மானமிகு தோழர், மாண்புமிகு அறிஞர் மா. நன்னன் அவர்களுக்கு புகழஞ்சலி!

மானமிகு தோழர், மாண்புமிகு அறிஞர் மா. நன்னன் அவர்களுக்கு புகழஞ்சலி!

ஆண்டு, திங்கள், நாள் சரிவர நினைவில்லை. 1980ஆம் ஆண்டாக இருக்கலாம். நான் சென்னை சிறையில் தனித் தொகுதி இரண்டில் வைக்கப்பட்டிருந்தேன். சிறையில் திரைப்படம் போன்றவற்றுக்கு என்னைக் கூட்டிச் செல்ல மாட்டார்கள். எனக்கும் அவற்றில் அதிக ஆர்வம் இருக்காது. அந்த நேரம் வீண், வேலை கெடும் என்றுதான் யோசிப்பேன். அன்றைய நாள் காலையில் சிறைக் கலையரங்கத்தில் ஒரு பட்டிமன்றம் நடக்கவிருப்பதாகவும், நான் விரும்பினால் வரலாம் என்றும் சிறை அலுவலர் சொன்னார். யார் நடுவர்? பேராசிரியர் நன்னன் என்றார். கேள்விப்பட்டிருந்தாலும் அது வரை அவரைப் பார்த்ததில்லை. தலைப்பு: கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? சரி, வருகிறேன். தனியாக உட்கார வேண்டும். மற்றவர்களோடு பேசவோ தொடர்பு கொள்ளவோ முற்படக் கூடாது என்ற நிபந்தனைக்கும் சரி சொல்லி விட்டேன்.

ஆயிரத்துக்கு மேல் சிறைப்பட்டோரும் சிறை அதிகாரிகளும் காவலர்களும் கூடிய அவையில் நடுவர் பேராசிரியர் மா. நன்னன் பேசத் தொடங்கினார். எளிமையான தமிழ்நடை! ஓடை போல் சலசலத்துப் பாய்ந்தது. கூட்டத்தை அவர் எளிதில் அமைதிப்படுத்தி விட்டார். சிறை என்பதே மறந்து போனது அது ஆயிரம் மாணவர்கள் கொண்ட வகுப்பறை! நன்னன் ஆசிரியர். இருதரப்பிலும் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் வாதிட்டார்கள். இடையிடையே அவர்களுக்கும் நன்னன் பாடம் நடத்தி்னார். தமிழில் வரக் கூடிய பிழைகளை நேர் செய்தார். அவருக்கே உரிய பகுத்தறிவுச் சிந்தனைகளை இழைய விட்டார்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடியதே தெரியவில்லை. தீர்ப்பு நேரம். இந்தக் கைதிகள் தங்கள் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பைக்கூட இவ்வளவு பரபரப்புடன் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நடுவர் கொடுத்த இடைவெளியில் கைதிகள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டார்கள் – என்ன தீர்ப்பு வரும்?.கண்ணகியாகத்தான் இருக்கும் என்று சிலர். இலையில்லை, மாதவியாகத்தான் இருக்கும் என்று வேறு சிலர்.

“சரி நண்பர்களே! நான் தீர்ப்பைச் சொல்லுவதற்கு முன் இந்த மன்றத்தின் தீர்ப்பை அறிந்து கொள்ள விரும்புகிறேன். கற்பில் சிறந்தவள் கண்ணகியே என்று நினைப்பவர்கள் முதலில் கைதூக்குங்கள்.”

சிறிது நேரம் கைதூக்கியவர்களை எண்ணுவது போல் நோட்டம் விட்டார். பிறகு மாதவிதான் என்று நினைப்பவர்களைக் கைதூக்கச் சொன்னார். தேர்தல் போல் நடந்த இந்தக் கைவாக்கெடுப்பில் ஆர்வத்துடன் கைதிகள் கலந்து கொண்ட காட்சியை மனமகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நான் மாதவிக்காகக் கை உயர்த்தினேன். ஆனால் என்னால் மற்றவர்களிடம் ஆதரவு திரட்ட முடியவில்லை. வேறு சிலர் அதையும் செய்தனர்.

நன்னன் சொன்னார்: “நண்பர்களே! இந்த மன்றம் தெளிவாகத் தீர்ப்பு சொல்லி விட்டது. கண்ணகிதான் கற்பில் சிறந்தவள் என்று. இதுதான் மன்றத்தின் தீர்ப்பு. வாக்கு எண்ணிக்கை பார்த்துச் சொல்கிறேன். கண்ணகிக்குத்தான் வெற்றி. ஆனால்…”

பேச்சைக் கொஞ்சம் நிறுத்தி விட்டு சுற்றுமுற்றும் பார்த்தார். அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று அனைவரும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் சொன்னார்:

“நண்பர்களே, மன்றத்தின் தீர்ப்பைச் சொல்லி விட்டேன். இப்போது என் தீர்ப்பைச் சொல்கிறேன். மன்றத்தின் தீர்ப்பிலிருந்து நான் மாறுபடுகிறேன். இங்கே இரு தரப்பிலும் அறிஞர் பெருமக்கள் அருமையாக வாதிட்டார்கள். நானும் தமிழ் படித்திருக்கிறேன். கண்ணகியும் மாதவியும் எனக்கும் தெரிந்தவர்கள்தான். இப்போது என் அறிவுக்கெட்டிய தீர்ப்பைச் சொல்கிறேன், கேளுங்கள். ஒருவனுக்கு ஒருத்தி உண்மையாக இருப்பதைத்தானே கற்பு என்கிறார்கள். கோவலனுக்குக் கண்ணகியும் உண்மையாக இருந்தாள். மாதவியும் உண்மையாக இருந்தாள். இருவரும் கற்புடையவர்கள்தாம் . அறிஞர் பெருமக்கள் அருமையான சான்றுகளை அடுக்கினார்கள். ஆனால் இரண்டு பேருமே கற்பில் சிறந்தவர்கள் என்று நான் தீர்ப்புச் சொல்ல முடியாது. நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தது போல் நானும் என் அறிவுக்கெட்டிய வரை ஒப்பிட்டுப் பார்த்தேன். எனக்குத் தோன்றுகிறது, மாதவிதான் கற்பில் சிறந்தவள் என்று. காரணம் என்னவென்றால் கண்ணகி தனக்குத் தாலிகட்டிய கணவனுக்குத்தான் உண்மையாக இருந்தாள். எல்லாப்பெண்களும் இப்படித்தான் இருப்பார்கள். இது இயல்பான செய்தி. ஆனால் மாதவி கோவலனுக்கு மனைவி அல்ல, அவனை விரும்பின் ஏற்றவள், அவனைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் மனத்தால் கூட தீண்டாதவள். இறுதி வரை கோவலனுக்கே உண்மையாக இருந்தவள். எனவே கண்ணகியை விடவும் மாதவியே கற்பில் சிறந்தவள் என்பதுதான் என் தீர்ப்பு.”

அரங்கமேஅதிர எழுந்த கையொலி கண்ணகிக்காகவோ மாதவிக்ககவோ அல்ல, நடுவர் நன்னன் ஐயாவின் ஆளுமைக்காக. அப்போதே அவரைப் பார்த்துப் பேச எனக்கு வாய்ப்பில்லை. உடனே என் கொட்டடிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். கூட்டம் கலையாமல் காத்திருந்தது. நன்னன் சொன்னார்: “நண்பர்களே! உணவுக்கு நேரமாகி விட்டது. போய் சாப்பிடுங்கள். நானும் வீடுக்குப் போய் சாப்பிட வேண்டும் நேரம்தவறாமல் சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஏற்றது.” ==============================================

பிறகு 1985 நவம்பரில் என் விடுதலைக்குப் பின்.. இதுவும் ஆண்டு நினைவில்லை. என்சின்ன மாமா மகள் திருமணத்துக்கு மாமாவே நேரில் வந்து அழைப்புக் கொடுத்தார். திருமணத்தைப் பேராசிரியர் நன்னன் நடத்தி வைப்பார் என்று போட்டிருந்தது. வழக்கமாக உறவினர் இல்லத் திருமணங்களுக்கு நான் போவதில்லை. அவர்களில் சிலரும் நான் வருவதை விரும்புவதில்லை. ஆனால் மாமா மகள் திருமணத்துக்குச் செல்ல நினைத்தேன். என் தாயார் பிறந்த ஊர் இளங்காடு, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த ஊர். நம்மாழ்வார்ஊ வீட்டுக்குப் பக்கத்து வீடு. ஊரெங்கும் புலவர்கள். என் இரு மாமாக்களுமே பாட்டுக் கட்டிப் பாடுவர்கள். பகுத்தறிவாளர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள். “எண்ணன் கோடி தென்நாடெல்லாம் பறக்குது” என்று அம்மா பெருமை பேசும். பெரிய மாமா இராமநாதன் கடைசி வரை அப்படியே இருந்தார். சின்ன மாமா சாமிவேல் பிற்பாடு மாறி விட்டார். ஆனால் வீட்டில் சாதிமறுப்புக் காதல் திருமணத்தை ஏற்று நடத்தி வைத்தார்.

நிகழ்வுக்குப் போனபிறகுதான் தெரிந்தது – மாமா வீட்டுத் திருமணம் ஒவ்வொன்றையுமே நன்னன்தான் நடத்தி வைப்பார் என்பது. அன்று அவர் ஆற்றிய உரை என்றுமே மறக்காது. கல்யாண வீட்டில் பலதரப்பட்டவர்களையும் அமைதிப்படுத்துவது எளிதன்று. நானெல்லாம் பல நேரம் திணறியுள்ளேன். அவர் சில மணித்துளிகளுக்குள் அனைவரையும் அமைதிப்படுத்தியதோடு தன பேச்சாசி ரசிக்கவும் வைத்து விட்டார். மண விழா மண்டபமே ஆசிரியர் நன்னனின் வகுப்பறை ஆகிப்போனது. அவர் சொன்ன ஒரிரு செய்திகள் ஈண்டு குறிக்கத்தக்கவை.

“நம்மகிட்டே நிறைய தேவையில்லாத பழக்கம்லாம் இருக்கு. எப்படின்னு கேளுங்க. உங்கள் சட்டைல கழுத்துப்பக்கம் ஒரு பொத்தான் இருக்கு பாருங்க. நல்லா தொட்டுப் பாருங்க. இருக்கா? அது எதுக்கு? வெள்ளைக்காரன் குளிர் நாட்டுல டை கட்டுறதுக்கு அங்க ஒரு பொத்தான் வச்சிருக்கான். நமக்கு அது தேவை இல்லையே? தையக்காரர்கிட்ட சொல்லி ஒரு பொத்தானை வீணடிக்க வேணாம்னு சொல்லிடுங்க. வேறு என்னெல்லாம் தேவை இல்லாம பண்றோம்னு அதையும் விட்டுருங்க. சரியா?”

“ஆணும் பொண்ணும் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்? இத பாருங்க நான் சட்டை போட்டிருக்கேன். மேல துண்டு போட்டிருக்கேன். ஆனா வீட்டுக்குப் போனா துண்டு போட்டுக்க மாட்டேன். சட்டையைக் கழற்றி வச்சுடுவேன். வேட்டி இல்லண்ணா லுங்கியோட இருந்துடுவேன். இத பாருங்கம்மா நீங்கள்லாம் பட்டுப்புடவை கட்டிக்கிட்டு நகை எல்லாம் மாட்டிகிட்டு வந்திருக்கீங்க. தேவை இல்லன்னாலும் கேக்கவா போறீங்க? அது போகட்டும், வீட்டுல போயும் இப்படியேவா இருப்பீங்க? பட்டுப்புடவையோடு வீட்டு வேலை செய்யா முடியுமா? குறிஞ்ச உடையோடதான் வீட்டுல இருப்பீங்க இல்லையா? உடம்புக்குபோடுற உடையப் போலத்தான் நாம மனசுக்கும் நிரைய் சட்டை போட்டு வச்சுருக்கோம். மேலுக்குப் போடற சட்டையக் கழற்ற மாதிரி மனசுக்குப் போட்டிருக்கற சட்டையையும் கழற்றி வுயக்கிற இடம்தான் வீடு. அதுதான் இல்லற நல்லாப் புரியுதா? என்ன புரியுது? கேட்டா சொல்வீங்களா? கணவன் மனைவிக்குள்ள முடிஞ்ச வரைக்கும் ஒளிவுமறைவு இல்லாம இருக்கணும்.”  -பேசி முடித்ததும் புறப்பட்டு விட்டார்.
================================================
பிறகு பெரியார் திடலில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஒரு பேச்சுப்போட்டியில் அவரும் நானும் மற்றொருவரும் நடுவர்கள். போட்டி முடிந்த பின் நடுவர்கள் சுருக்கமாக உரை நிகழ்த்த வேண்டும். நான் பேசி உட்கார்ந்த பிறகு “என்ன படிச்சிருக்கீங்க?” என்று நன்னன் கேட்டார். “படிக்கலீங்க. பட்டம் வாங்காமலே படிப்பை விட்டு வந்துட்டேன்யா” என்று சொன்னேன். “இவ்வளவு காலம் எங்கே போனீங்க?” என்ற கேள்விக்கு “சிறைக்குப் போய்ட்டேன்” என்றேன் விவரமாகச் சொன்னேன். குழந்தைக்குரிய ஆர்வத்தோடு கேட்டார்.

புறப்படுவதற்குமுன் என்னை அருகில் அழைத்துச் சொன்னார்: “இங்க பாருங்க தியாகு. ஒண்ணு சொன்னாக் கேப்பீங்களா? இனிமேல் எங்க போனாலும் நான் பதினைஞ்சு வருடம் சிறைல இருந்தேன்னு முதல்லேயே சொல்லிடுங்க. நாங்கள்லாம் அதப் படிச்சோம் இதப்படிச்சோம்னு சொல்லிக்கலாம், நீங்க மட்டும்தான் பதினைந்து ஆண்டு சிறைல இருந்தேன்னு சொல்லிக்க முடியும். அதப் பெருமையாச் சொல்லுங்க. யாரும்ஒ போட்டிக்கு வரமுடியாது பாருங்க.
================================================
மூன்று நான்கு ஆண்டு முன்பு என் அத்தை மறைந்த பின் அவர்களின் படத்திறப்புக்குப் போயிருந்தேன். நன்னன்தான் படத் திறப்பாளர். என்னையும் பேசச் சொன்னார். அன்போடு விசாரித்தார். “சிறைக்குப் போனத சொல்றீங்களா?” “ஐயா சொல்றேங்கய்யா!” நிகழ்ச்சிமுடிந்து நானும் மாமா மகன் கண்ணனும் அவரைக் கைத்தாங்லாக மேடையை விட்டு இறக்கி விட்டோம். அதுவே அவருடன் என் கடைசிச் சந்திப்பு.
===============================================
அவர் மறைந்த செய்தி வந்த போது சென்னையில்தான் இருந்தேன். தமிழர் வாழ்வுரிமைக் கூட்மைப்பு சார்பில் காவல்துறைத் தலைமை இயக்குனரை சந்தித்து மனுக் கொடுத்துப்பேசி விட்டு, பேராசிரியர் ஜவகிருல்லாவுடன் திரும்பிக் கொண்டிருந்த போது அவர் இந்தச் செய்தியைச் சொன்னார். அங்குதான் போய்க் கொண்டுமிருந்தார். என்னால் போக முடியாத படி சின்னக் கவலைகள் தீர்க்கும் சின்ன வேலைகள்! தவிர்க்க முடியவில்லை. மன்னியுங்கள் ஐயா!

===============================================
பேராசிரியர் – முனைவர் மா. நன்னன் எழுதிக் குவித்தவர் – பேசியும் நிறைத்தவர். காட்சி ஊடகங்களில் தமிழ்ப் பாடமும் தன்மானப் பாடமும் நடத்தியவர். அவர் மறைந்தும் மறையாமல் நீண்டநெடுங்காலம் எதிர்காலத் தலைமுறைகளுக்குப் பாடம் சொல்லிக்கிடக்கும் வாய்பைத் தகவல்-தொழில்நுட்பப் புரட்சி நமக்குக் கொடு்த்துள்ளது. நன்னன் அடிக்கடி சொல்லிக்கேட்டது: எதையும் வீணடிக்கக் கூடாது! நன்னனின் அறிவுக் கொடையை .நாம் வீணடித்து விடக் கூடாது.

================================================நாத்திகர்களை நோக்கி அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி: கடைசி வரை மாறாமலிருப்பீர்களா? நன்னனைப் போல் நாங்களும் மாறாமலிருபோம் என்று சொல்லும் வாய்ப்பு – நன்னன் ஐயா செத்தும் தந்த கொடை. நாத்திகர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி ஐயா!
================================================மானமிகு தோழர், மாண்புமிகு அறிஞர் மா. நன்னன் அவர்களுக்கு என் செவ்வணக்கம்! புகழஞ்சலி!
===============================================

#தோழர் தியாகு  முகநூல் பக்கத்திலிருந்து

error: Content is protected !!