‘யாகாவாராயினும் நா காக்க’ – ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அட்வைஸ்!

‘யாகாவாராயினும் நா காக்க’  – ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அட்வைஸ்!

“முதல்வருக்கு என்று உயர்ந்த பண்பாடு வேண்டாமா? பதவி இருக்கிறது என்பதற்காகவே யார்மீது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பதப்பிரயோகம் செய்வதா? ‘யாகாவாராயினும் நா காக்க’ என்று வள்ளுவர் சொன்ன அறிவுரையைத்தான் நினைவூட்டவேண்டி இருக்கிறது. ” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தேசிய உணவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதை பற்றி கவலை இருக்கிறதோ, இல்லையோ, தி.மு.க. அந்த மசோதாவை ஆதரித்து விட்டது. அதனால் தமிழகத்துக்கு துரோகம் செய்து விட்டது என்று பொய் அறிக்கை விட்டால்தான் து£க்கம் வரும் போலும். ஜனநாயகத்தில் இது போன்ற விவாதங்கள் நல்லதுதான்.
sep 1 - karunanidhi
அப்போதுதான் நாட்டு மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஜெயலலிதாவின் திசை திருப்பும் அறிக்கைகளையும், அதற்கு நான் தரும் தெளிவான பதில்களையும் மக்கள் படித்து முடிவுக்கு வரட்டும். வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்காக வழங்கப்படும் அரிசிக்கு தற்போது மத்திய அரசு, மாநில அரசிடமிருந்து வாங்கும் விலை ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் 30 காசு.

இந்த விலை உயர்த்தப்படக் கூடாது என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை. நம்முடைய கோரிக்கையும் இதுதான். ‘இந்த விலை உயர்த்தப்பட மாட்டாது என்று சட்டத்தில் சேர்க்காதது ஏன்? எனவே, தமிழர்களுக்கு திமுக துரோகம் செய்து விட்டது’ என்கிறார் ஜெயலலிதா. இந்த விலையை உயர்த்த கூடாது என்று உணவு பாதுகாப்பு மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியது 25.8.2013 அன்று. ஆனால் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர், டி.ஆர்.பாலு 21ம் தேதியே மத்திய அமைச்சர் தாமசிடம் வலியுறுத்தினார்.

இதை நானும் என்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறேன். தமிழகத்துக்கு நான் துரோகம் செய்து விட்டதாக, முதல்வர் அறிக்கை விடுவதையும், இந்த உணவு மசோதா குறித்து மாநிலங்கள் அவையில் மத்திய உணவு அமைச்சர் தெரிவித்த கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்து குழப்பத்தில் இருப்பது யார், இரட்டை வேடம் போடுவது யார் என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம்.

எனது முந்தைய அறிக்கையில், ‘அதிமுக சார்பில் இந்த சட்டத்தை ஏற்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, சட்டத்தை ஏற்கவில்லை என்று கூறி ஏன் வெளிநடப்பு செய்யவில்லை?’ என்று கேட்டிருந்தேன். அதற்கு ஜெயலலிதா அளித்த பதிலில், வாக்கெடுப்பின் போது, தங்கள் கட்சி உறுப்பினர்கள் ‘சூடி’ என்று கூறினார்கள் என்று சொல்லியிருக்கிறார். வாக்கெடுப்பின் போது, அது குரல் வாக்கெடுப்பாக இருந்தால், உறுப்பினர்கள் எழுப்பும் ஓசையைக் கொண்டே சபாநாயகர் முடிவுக்கு வந்து அறிவிப்பார்.

அப்போது எந்தெந்த கட்சிகள் ஆதரித்தன, எந்தெந்த கட்சிகள் எதிர்த்தன, எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் சட்டம் நிறைவேறியது என்ற விவரங்கள் தெரியாமலே போய் விடும். இந்த விவரங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் சட்டத்தை நிறைவேற்றும் போதும், திருத்தங்களை நிறைவேற்றும்போதும், ‘வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று சபாநாயகரிடம் கேட்பார்கள். ஆனால் முக்கியமான இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, அதிமுகவினர் வெளிநடப்பும் செய்யவில்லை; வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் கேட்கவில்லை.

கூட்டத்தோடு கூட்டமாக ‘சூடி’ என்று சட்டத்தினை எதிர்த்துக் கோஷம் போட்டு விட்டார்கள் என்று முதல்வர் சொல்லியிருப்பது எவ்வளவு வினோதமான வேடிக்கை? மறுநாள் அதே மக்களவையில் நிலம் கையகப்படுத்துதல் சம்மந்தமான மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, அதிமுகவினர் அதை எதிர்த்து வெளிநடப்பு செய்தார்களே, அதை போல உணவு பாதுகாப்பு மசோதாவின் போது ஏன் வெளிநடப்பு செய்யவில்லை?

மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றாமல் அதை மீறி அரிசி விலையை உயர்த்தினால், அப்போது அதை எதிர்த்து வாதாடலாம், போராடலாம். அப்போது சட்டத்திலே திருத்தம் கொண்டு வர பிடிவாதமாகக் கோரலாம். சட்டம் இயற்றப்பட்டு விட்டால், அது திருத்தப்படக் கூடாத ஒன்றல்ல. எந்தவொரு சட்டமும் தொடக்க நிலையிலேயே பூரணத்துவம் பெற்று விடுவதில்லை. அரசியல் சட்டமே நு£று முறைக்கு மேல் திருத்தப்பட்டிருக்கிறது. அதை போல இந்தச் சட்டத்திலும் அனுபவத்தின் அடிப்படையிலே காலப்போக்கில் திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாமே. அதற்குள் தமிழகத்துக்கே துரோகம், இரட்டை வேடம் எல்லாம் எங்கிருந்து வந்தது?

முதல்வருக்கு என்று உயர்ந்த பண்பாடு வேண்டாமா? பதவி இருக்கிறது என்பதற்காகவே யார்மீது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பதப்பிரயோகம் செய்வதா? ‘யாகாவாராயினும் நா காக்க’ என்று வள்ளுவர் சொன்ன அறிவுரையைத்தான் நினைவூட்டவேண்டி இருக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

error: Content is protected !!