பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது கோவை மாணவி பரிதாப பலி! – AanthaiReporter.Com

பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது கோவை மாணவி பரிதாப பலி!

கோவையில் உள்ள ஒரு பிரைவேட் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியில் உயிரிழந்த மாணவிக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை, ஆணையம் தாங்கள் அந்த பயிற்சியை நடத்தவில்லை, தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என கைவிரித்துள்ளது. இது குறித்து எஸ்பி மூர்த்தி கூறுகையில்,  ஆறுமுகம் அளித்த ஆவணங்கள்அனைத்தும் போலியானவை. அவர் மத்திய, மாநில அரசு ஊழியர் கிடையாது. 2017 ல் ஒரு முறையும், 2018 ஜூலை 3ல் கோவை கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு அனுமதி கோரி கடிதம் கொடுததுள்ளனர். அவரின் பின்புலம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறினார். இதனிடையே கோவையில் தனியார் கல்லூரியில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் நல்லாகவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி (19). இவர் வாளையார் சாலையில் நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பிபிஏ பயின்று வந்தார்.

இந்நிலையில் அந்தக் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடந்தது. பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து நேற்று மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது, கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து விளக்கப்பட்டது.
2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றவும் மாதிரி பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே ஒவ்வொருவராக குதித்தனர். கீழே விரிக்கப்பட்ட வலையில் அவர்கள் ஒவ்வொருவராக குதித்தனர்.

அப்போது மாணவி லோகேஸ்வரி கீழே குதிக்கும் போது தலை சன்ஷேடில் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முறையான பயிற்சி இல்லாத ஒருவரை கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மாணவியின் உயிரிழப்பை விபத்து என காண்பிக்கக்கூடாது பலரும் வலியுறுத்தினர். இந் நிலையில் திடுதிப்பென்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தங்களுக்கும் இந்த பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை, நாங்கள் இப்படி ஒரு பயிற்சியே அளிக்கவில்லை என கைவிரித்துள்ளது.

இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில்“ துரதிருஷ்ட வசமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நாம் ஒரு இளம்பெண்ணின் உயிரை இழந்து விட்டோம். அவரது குடும்பத்தாருக்கு இதயபூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பயிற்சியை தேசிய பேரிடர் மேலாண்மை மேற்கொள்ளவில்லை, பயிற்சியில் ஈடுபட்டு விபத்து ஏற்பட காரணமான அந்த பயிற்சியாளர் எங்களுடைய அதிகாரபூர்வ பயிற்சியாளர் அல்ல”

அதிர்ச்சிகரமான இந்த நழுவல் அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் லோகேஸ்வரி என்பவர், வியாழக்கிழமை அன்று கல்லூரியில், பயிற்சியின் போது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணவர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரிக் கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.எனது உத்தரவின் பேரில், காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதில், முறையற்ற பயிற்சி வழங்கியஆறுமுகம் என்பவர் வியாழக்கிழமை இரவே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.