அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! – – AanthaiReporter.Com

அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

மனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீரைப் பருகுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் 1.5 கிலோ உணவு தேவை. உணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 நாள் உயிர் வாழலாம். ஆனால் காற்று இல்லாமல் 5 நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. இந்நிலையில் காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி உலகிலேயே அதிக காற்று மாசுபாடு நிறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்திருப்பது இந்தியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சுற்றுசூழல் என்பது நீர், காற்று, மண், ஒலி மற்றும் ஒளி என 5 வகைப்படும். இதில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துபவை காற்று மாசு. காற்று மாசுவினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்கவையாக ஆஸ்துமா, சுவாசக் கோளாறு மற்றும் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியவை. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் சில தீங்கு விளைவிக்கக்கூடிய மாசுக்கள் என்றால், புகை, தூசு, க்ளோரோ ப்ளோரோ கார்பன், புகையிலை புகை, சல்பர், கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, இன்னும் பிற…! இந்நிலையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளில் சுமார் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டு இருந்ததை விட, தற்போது 50 சதவிகிதம் அளவுக்கு காற்று மாசு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த காற்று மாசு ஏற்படுவதன் மூலம் இருதய நோய், முடக்குவாதம், நுரையீரல் புற்றுநோய் ஆகியவை காரணமாக உயிர்பலி அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 இல் ஒன்பது பேர் மாசடைந்த காற்றை சுவாசித்து உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

எனவே இந்த ஆய்வின் மூலம் உலக நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 2.5 அடர்த்தியுள்ள நுண் துகள்களின் அடிப்படையில் மாசு மிகுந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த ஆய்வில் உலகின் மிகவும் மாசமடைந்த 20 நகரங்களின் பட்டியலில் 14 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என்ற அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.

மிக அதிக காற்று மாசுபாடுள்ள 15 நகரங்களின் பட்டியல் இதோ:

1)கான்பூர் (உ.பி.)
2)ஃபாரிதபாத் (ஹரியானா)
3)வாரணாசி (உ.பி.)
4)காயா (பீகார்)
5)பாட்னா (பீகார்)
6)டெல்லி
7)லக்னோ (உ.பி.)
8)ஆக்ரா (உ.பி.)
9)முஷாபர்பூர் (உ.பி.)
10)ஸ்ரீநகர் (காஷ்மீர்)
11)குர்கான் (ஹரியானா)
12)ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
13)பாட்டியலா (பஞ்சாப்)
14)ஜோத்பூர் (ராஜஸ்தான்)
15)அலி சுபா – அல் சேலம் (குவைத்)