வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பி.எஸ்.எல்.வி. சி–29 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பி.எஸ்.எல்.வி. சி–29 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்தநிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் அதன் வணிகக் கிளையுமான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் செயற்கை கோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
images
இதன்படி 625 கிலோ எடை கொண்ட டெலஸ்–1, வெலக்ஸ்–சி1, வெலக்ஸ்–2, அதனாக்சாட்–1, கென்ட் ரிட்ஜ்–1, கிளாசியா ஆகிய 6 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.சி. சி–29 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள்கள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டன. இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் எனப்படும் 59 மணிநேர ‘‘கவுண்ட்டவுன்’’ முடிந்து, நேற்று மாலை 6 மணிக்கு 6 செயற்கை கோளையும் சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி–29 ராக்கெட் 1–வது ஏவுதளத்தில் இருந்து தீப்பிளம்பை கக்கியபடி விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

புறப்பட்ட 67 நிமிடம் 29.5 வினாடியில் ராக்கெட் 524 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், ஒவ்வொரு செயற்கைகோளாக ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது.ராக்கெட் பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கை கோள்களை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

இதில் கலந்து கொண்ட சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘சிங்கப்பூர் பல்கலைக்கழக செயற் கைக்கோளை வெற்றிக்கரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியதின் மூலம் இந்தியா–சிங்கப்பூர் உறவு மேம்படும்’’, என்றனர்.இஸ்ரோ இயக்குனர் கிரண்குமார் கூறும்போது, ‘‘சிங்கப்பூர் தனது 50–வது ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளையில் 50–வது ராக்கெட்டை நாம் இன்று விண்ணில் அனுப்புவது பொருத்தமாக இருக்கிறது’’ என்றார்.

பூமியின் தொலை உணர்வை அறிவதற்காகவும், குறிப்பாக சுற்றுப்புறம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தவும், பேரிடர்களைக் கண்காணிப்பதற்காகவும் இந்த செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 550 கிலோ மீட்டரில் 15 டிகிரியில் தனித்தனியாக சுழன்று வந்து பூமியைப் படம் பிடித்து ஆராய்ச்சிக்காக படங்களை அனுப்பி வைக்க உள்ளன.3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி–29 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2–ம் நிலையில் திரவ எரிபொருளும், நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி–29 ராக்கெட்டின் மொத்த எடை 227.6 டன் ஆகும்.

பி.எஸ்.எல்.வி. சி–29 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம், விண்வெளி தொழில் நுட்பத்தில் நிபுணராக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து உள்ளது. இது ஒரு சாதனை நிகழ்வாகும்.இஸ்ரோ ஏவிய 32 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில், 31 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!