பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த எந்த அமைப்பும் இல்லை!- ராமதாஸ்

பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த எந்த அமைப்பும் இல்லை!- ராமதாஸ்

“ஏற்கனவே, பொறியியல் படிப்பை முடித்தவர்கள் வேலை பெறும் திறன் இல்லாமல் மிகக் குறைந்த ஊதியத்தில் , தாங்கள் படித்ததற்கு சம்பந்தமில்லாத வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்வியின் தரம் மேலும் குறைந்தால் அது இளைய தலைமுறையின் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.போதிய கட்டமைப்பு வசதியில்லாத 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை பறிக்க வேண்டும் என வல்லுனர்குழு கூறியுள்ள நிலையில், புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்க அனுமதிக்கும் அதிகாரத்தை நிகர்நிலைப் பல்கலைகளுக்கு வழங்குவது தவறான முன்னுதாரமாகிவிடும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ramadoss 12
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.பி.ஏ. போன்ற மேலாண்மையியல் படிப்புகள் தொழில்நுட்ப கல்வி என்ற வரம்புக்குள் வராது என்று தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, அகில் இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுச் சட்டத்தில் கடந்த 2000ஆவது ஆண்டில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை என்பதால் அக்குழு இனி பொறியியல் கல்லூரிகளுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக செயல்படலாமே ஒழிய ஒழுங்கு படுத்தும் அமைப்பாக இருக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அப்போதிலிருந்தே பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த எந்த அமைப்பும் இல்லாமல் போய்விட்டது.

தொழில்நுட்பக் கல்வி குழுவின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டதால், பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்தும் அதிகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வழங்கி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தான் பொறியியல் கல்வியின் தரத்தையும், பொறியியல் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்தியாவில் 567 பல்கலைக்கழகங்களும், அவற்றுடன் இணைந்த 51 ஆயிரம் கல்லூரிகளும் உள்ளன. அவற்றை ஒழுங்குபடுத்தும் பணியையே திறம்பட செய்ய முடியாமல் பல்கலைக்கழக மானியக் குழு திணறி வரும் நிலையில், மேலும் 13,000 தொழிநுட்ப கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் அதனிடமே ஒப்படைப்பது தொழில்நுட்பக் கல்வியின் சீரழிவுக்கே வழி வகுக்கும்.

பொறியியல் கல்லூரிகளை தமது கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் மூலம் ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழு, தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் இந்த அதிகாரத்தை வழங்க தீர்மானித்திருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டால் தெருவுக்குத் தெரு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு விடும். அது பொறியியல் கல்வியின் தரம் குறையவே வழி வகுக்கும்.

ஏற்கனவே, பொறியியல் படிப்பை முடித்தவர்கள் வேலை பெறும் திறன் இல்லாமல் மிகக் குறைந்த ஊதியத்தில் , தாங்கள் படித்ததற்கு சம்பந்தமில்லாத வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்வியின் தரம் மேலும் குறைந்தால் அது இளைய தலைமுறையின் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.போதிய கட்டமைப்பு வசதியில்லாத 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை பறிக்க வேண்டும் என வல்லுனர்குழு கூறியுள்ள நிலையில், புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்க அனுமதிக்கும் அதிகாரத்தை நிகர்நிலைப் பல்கலைகளுக்கு வழங்குவது தவறான முன்னுதாரமாகிவிடும்.

பொறியியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் திறனும், தகுதியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுக்கு மட்டுமே உண்டு. எனவே, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவுக்கு உரிய அதிகாரம் வழங்க நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே உரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் நாடு முழுவதும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவ – மாணவியரின் எதிர்காலத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!