ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

கடந்த 2006-ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையத்தில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
jan 29 mk_stalin--
ஸ்டாலின் இன்னும் மூன்று மாதங்களில் இறந்து விடுவார் என தன்னிடம் மு.க.அழகிரி கூறியதாக, திமுக தலைவர் கருணாநிதி நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.இந்நிலையில், ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதியிருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின்தான் தி.மு.க.வுக்கான பிரசாரத்தை முன்னெடுத்து செல்பவர் என்றும், அவரது பாதுகாப்பு குறித்து தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாகவும், எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் பிரதமருக்கு கருணாநிதி எழுதிய இந்த கடிதம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தி.மு.க.வில் மு.க. ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மட்டுமின்றி தி.மு.க மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு, இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே பிரதமரை சந்தித்து ஸ்டாலினுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்க்து.

இதற்கிடையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”அழகிரி என்னைப் பற்றிக் கூறியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; பெரிதுபடுத்தவும் விரும்ப வில்லை. பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தானே ஆக வேண்டும்.தலைவர் அந்தச் செய்தியை எதார்த்தமாக வெளிப்படுத்தியதே போதும். எனவே கழகத் தோழர்கள் இந்தப் பிரச்சினையை மேலும் ஊதிப் பெரிதாக்குகின்ற வகையில், அவருடைய உருவ பொம்மையை தாக்குகின்ற செயலிலோ, எரிக்கின்ற செயலிலோ, சுவரொட்டி ஒட்டுகின்ற செயலிலோ ஈடுபட்டால், அதுவும் கட்சியின் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகி விடும்.” என்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!