மனோரமா ”ஆச்சி” யான ஆச்சரிய கதை!

மனோரமா ”ஆச்சி” யான ஆச்சரிய கதை!

கோலிவுட்டில் சகல தரப்பினராலும் ‘ஆச்சி’ என்றழைக்கபடும் மனோரமா. மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அவருக்கு மூட்டு வலி இருந்தது. பாத்ரூமிலும் தவறி விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு குணமானார். ஆனாலும் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.இந்த நிலையில் ஆச்சிக்கு நேற்று மாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மூச்சு விட திணறினார். உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்ப்ல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். உடல் பரிசோதனையும் நடந்தது. மனோரமா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது

‘மாலையிட்ட மங்கை’யில் ஆரம்பித்து ஏகப்பட்ட வெற்றிமாலைகள் தோளில் விழ நில்லாத சினிமா சாதனைப் பயணம் மனோரமாவுடையது.சொந்த ஊர் தஞ்சை மாவட்டம்_ ராஜமன்னார்குடி. இயற்பெயர் கோபிசாந்தா. பெற்றோர் காசி கிளாக்குடையார், ராமாமிர்தம்.தந்தை வெள்ளையர் ஆட்சியில் பெரிய காண்ட்ராக்டர். அதனால் வளமைக்குப் பஞ்சமில்லை. மனோரமாவின் தாயார், தனது தங்கையையே கணவருக்கு இரண்டாவது தாரமாக திருமணம் செய்து வைக்க, அவரது வாழ்வில் புயலடிக்க ஆரம்பித்தது.விளைவு கணவரைப் பிரிய நேர்ந்தது. மகள் கோபிசாந்தாவை அழைத்துக்கொண்டு, காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூருக்குக் குடிவந்தார்.

உழைத்தால்தான் சாப்பாடு என்ற வறுமைநிலை. பலகாரம் சுட்டு விற்றார் ராமாமிர்தம். அப்போது, மனோரமாவுக்கு இரண்டு வயது. அந்த வயதிலேயே திருநீலகண்டர் படத்தில் பாகவதர் பாடிய ‘உன்னழகைக் காண இருகண்கள் போதாதே…’ பாடலை இனிய மழலையில் பாடுவார்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை இது கவர்ந்தது. எல்லோரும் அந்த இரண்டு வயது சிறுமியின் ரசிகர்களானார்கள்.பள்ளிநாட்களிலும் இவரது பாட்டுக் கச்சேரி தொடர்ந்தது. பள்ளி விழாக்கள், தெரிந்தவர் வீட்டு விஷேசங்களில் இவரை அழைத்துச் சென்று தவறாமல் பாட வைத்தார்கள்.
பள்ளியில் படிப்பு; வீடு திரும்பியதும் தியேட்டர்களுக்குச் சென்று அம்மா சுட்டுத் தரும் பலகாரங்களை விற்பது என்று நாட்கள் நகர்ந்தன. தியேட்டர்களில் பலகாரம் விற்கும்போது, சினிமாப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டு இவரது இசை ஞானம் விரிவடைந்தது.

ஒரு கட்டத்தில் மனோரமாவின் தாயாருக்கு உடல்நிலை கடுமையாய் பாதிக்கப்பட பலகாரம் சுடமுடியாத நிலை. எனவே பள்ளத்தூரில் வசதி படைத்த ஒருவரின் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணி மனோரமாவுக்கு.இந்தக் காலகட்டத்தில்தான் கோட்டையூரில் ஏகாதசி விழா. அன்று இரவு ‘அந்தமான் காதலி’ என்று ஒரு நாடகம். இதில் பெண் வேடம் போட்டவருக்குப் பாடவும் ஆடவும் வராது. அவருக்காக பாடவும் நடு நடுவே ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு, மனோரமாவுக்குக் கிடைத்தது. இந்த நாடகத்தில்தான் இவருக்கு மனோரமா என்ற பெயர் சூட்டப்பட்டது.‘அந்தமான் காதலி’க்குப் பிறகு, மனோரமாவுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வரத் தொடங்கின.

சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக் கொண்டிருந்தபோது, அதில் முக்கியப் பொறுப்பிலிருந்த எஸ்.எம். ராமநாதன் மனோரமாவைக் காதலித்தார். அந்தக் காதலுக்கு மனோரமாவும் நாணத்துடன் பச்சைக்கொடி காட்ட, இவர்கள் திருமணம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்தது.மணத்தைத் தொடர்ந்து கர்ப்பமான மனோரமா, ஒன்பதாவது மாதத்தில் பிரசவத்துக்காக தாய் வீடு சென்றார். அதன்பிறகு, கணவர் அவரை வந்து பார்க்கவே இல்லை.

குழந்தை பிறந்த பதினைந்தாவது நாளிலேயே மனோரமாவின் வீட்டுக்கு வந்த ராமநாதன், மனோரமாவை நடிக்க அழைத்தார். ‘குழந்தை பிறந்து கொஞ்ச நாள் தானே ஆகிறது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்’ என்றார் மனோரமா. இதனால் கோபம் கொண்ட ராமநாதன் திரும்பிச் சென்றார். அவரிடமிருந்து வந்தது விவாகரத்து நோட்டீஸ். அதிர்ந்தார் மனோரமா.
இல்லற வாழ்வில் இடி விழுந்தாலும் அதற்காக தளர்ந்துவிடாமல் மனோரமா நாடகங்களில் நடிப்பதைத் தொடர்ந்தார்.

• கலைமணி நாடக சபா,
• வைரம் நாடக சபா,
• எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகமன்றம்,
• கே.ஆர்.ராமசாமி நாடக மன்றம் என்று பெரிய பேனர் நாடகங்களில் தொடர்ந்து நடித்தார்.

சினிமாவில் மனோரமா முதலில் புக் செய்யப்பட்ட படம் ‘இன்ப வாழ்வு.’ வாங்கிய முன் பணம் நூறு ரூபாய். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது.

1958_ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் ‘மாலையிட்ட மங்கை’ படத்தை தயாரித்த போது, காமெடி வேடத்தில் நடிக்க மனோரமாவை ஒப்பந்தம் செய்தார்! ‘காமெடி வேடமா?’ என்று மனோரமா மலைத்தபோது, தைரியம் தந்து நடிக்க வைத்தார் கண்ணதாசன். அந்தப் படத்தில் மனோரமாவுக்கு நல்ல பேர். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதிலும் நாடகங்களில் நடிப்பதை மனோரமா நிறுத்தி விடவில்லை. அறிஞர் அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் காகபட்டராக அண்ணா நடித்தார். இதில் கதாநாயகி இந்துமதியாக அண்ணாவின் தெள்ளு தமிழ் வசனங்களைப் பேசி நடித்தார் மனோரமா.

கலைஞர் கருணாநிதி எழுதிய ‘உதய சூரியன்’ நாடகத்தில் கதாநாயகியாக ஐம்பது தடவைக்கு மேல் மேடையேறியிருக்கிறார் மனோரமா. நாடகத்தின் கதாநாயகன் கலைஞர் கருணாநிதி!1963_ல் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கொஞ்சும் குமரி’ படத்தில் கதாநாயகி வாய்ப்பு. தொடர்ந்து, அலங்காரி, அதிசயப்பெண், பெரியமனிதன் ஆகிய படங்களிலும் கதாநாயகி! நடுவில் சில இந்திப் படங்களிலும் வாய்ப்பு. என்றாலும், தனது உயிர்நாடியான குணசித்திர, காமெடி வேடங்களை மனோரமா மறந்துவிடவில்லை. அவைதான் மனோரமாவின் சினிமா வாழ்க்கையில் அழியாத சித்திரங்களாய் நிலைத்து நிற்கின்றன.

ஜில்ஜில் ரமாமணி!

1968_ல் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ மனோரமா வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் இவர் ஏற்று நடித்த ‘ஜில்ஜில் ரமாமணி’ பாத்திரம் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 1971_ல் ‘கண்காட்சி’ என்ற படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்தார் மனோரமா. ஒவ்வொரு காரெக்டரிலும் ஒவ்வொரு விதமாக நடித்து மெருகூட்டினார்.காமெடி வேடங்களில் கலக்கிய மனோரமா, பிற்காலத்தில் தாய்வேடங்கள் ஏற்று தனிமுத்திரை பதித்தார்.

ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை மனோரமாவுக்கு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியுடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.டி.ராமாராவ் ஆகியோருடன் சினிமாவிலும் மனோரமா நடித்துள்ளார்.

இரண்டு வயது மழலையிலேயே பாட ஆரம்பித்து விட்ட மனோரமா, இதுவரை நூறு பாடல்களை தனது சொந்தக் குரலிலேயே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோரமா, இதுவரை 1300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். உலக சினிமா சரித்திரத்தில் யாரும் தொடாத எண்ணிக்கை இது. இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அவரது இந்தச் சாதனையை ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும். அந்த ஒருவர் வேறு யார்? மனோரமாவேதான். ஆம்… அவர் வெல்ல முடியாத அதிசய மனுஷி!

ஆச்சி

எல்லோரும் மனோரமாவை அன்புடன் அழைப்பது ‘ஆச்சி’ என்று. இதற்குப் பின்னணி உண்டு. இவர் வளர்ந்தது செட்டி நாட்டில். 1962ல் சுகி. சுப்பிரமணியத்தின் ‘காப்பு கட்டி சத்திரம்’ என்ற ரேடியோ நாடகம் 66 வாரம் ஒலிபரப்பப்பட்டது. இதில் மனோரமா நடித்தார். நாடகத்தில் இவர் செட்டிநாட்டுப் பாணியில் பேசுவார். இதனால் ஏவிஎம் ஸ்டூடியோவின் மேக்அப் மேன் இவரை விளையாட்டாக ‘ஆச்சி’ என்று அழைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு எல்லோரும் இவரை ‘ஆச்சி’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

பெ. கருணாகரன்

error: Content is protected !!