மக்கள் நலத் திட்டங்கள் மக்களுக்கானது என்பதை மறக்கலாமா?

மக்கள் நலத் திட்டங்கள்  மக்களுக்கானது என்பதை மறக்கலாமா?

சட்டமன்றத்தில் விதி 110ன்-கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் வெறும் அறிவிப்புகளாகவே இருந்தன. அவற்றில் சில திட்டங்கள் தப்பித் தவறி நடைமுறைக்கு வந்தாலும், அவற்றுக்கு நிதி ஒதுக்கப்படாமலும், திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்றே தெரியாமலும் கேள்விக்குறியாகவே உள்ளன.இதில் சில திட்டங்கள் முடிவுபெற்று திறக்கப்படாமலும், காத்திருப்பிலும் வைக்கப்பட்டுள்ளன. யாருக்காக இந்த காத்திருப்பு.
ksr may2
உதாரணமாக தமிழகத்தில் வீட்டுவசதித் துறையில் அறிவிக்கப்பட்ட 95 திட்டங்களில் 24 திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.போக்குவரத்துத் துறையில் புதிதாக வாங்கப்பட்ட அரசுப் பேரூந்துகள் மாதக்கணக்கில் துவக்கப்படாமலே அரசு டிப்போக்களில் நின்றுகொண்டிருக்கின்றன.

சென்னைப் பெருநகரில் சிலத் திட்டங்கள் முடிவுக்குவரப் பெற்றும் திறக்கப்படாமல் உள்ளது. இது வேடிக்கையாகவும், மக்கள் நிதியை வீணடித்து அவர்களையே வாட்டி வதைப்பதாகவும் படுகிறது.

இத்திட்டங்களை மாநில முதல்வர் அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் துவக்கிவைக்க வேண்டும். ஆனால், இதுவரையில் இத்திட்டங்கள் துவக்கப்படாமல் காத்திருப்பில் வைத்திருப்பது துக்ளக் சாம்ராஜ்யமாகப் படுகிறது. மக்கள் முதல்வருக்காகத் தான் இந்த காத்திருப்பு என்கிறார்களே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டப்பிரிவில் மக்கள் முதல்வர் என்று ஏதேனும் பதவி இருக்கின்றதா?

இன்றைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகின்ற முதல்வரா என்பதே முதலில் கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் அறையில் அமராமலும், சட்டமன்றத்தில் முதல்வர் இருக்கையில் அமராமலும் ஒரு மாநில முதல்வர் இருப்பது தமிழகமக்கள் வழங்கிய தீர்ப்பையும் இறையாண்மையையும் கேள்விக்குறியாக்குகிறது?

ஜெயலலிதா மக்கள் முதல்வர் என்று அரசியல் அகராதியில் இல்லாததை வைத்துக் கொண்டு கூத்தடிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் படி முறையான செயல் தானா? உப்பைத் தின்றவர் தண்ணீர் குடித்துத் தானே ஆகவேண்டும்?

உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்டும், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயால் ”துர்கா தேவியே” என்றும் அழைக்கப்பட்ட இந்திராகாந்தி 1977ல் கைதுசெய்யப்பட்ட போது, இம்மாதிரி ஆர்ப்பாட்டங்களோ, கைதுக்குப் பின்னர் “மக்கள் பிரதமர்” என்றெல்லாம் அழைக்கப் படவில்லையே?

அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன் “வாட்டர் கேட்” பிரச்சனையில் ஒட்டுக் கேட்ட தவறுக்காக பதவியை இழந்து அமெரிக்க மக்களால் வெறுக்கப்பட வில்லையா?
பங்களாதேஷ் அதிபர் எச்.எம்.எர்ஷாத், மாலத்தீவு அதிபர் முகமது நஷீத் போன்ற அதிகாரத்திலிருந்தவர்கள் எந்த தயவு தாட்சண்யமுமில்லாமல் தண்டனைக்குள்ளானார்களே.
லைபீரியாவில் இனப்படுகொலை செய்த மக்கள் செல்வாக்குபெற்ற சார்லஸ்டெய்லர் இன்றைக்கு லண்டன் சிறையில் வாடுகின்றார்.

பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த இமெல்டா மார்க்கோஸ் கவர்ச்சியான பெண்மணி என அழைக்கப்பட்டவர். மக்கள் வரிப்பணத்தில் விலைமதிப்புமிக்க நகைகளும், பல ஜோடிக் காலணிகளும், விதவிதமான ஆடைகளும் வாங்கிக் குவித்தவர். தான் செய்த ஊழலுக்காக மக்களால் தண்டிக்கப்படுவோம் என்று பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பி ஓட முயற்சி செய்தார்.

நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா தவறு செய்துவிட்டார் என்றும் தன் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திவிட்டார் என்று மண்டேலா அவரை விவாகரத்து செய்யவில்லையா?

பிரெஞ்சுப் புரட்சி ஏன் வந்தது? அந்நாட்டு ராணி மேரி அண்டாய்நட், பசியில் வாடும் பிரெஞ்சு மக்கள் உண்ண ரொட்டி கேட்ட பொழுது, “கேக் சாப்பிடுங்கள்” என்று திமிராகப் பேசியதின் காரணத்தில் தானே பிரெஞ்சுப் புரட்சி எழுந்தது.

இப்படி மக்கள் விரோத நடவடிக்கைகளினால் கொடிகட்டி ஆளவந்த பலரின் நிலையெல்லாம் என்ன ஆனது என்பதை உலக வரலாற்றின் பக்கங்களில் உள்ளன. இவையெல்லாம் சற்று சிந்திக்கப் படவேண்டிய விடயங்கள்.

மக்கள் நலனுக்காகவே மக்கள் நலத்திட்டங்கள். அவை யாருக்காகக் காத்திருக்க வேண்டும்? எதற்காக காத்திருக்க வேண்டும்? மக்களாட்சியில் மக்களின் இறையாண்மையை கேள்விக்குறியாக்குவது பெரும் எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது தான் மக்கள் குரலாக ஒலிக்கும்.

தடியெடுத்தவரெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில் தான் தோன்றித் தனமாக தமிழகத்தில் தற்போது நடக்கின்ற காரியங்களுக்கு, இயற்கையின் நீதி உரிய தண்டணையை நிச்சயம் வழங்கும்.

சட்டத்தின் ஆட்சி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற மகத்தான ஜனநாயகக் கோட்பாடுகளை மீறி எந்த மனிதரும் கிடையாது. இந்த அடிப்படைக்கு ஊறு செய்ய நினைப்பவர்கள் அவர்களே அழிந்துவிடுவார்கள் என்பதை மனதில் கொண்டு அத்துமீறி நடப்பதை இயற்கை பார்த்துக் கொண்டிருக்காது.

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

The Welfare Schemes of Tamil Nadu Government are Pending, Why?.

error: Content is protected !!