இந்திய ராணுவத்தில் வருடந்தோறும் 100 பேர் தற்கொலை…! – AanthaiReporter.Com

இந்திய ராணுவத்தில் வருடந்தோறும் 100 பேர் தற்கொலை…!

நமது இந்திய ராணுவம். ஆண்டுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ராணுவத்திற்காக ஒதுக்கப்படுகிறது. நாளைக்கே போர் வெடித்தாலும் களத்தில் 13,25,000 ஆயிரம் ராணுவ வீரர்கள் குதிக்கத் தயார். துப்பாக்கிகளை ஏந்தி முன் செல்லும் ராணுவ வீர்ர்களுக்கு பக்கபலமாக 6,464 பீரங்கிகள் உள்ளன. வான் வெளியைப் பாதுகாக்க 1,905 போர் விமானங்களும், 15 நீர் மூழ்கி கப்பல்களும் நமது ராணுவத்திற்கு பக்க பலமாக உள்ளன… நம்மைவிட பொருளாதாரத்தில் பலமடங்கு பலமுடன் இருக்கும் கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளது. ஆனால் வளரும் நாடுகளின் பட்டியலில் இருக்கும் இந்தியா 5 ஆவது இடத்தை பிடித்ததுள்ளது என்ற பெருமை எல்லாம் ஒரி புறமிருக்க மன அழுத்தம் காரணமாக, ராணுவ வீரர்கள் ஆண்டிற்கு 100 பேர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய் அன்று, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதன்படி, நடப்பாண்டில் மட்டும் 44 ராணுவ வீரர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துள்ளனர். போன 2014ஆம் ஆண்டில் இருந்து 310 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 9 உயர் அதிகாரிகள் மற்றும் 19 இளநிலை அதிகாரிகளும் அடங்குவர். 2014ஆம் ஆண்டு 84 வீரர்களும், 2015ஆம் ஆண்டு 78ஆகவும், 2016ல் 104 ராணுவ வீரர்களும் தற்கொலை செய்துள்ளனர். இதில் சக வீரர்களை சுட்டு உயிரிழந்ததாக 11 பதிவுகள் உள்ளன.

கடந்த ஜூலை 17ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநில உரி பகுதி தாக்குதலில் ராணுவ வீரர் சுட்டதில் மேஜர் ஷிகர் தபா உயிரிழந்தார். மேலும் பணியின் போது செல்போன் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதில், நாயக் கதிரேசன் என்ற வீரர் ஏகே-47 மூலம் சுட்டதில் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

இது குறித்து விசாரித்த போது தங்கள் குடும்பத்தினரை பிரிந்து ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், பல்வேறு சமூக காரணிகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் குறைவான ஊதியம், விடுப்பு மறுக்கப்படுவது, அடிப்படை தேவைகள் பாதிப்பு, சரியான தலைமையின்மை உள்ளிட்ட காரணங்களாலும் வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக உளவியல் ஆலோசகர்களை நியமித்து, தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது, யோகா உள்ளிட்டவை மூலம் இயல்பான மனநிலையில் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.