சபரிமலை ஐயப்பன் கோயில்லில் 50 வயதிற்கும் குறைவான இரு பெண்கள் வழிபாடு!

சபரிமலை ஐயப்பன் கோயில்லில் 50 வயதிற்கும் குறைவான இரு பெண்கள் வழிபாடு!

அன்றாடம் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றும் வரும் சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்போதும் பல பிரச்னைகள், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.   ஐப்பசி பூஜையை ஒட்டி கோயில் நடை திறக்கப்பட்டபோது பெண் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர். இதை எதிர்த்து, சந்நிதான வாயிலில் பக்தர்கள் பலர் போராட்டம் நடத்தினர்.

பின்னர் தற்போது மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த சர்ச்சையினால் சபரிமலையில் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்று ஒரு தரப்பினரும் செல்லக் கூடாது என மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில், ஐம்பது வயதுக்கும் குறைவாக உள்ள இரண்டு பெண்கள் இன்று அதிகாலை 18 படி ஏறாமல் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் டிசம்பர் மாதம் சபரிமலை வந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் பம்பையிலிருந்து போலீஸாரின் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் மாற்று வழியில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று இரவு மலை ஏறத் தொடங்கிய இவர்கள் இன்று அதிகாலை 3:45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து தரிசனத்தை முடித்துவிட்டு காலை 5 மணிக்குள் கீழே சென்றுள்ளனர்.

‘நாங்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று சாமி தரிசனம் செய்தோம்’ என பிந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக  பரிகாரம் செய்வது தொடர்பாகவும் சபரிமலை தந்திரி ஆலோசனை நடத்தி  அதன்படி கோயில் நடை சாத்தி ஒரு மணி நேரம் கழித்து திறக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெண்கள் இருவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியவுடன் போலீஸார் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை போலீஸார் எங்கு வைத்துள்ளார்கள் என்கிற விவரம் தெரியவில்லை.

மேலும்   சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

அடிசினல் ரிப்போர்ட்:

இதனிடையே ஐயப்பனை தரிசனம் செய்த பெண்களான கனக துர்கா, பிந்து இருவரும் ஏற்கெனவே கடந்த மாதம் 24-ம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். ஆனால், பிந்து, கனகதுர்காவுக்கு 40 வயதே ஆனதால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இருவரும் கீழே இறக்கப்பட்டனர்.

இதில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து தீவிர மார்க்சிஸ்ட், லெனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (சிபிஐ(எம்எல்)) சேர்ந்தவர். இவர் தலசேரியில் உள்ள சட்டக்கல்லூரியில் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா, சிவில் சப்ளை துறையில் பணியாற்றி வருகிறார். இதில் கோயிலாண்டி பகுதியில் உள்ள பிந்துவின் வீட்டுக்கு போலீஸார் தீவிர பாதுகாப்பு அளித்துள்ளனர்

Related Posts

error: Content is protected !!