடிக்கு எதிராகவும் இருந்து வருகிறது. ஏனெனில் குடி, மக்களைக் கொல்கிறது; சமூக அமைப்பைச் சீர்குலைக்கிறது. துன்பத்தையும், வறுமையையும் கொண்டு வருகிறது என்பதால்தான். இஸ்லாம் கடுமையாக மதுவை எதிர்க்கிறது. இஸ்லாமியர் களுக்கு மது தடை செய்யப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் மதுவிலக்கு என்பது தேசியக் கொள்கையாக இருந்தது. மகாத்மா காந்தி அதில் முன்னிலையில் இருந்தார். தமிழகத்தில் பல தலைவர்கள், தொண்டர்கள் கள், மதுபானக் கடைகள் முன்னே மறியல் செய்து அடிபட்டார்கள்; சிறை சென்றார்கள். ராஜாஜி, பெரியார், முத்துராமலிங்கத் தேவர், ம.பொ. சிவஞான கிராமணியார் — எல்லாம் மது ஒழிப்புப் போராட்டத்தில் முன்னிலையில் இருந்தார்கள்.

1937-ஆம் ஆண்டில் சென்னை மாகாண பிரதமராக ராஜாஜி ஆனார். அது காங்கிரஸ் அமைச்சரவை. எனவே, ராஜாஜி, சேலம் உள்பட மாகாணத்தின் சில பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய வணிக வரி விதித்தார். அது சுதந்திரம் பெற்ற பின்பும் தமிழ்நாட்டில் நடை முறையில் இருந்தது.அண்ணா தமிழகத்தின் முதல்வரானதும், சமூக நலப் பணிகள் செய்ய வருமானத்திற் காகப் பலரும் கள், மதுபானக் கடைகள் திறக்க ஆலோசனை கூறினார்கள். அவர் மூக்குப் பொடி போடுவார். ஆனால் குடிக்க மாட்டார். தான் செய்யத் தகாதது என்று தள்ளி வைத்திருக்கும் ஒரு காரியத்தைத் தம்பிகள் செய்ய வழிவிடக் கூடாது என்பதில் மரணம் வரையில் உறுதியாக இருந்தார்.

அண்ணா மறைவிற்குப் பிறகு கருணாநிதி தமிழ்நாடு முதல்வரானார். 1972-ஆம் ஆண்டில் மதுவிலக்கு என்பது விலக்கிக் கொள்ளப்பட்டது. புதிய தலைமுறையினர் குடிக்கக் கற்றுக் கொண்டார்கள். குடி குடும்பத்தைக் கெடுக்கிறது. சமூகத்தைச் சீரழிக்கிறது என்பதோடு மது உற்பத்தி வினியோகத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. மது விற்பனை மூலம் வரும் பணம் சமூக விரோத காரியங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெரிய வந்தது. எனவே மதுவிலக்கு மறுபடியும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது தரமான மது வகைகள் விற்பனை செய்ய அரசு சார்பில் மதுபானக் கடைகள் கொண்டு வந்தார். அதுதான் டாஸ்மாக்; அரசு மதுபான விற்பனை நிலையங்கள். டாஸ்மாக் பணம் கொட்டும் இயந்திரமாக இருப்பதால் அரசு அதனை மூடத் தயாராக இல்லை.

ஆனால், குடி குடியைக் கெடுக்கும் என்று பிரசாரம் செய்யவும், சினிமா எடுக்கவும், பணம் செலவிடுகிறது. அவை எல்லாம் மக்களை ஏமாற்றும் காரியங்கள். ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் குடிக்கு எதிரான பிரசாரம் என்பது எடுபடவே செய்யாது. பிரசாரத்தின் வழியாக எந்த நாடும் மதுவை ஒழித்ததாகச் சரித்திரம் இல்லை. அது சட்டத்தின் படி ஒழிக்கப்பட வேண்டியது. டாஸ்மாக் கடைகளில் மது விற்றுத்தான் மக்களுக்கு நல உதவிகள் செய்ய முடியும்; இலவச – விலையில்லாத பொருள்கள் கொடுக்க முடியும் என்றால், இலவசம் கொடுப்பதை நிறுத்திவிடலாம். கண்ணியமான – அமைதியான குடும்ப வாழ்க்கையும் சமூக நலம் சார்ந்து வாழ்வதும்தான் முக்கியம்.

குடும்பத் தலைவனோடு எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கு வழிசெய்து கொடுப்பதுதான் ஜனநாயக முறையில் வாக்குப் பெற்று ஆட்சி புரியும் அரசின் கடமை. வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கக் கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெருவிற்கு ஒரு டாஸ்மாக் கடை திறந்து வைப்போம் என்று வாக்களித்து வாக்குக் கேட்கவில்லை. வாக்காளப் பெருமக்களே. தமிழ்நாட்டிற்கு சட்டப் பேரவைக்குத் தேர்தல் வந்துவிட்டது. இது நல்வாய்ப்பு. நழுவ விடாதீர்கள்.

By சா. கந்தசாமி