பி.எப் சேமிப்பிலுள்ள தொகையினை எடுக்கப் போறீங்களா?

பி.எப் சேமிப்பிலுள்ள தொகையினை எடுக்கப் போறீங்களா?

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த தொழிலாளர்களிடம் பி.எப். எனப்படும் சேமநல நிதி பிடிக்கப்படுகிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் தற்போது பி.எப். சந்தா தொகை கணக்கிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை வாங்கப்படாமல் தேங்கி நிற்கும் பி.எப். பணம் ரூ.27 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணை மந்திரி பந்தாரு தத்தாத்ரேயா தெரிவித்திருந்தார்.
pf jun 4
இதனிடையே 5 ஆண்டு காலத்துக்கு குறைவான அளவில் பணிக்காலத்தை நிறைவு செய்து, பி.எப். பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,”இந்திய நிதி சட்டம், 2015 (20-வது 2015)-ல் வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் உள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய பிரிவு 192 ஏ சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவானது ஜூன் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் மூலம், 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிக்காலம் உடைய தொழிலாளியினுடைய வருங்கால வைப்பு நிதி சேமிப்பு தொகையானது ரூ.30 ஆயிரம் மற்றும் அதற்கு கூடுதலாக கணக்கு முடிப்பு பட்டுவாடா செய்யப்படும்போது, வருமான வரியானது குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது.

அதாவது, தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை சமர்ப்பித்திருந்தால், மூலத்தொகையில் இருந்து வருமான வரி பிடித்தமானது 10 சதவீதமாக இருக்கும். அவர் படிவம் எண் 15 ஜி, 15 எச்-ஐ சமர்ப்பித்திருந்தால் வருமான வரியானது மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படமாட்டாது.

தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (மற்றும் படிவம் எண் 15 ஜி, 15 எச்) சமர்ப்பிக்க தவறினால் அதிகபட்ச சதவீத அளவிலான (34.608 சதவீதம்) வருமான வரியானது மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் மூலத்தொகையில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதன் விவரம்:-

* ஒரு பி.எப். கணக்கில் இருந்து மற்றொரு பி.எப். கணக்கிற்கு தொகை மாற்றம் செய்யப்படும்போது.

* உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்படும்போது, வணிக ஒப்பந்தத்தை தொழில் நிறுவனர் இடையில் முறித்துக்கொள்ளும்போது, திட்டம் நிறைவு பெறுதல் மற்றும் தொழிலாளியின் கட்டுக்கு அப்பாற்பட்ட நிலையில் பணி நீக்கம் அடையும்போது.

* தொழிலாளி முந்தைய நிறுவனத்தின் பணிக்காலத்தோடு 5 ஆண்டுகள் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினராக தொடர்ந்து இருந்து பிறகு பி.எப். கணக்கை முடித்துக்கொள்ளும்போது.

* உறுப்பினர் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி புரிந்திருந்து ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவாக பி.எப். பட்டுவாடா பெறும்போது.

* தொழிலாளி 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி புரிந்திருந்து மற்றும் ரூ.30 ஆயிரம் மற்றும் அதற்கு கூடுதலாக பி.எப். பட்டுவாடா பெறும்போது ஆனால் வருமான வரி நிரந்தர கணக்கு எண் மற்றும் படிவம் எண் 15 ஜி, 15 எச்-ஐ சமர்ப்பித்திருந்தால்.

மேற்கூறிய சட்ட மாற்றத்திற்கு உட்பட்ட வகையில் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்கள் தங்களது பி.எப். கணக்கு முடிப்பு படிவம் எண் 19-ஐ சமர்ப்பிக்கும்போது பணி முடிப்பு பற்றியதான சரியான விவரத்தினை மற்றும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) விவரத்தையும் உரிய பகுதியில் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். படிவம் எண் 15 ஜி, 15 எச்-ஐ பி.எப். கணக்கு முடிப்பு படிவ எண் 19 உடன் இணைக்கவும் தவறாதீர்கள்.

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) நிறுவன அலுவலகங்களை அணுகவும். ”என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!