21-வது காமன்வெல்த் போட்டி நிறைவடைந்தது! – + காமன்வெல்த் கேம் கம்ப்ளீட் ரிப்போர்ட் – AanthaiReporter.Com

21-வது காமன்வெல்த் போட்டி நிறைவடைந்தது! – + காமன்வெல்த் கேம் கம்ப்ளீட் ரிப்போர்ட்

கடந்த 11 நாட்களாக நடந்து வந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டு பதக்க பட்டியலில் 3ம் இடம் பிடித்த நிலையில் இன்றுடன் இப்போட்டிகள் நிறைவடைந்தன. இதில், ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 198 பதக்கங்களை குவித்து முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் ஆக மொத்தம் 136 பதக்கம் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

அது சரி.. இந்த காமன்வெல்த் விளையாட்டின் பின்னணி  எத்தனை பேருக்குத் தெரியும்?  இப்போதாவது தெரிந்து கொள்வோமா?

இன்றளவும் உலக அரங்கில் தனி அந்தஸ்து உள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளின் கூட்டமைப்பே காமன்வெல்த் நாடுகள் எனப்படுகின்றன. இந்த நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பே காமன்வெல்த் அமைப்பாகும். காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைமையகம் லண்டனில் உள்ளது. இப்போட்டிகளை நிர்வகிக்க, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போட்டிக்கான விதிமுறைகள், போட்டியில் இடம்பெறும் விளையாட்டுகள், போட்டி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் இந்த சம்மேளனம் கவனித்து வருகிறது. காமன்வெல்த் கூட்டமைப்பில் இப்போது 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் வழக்கமாக காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும் அணிகள் மொத்தம் 71. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உள்பட்ட ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகள் தனி அணியை அனுப்புகின்றன. இதேபோல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உள்பட்ட பல சிறிய பிரதேசங்களும் தனி அணியை அனுப்புவதால் 71 அணிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் பங்குபெறும் விளையாட்டுப் போட்டிகளே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகும்.

இந்தக் காமன்வெல்த் போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான முதல் விதையை விதைத்தவர் ஆஸ்ட்லே கூப்பர். 1891ம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் புரிந்துணர்வை அதிகரிக்கவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்று ஆலோசனை கூறியிருந்தார். அதன் பின்னர் 1911ம் ஆண்டு மன்னர் ஜார்ஜ் பதவியேற்ற போது அதைக் கொண்டாடும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனி நாடுகளான ஆஸ்திரேலியா, தென்னாப்பரிக்கா, கனடா ஆகிய நாடுகள் பங்கேற்றன.

அதே சமயம் காமன்வெல்த் போட்டி பல பெயர் மாற்றங்களை கொண்டு நடத்தப்பட்டது. 1930ம் ஆண்டு முதல் 1950 வரை நடந்த நான்கு போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. அதற்குப் பின் 1954 முதல் 1966 வரையிலான போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் போட்டிகள் என அழைக்கப்பட்டன.1970 மற்றும் 1974ம் ஆண்டு நடந்த இரு போட்டிகள், பரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. 1978ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்படுகிறது. பிறகு 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் ஒலிம்பக் போட்டிகள் நடந்தன. அதில் கனடா உள்ளிட்ட பரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்ட நாடுகள் பங்கேற்றன. அப்போது கனடா அணியின் மேலாளராக பணியாற்றிய மெல்வில்லே மார்க்ஸ் ராபன்சன் வீரர்களுக்கு இடையே நட்புணர்வை ஏற்படுத்த காலனி ஆதிக்க நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டியது அவசியத்தை உணர்ந்து அதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டார். அவரது முயற்சியின் காரணமாக முதலாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930ம் ஆண்டு நடைபெற்றது. இப்போட்டி, கனடாவின் ஹாமில்டனில் 1930 ஆம் ஆண்டு நடந்தது. மொத்தம் 11 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன.

இதன் தொடர்ச்சியால் நடந்தஃ இந்த விளையாட்டு திருவிழாவின் 11-வது நாளான நிறைவு நாளான இன்று இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது. பதக்கப்பட்டியலில் கனடா அணி நான்காவது இடத்தையும், நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்தையும் பிடித்தன. அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளன.

முன்னரே சொன்னது போல் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கிய 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. மேலும் மேலே குறிப்பிட்டது போல் இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 71 நாடுகள் பங்கேற்றன. நிறைவு விழாவில் குத்துச்சண்டை தங்க மங்கை மேரிகோம் இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.

ஆக்.. இந்த காமன்வெல்த் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளின் பதக்கப்பட்டியல் விவரம் இதோ:

1. ஆஸ்திரேலியா 198 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது

தங்கம் – 80
வெள்ளி – 59
வெண்கலம் – 59

2. இங்கிலாந்து 136 பதக்கங்களுடன் 2 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 45
வெள்ளி – 45
வெண்கலம் – 46

3. இந்தியா 66 பதக்கங்களுடன் 3 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 26
வெள்ளி – 20
வெண்கலம் – 20

4. கனடா 82 பதக்கங்களுடன் 4 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 15
வெள்ளி – 40
வெண்கலம் – 24

5 .நியுசிலாந்து 45 பதக்கங்களுடன் 5 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 14
வெள்ளி – 16
வெண்கலம் – 15

6. தென் ஆப்பிரிக்கா 37 பதக்கங்களுடன் 6 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 13
வெள்ளி – 11
வெண்கலம் – 13

6. தென் ஆப்பிரிக்கா 37 பதக்கங்களுடன் 6 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 13
வெள்ளி – 11
வெண்கலம் – 13

7. வேல்ஸ் 36 பதக்கங்களுடன் 7 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 10
வெள்ளி – 12
வெண்கலம் – 14

8. ஸ்காட்லாந்து 44 பதக்கங்களுடன் 8 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 09
வெள்ளி – 13
வெண்கலம் – 22

9. நைஜீரியா 24 பதக்கங்களுடன் 9 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 09
வெள்ளி – 09
வெண்கலம் – 06

10. சைப்ரஸ் 14 பதக்கங்களுடன் 10 ஆம் இடம் பிடித்தது

தங்கம் – 08
வெள்ளி – 01
வெண்கலம் – 05