2000 ரூபாய் குறைஞ்சிடுச்சு.. அதுக்கு பதிலா 200 ரூபாய் புழக்கத்துக்கு வரப் போகுது! – AanthaiReporter.Com

2000 ரூபாய் குறைஞ்சிடுச்சு.. அதுக்கு பதிலா 200 ரூபாய் புழக்கத்துக்கு வரப் போகுது!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி திடீரென அறிவித்ததும். அதற்குப் பதிலாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்று சொன்னதும் நினைவிருக்கும். இந்நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகும் பணப்புழக்கம் குறைந்தே இருப்பது மத்திய அரசு கூறியுள்ள பதிலின் மூலம் தெரியவந்துள்ளது. போன வாரம் மக்களவையில் துணை நிதியமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் கூறியிருப்பதாவது: “கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி கணக்குப்படி நாட்டில் 15,074.43 பில்லியன் ரூபாய் பணம் புழக்கத்தில் உள்ளது. ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி கணக்குப்படி நாட்டில் 17,540.22 பில்லியன் ரூபாய் பணம் புழக்கத்தில் இருந்தது” என்று தெரிவித்திருந்த நிலையில் ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், அதனை ஈடு செய்யும் வகையில் ரூ.7.4 டிரில்லியன் மதிப்பிலான 3.7 பில்லியன் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு தட்டுப்பாட்டை போக்குவதற்காக அவசர அவசரமாக இவை அச்சிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் புள்ளி விபர கணக்கின்படி, ஜூலை 14 வரை ரூ.15.22 டிரில்லியன் அளலான பணம் புழக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன. கடந்த 40 நாட்களாக ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரூ.200 நோட்டுக்களை அடுத்த மாதம் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரன்சி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்கட்டமாக ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் துவங்கப்பட்டது. 21 நாட்களில் இப்பணி முடிவடைந்தது. இதனால் அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும் ரூ.500 நோட்டுக்களை அதிக அளவில் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.200 நோட்டு வெளியீட்டிற்கு பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.