பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் கட்டுப்பாடு!

பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் கட்டுப்பாடு!

சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
political flags
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ‘பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை தடுக்க என்ன செய்யலாம்?’ என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ”பிளாஸ்டிக் கழிவு தொடர்பாக கடந்த 2011–ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிப்படி, 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் உபயோகிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அடையாள எண் கொடுக்கப்படும். அந்த நிறுவனம், தான் தயாரிக்கும் கொடிகள், பேனர்களில் அந்த எண்ணை குறிப்பிடவேண்டும். இந்த எண்ணை குறிப்பிடாமலும், 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாகவும் உள்ள கொடிகள், பேனர்கள் பறிமுதல் செய்யப்படும்.

அதை தயாரித்த நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் முடிந்தபிறகு பயன்படுத்தப்பட்ட கொடிகள், பேனர்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பகுதிவாரியாக சேகரித்து, அவை அறிவியல் பூர்வமாக மறுசுழற்சி செய்யப்படும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்கள்

error: Content is protected !!