”மிக்க நன்றி செல்லம்மா.!” – ராமின் மரமேசையிலிருந்து…!

”மிக்க நன்றி செல்லம்மா.!” – ராமின் மரமேசையிலிருந்து…!

”சாதனா என்கிற செல்லம்மா”வுக்கு கிடைத்த தேசிய விருது ஆறுதல் பரிசே.ஆம்..எனக்கும், தங்கமீன்கள் குழுவிற்கும் அவள் என்றும் செல்லம்மாதான். அவளின் 7 வயதிற்கும் 8 வயதிற்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் அவளை முதன் முதலில் பார்த்தேன். 4 பற்கள் விழுந்து நீண்ட முடியோடு வெகுளித்தனம் பூசிய முழுமையான குழந்தையாய் அவள் இருந்தாள். சாலிகிராமத்தின் கடைசியில் இருந்த அப்போதைய அலுவலகத்தில் என்னுடைய nikkon fm10 ல் அவளை முதன் முதலில் pink நிற சிம்மிஸில் முதல்படம் எடுத்த நாள் டிசம்பர் 21,2009. கரும்பலகையில் கை நடுங்கிக் கொண்டே “w” எழுதுகிற காட்சிதான் அவள் முதன்முதலில் எனக்கு நடித்துக் காட்டிய காட்சி. அப்போது நடிகர் கருணாஸ் கல்யாண சுந்தரமாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடைபெறாமல் போக அந்த அலுவலகத்தை காலி செய்தோம்.
cinema ram thangameengal
வேறொரு அலுவலகம். தங்கமீன்களுக்கான தயாரிப்பாளரைத் தேடி காலம் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. செல்லம்மாவும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாள். அவளின் வளர்ச்சிக்கேற்ற
மாற்றங்களை திரைக்கதையும் வேகமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது. இத்திரைப்படத்தை எடுக்க இயலுமா என்ற சந்தேகம் வேகமாய் எல்லாருக்குள்ளும் வளர்ந்து கொண்டிருந்தது. வேறு கதை தயார் செய்து வேறு முயற்சி செய்யலாமே என்ற அறிவுரைகள் எல்லா திசைகளிலும் இருந்தும் வந்து கொண்டே இருந்தது. செல்லம்மாவின் மனதில் ஆசைகளை ஏற்படுத்தி விட்டு எப்படி விட்டுப் போக முடியும் என்ற ஒரே கேள்வி என்னை தங்கமீன்களோடு இருக்கச் செய்தது. எப்போ படப்பிடிப்பு என்று எனக்குத் தெரிந்த எல்லாரும் எல்லா நாளும் கேட்ட போதும், கடைசி வரை அந்தக் கேள்வியைக் கேட்காத ஒரே நபர் செல்லம்மாதான். கேட்டால் நான் வருத்தப்படுவேன் என்று நினைத்தாளோ, கேட்டுதான் என்ன ஆகப்போகிறது என்று நினைத்தாளோ அப்படி எல்லாம் கேட்கலாம் என்று தெரியாத குழந்தையாக அவள் அன்று இருந்தாளோ என்று தெரியாது. ஆனால் அவள் கேட்காதது என் மீதான நம்பிக்கையும் என் மீதான பிரியமும் என்று நான் எண்ணிக் கொள்ளுமாறு இருந்தது அவளின் புன்னகைகளும் பார்வைகளும். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் 2010ன் நடுப்பகுதியில் தங்கமீன்களை எடுக்கச் சம்மதித்தார்.

முன்பு விழுந்திருந்த பற்கள் முளைத்தன. புதிதாய் இரண்டு பற்கள் விழுந்தன. நாங்கள் ஒரு வழியாய் முதல் கட்டப்படப்பிடிப்பிற்குத் தயார் ஆனோம். நாகர்கோவிலின் வீராணி ஆளுரில் 2011 ஜனவரியில் ல் தொடங்கியது தங்கமீன்கள். 40 நாட்கள் முடிந்து சென்னை திரும்பிய போது தெரியாது அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்கு நாங்கள் மீண்டும் காத்திருக்க வேண்டும் என்று. அந்த 40 நாட்களில் தினமும் 12 மணி நேரத்திற்கு மேற்பட்ட உழைப்பு. சில தினங்களில் 16 மணி நேரம் 18 மணி நேரம் கூட. கடைசி மூன்று தினங்களும் non stop shooting. செல்லம்மா உறக்கம் வருகிறது என்று சொல்லவில்லை. என்னால் முடியவில்லை என்று சொல்லவில்லை. எனக்குப் போர் அடிக்கிறது என்று சொல்லவில்லை. எனக்கு அசதியாக இருக்கிறது என்று சொல்லவில்லை. நம்மகிட்ட ரொம்ப பணம் இல்ல, அதனால நிறைய வேல பாத்தாதான் சீக்கிரமா நல்லா, நிறைய எடுக்க முடியும் என்று அவள் என்னிடம் சொன்ன சொற்கள் சொல்லும் அவள் அந்தக் குழந்தை தங்க மீன்களை எத்தனை நேசித்தால் என்று அறிவதற்கு.

அப்புறம் ரொம்ப விட்டு விட்டு பெய்த நல்ல மழையாக தங்கமீன்கள் படப்பிடிப்பு. 2011 நவம்பரில் முடிவடைந்தது. அச்சன்கோவில் பெருங்காற்றில் உயரத்தில் கரடியும் பாம்பும் யானைகளும் கண்களுக்கும் காதுகளுக்கும் அகப்பட செல்லம்மாவின் அம்மா பயந்து என்னிடம் முரண்பட்டு கோபித்துக் கொண்ட போது, படப்பிடிப்பே வேண்டாம் என்ற போது, அதை துளியும் முகத்தில் காட்டாமல் நடித்த செல்லம்மாவின் முதிர்ச்சி. அவள் அம்மாவிற்கும் எனக்கும் ஆன அந்த மௌனமான பேசாத நாட்களில், அந்த மலைமுகட்டில் அவள் பனியை தன் கரங்களால் என்னுடன் சேர்ந்து தள்ளிக் கொண்டிருந்தாள். ஆனந்தயாழையின் வெற்றி செல்லம்மாவின் முதிர்ச்சிக் கிடைத்த வெற்றி என்றும் சொல்லலாம்.

தங்கமீன்கள் படப்பிடிப்பு முடிந்து காத்திருந்தது. பணிகள் முடிந்தும் காத்திருந்தது. பெட்டிக்குள் உறங்குகிற படமாக வெகு நாட்கள் இருந்தது. 2013 ல் ஆகஸ்ட்டில் ஒரு வருடம் 9 மாதக் காத்திருப்பிறகுப் பின் ஜே.சதிஷ்குமாரால் (jsk film corporation) வாங்கப்பட்டு திரைக்கு வந்தது. இந்த நீண்ட காத்திருப்பிலும் செல்லம்மா ஒருமுறை கூடக் கேட்கவில்லை எப்போது படம் வெளிவரும் என. எல்லாரும் எல்லா நாளும் கேட்கிற கேள்வியை அவள் ஒரு போதும் கேட்கவில்லை. அவள்தான் செல்லம்மா.

2009 நவம்பரில் தொடங்கிய செல்லம்மாவின் காத்திருப்பு 2013 ஆகஸ்ட்டில் (கிட்டத்தட்ட 4 வருடங்கள்) முடிவடைந்தது. மற்ற எல்லாரின் காத்திருப்போடு ஒப்பிடும் போது செல்லம்மாவின் காத்திருப்பே பெரிது என்று எனக்குத் தோன்றும். அவள் என்னிடம் எப்பப் படம் வரும் என்று கேட்காவிட்டாலும் பள்ளியிலும் உறவினர் குழுமும் இடங்களிலும் அவள் அந்தக் கேள்வியை எதிர் கொண்டிருப்பாள் தான். கேலியையும் கிண்டலையும் எதிர் கொண்டிருப்பாள் தான். அவ நம்பிக்கை தரும் சொற்களும் அவளை நோக்கி வீசப்பட்டிருக்கும் தான். பெரியவர்களாலேயே சரியாகக் கையாள முடியாத காத்திருப்பை வெகு அழகாகக் கையாண்ட செல்லமாவிற்கு ஒரு தேசிய விருது எல்லாம் போதாது என்பதே என் எண்ணம்.

அவளின் உழைப்பிற்கும் காத்திருத்தலுக்கும் கிடைத்த ஆறுதல் பரிசாகவே நான் அவளுக்குக் கிடைத்திருக்கும் இந்த “தேசிய விருதை” கருதுகிறேன். (என்ன செய்ய, ஒரு தேசம் தான், ஒரே ஒரு தேசிய விருதுதான்).

அவள் வாழ்வில் மென்மேலும் எத்துறையானாலும் அத்துறையில் பெரும் வெற்றி அடைவாள் என்பது என் பெரும் நம்பிக்கை.

அவள் இல்லாமல் தங்கமீன்கள் சாத்தியப்பட்டிருக்காது என்பது 100 சதவீதம் உண்மை.

மிக்க நன்றி செல்லம்மா.

பிரியங்களுடன்

ராம்.

error: Content is protected !!