நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்.

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்.

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் மரணமடைந்தார். அவருக்கு வயது 55. உறவினர் திருமணத்துக்காக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார் நடிகை ஸ்ரீதேவி. இந்நிலையில் இரவு அவருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட மரணமடைந்தார். திருமணம் முடிந்து மற்ற குடும்பத்தினர் இந்தியா திரும்ப ஸ்ரீதேவி, போனி கபூர் மற்றும் குஷி அங்கேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

1969-ல் துணைவன் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீதேவி. பிறகு 1976-ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்களான கமல், ரஜினியுட்ன் கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு காயத்ரி, கவிக்குயில் ஆகியவற்றுடன் பாரதிராஜாவின் 16 வயதினிலேயில் புகழ்பெற்ற ‘மயில்’ பாத்திரத்துக்கு புகழ் சேர்த்தார். தமிழ் திரை ரசிகர்களின் நீங்காத இடம்பிடித்தவர் ஸ்ரீதேவி, மூன்றாம் பிறை திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற ஒரு விஷயமாகும். பாலிவுட்டில் 1978-ம் ஆண்டு சொல்வா சவன் அறிமுகப் படமாகும். ஆனால் இதற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிதேந்திராவின் ஹிம்மத்வாலா மூலம் வணிக ரீதியான வெற்றி இவருக்குக் கிடைத்தது. இவர் தனது அபாரமான பன்முக நடிப்புத் திறனால் இந்தித் திரையுலகிலும் பெரிய அளவுக்கு வலம் வந்தார்.

கமல், ரஜினி, சிவாஜி உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி, எம்ஜிஆருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் கலக்கியவர் ஸ்ரீதேவி. 2012-ல் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மீண்டும் தனது திறமையை நிரூபித்தவர், கடைசியாக மாம் என்ற திரைப்படத்திலும் கலக்கினார் ஸ்ரீதேவி.

இந்நிலையில் இவரது மறைவு திரையுலகை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் மறைவையொட்டி தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்

குடியரசுத் தலைவர், ராம்நாத் கோவிந்த்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை இவரது மரணம் நொறுக்கிவிட்டது. மூன்றாம் பிறை, லாம்ஹே, இங்கிலீஷ் விங்க்லீஷ் ஆகிய படங்களில் இவரது நடிப்பு மற்ற நடிகைகளுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நம்ப முடியாத திறமைகளை தன்னுள்ளே கொண்டவர். அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

புகழ்பெற்ற திரைப்பட நடிகை திருமதி ஸ்ரீதேவி அவர்கள் நேற்று இரவு (24.2.2018) துபாயில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே ஒரு பேரிழப்பாகும். ஸ்ரீதேவி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்

மிகச் சிறந்த மூத்த நடிகையான ஸ்ரீதேவியின் மறைவு துரதிஷ்டவசமானது. நடிகை ஸ்ரீதேவியின் துரதிஷ்டமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது வாழ்வும், உதாரணமாகத் திகழும் திரை வாழ்வும் பலதலைமுறைகளைக் கடந்து பலரையும் ஈர்த்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நடிகை ஸ்ரீதேவி அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை, தமிழக பாஜக தலைவர்

தென் தமிழகத்தில் தேசிய குடும்பத்தில் பிறந்து தனது நடிப்பு திறமையால் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு எனது அஞ்சலி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் சினிமா துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்திய சினிமா உலகிற்கு இது மிகப்பெரிய பேரிழப்பு.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்

தமிழ்த் திரையுலகிலும் இந்தி திரை உலகிலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து தன் ஒப்பற்ற நடிப்பாற்றலால் திரையுலகில் புகழ்கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி அவர்கள். பத்மஸ்ரீ விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். பலகோடி ரசிகர்களை பெற்றவர். அவரது திடீர் மறைவை நம்பமுடியவில்லை. மிகவும் துரதிஷ்டவசமானது, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. தமிழகத்திற்கு புகழும் பெருமையும் சேர்த்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரை உலகினர், ரசிகர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர்

நடிகை ஸ்ரீதேவி அவர்கள் துபாயில் திடீர் என மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர்கள் திரையுலகில் சிறுவயது முதல் எத்தனையோ கதாபாத்திரத்தில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அவரது இழப்பு திரையுலகிற்கு மிகப்பெரிய ஈடுசெய்யமுடியாத ஒரு இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 

ரஜினி காந்த்

அதிர்ச்சியும் மன உளைச்சலுக்கும் ஆளானேன். நல்ல தோழியை இழந்து விட்டேன். திரைத் துறை ஆகச் சிறந்த ஒருவரை இழந்திருக்கிறது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினரைப் போல மிகவும் மன வேதனை அடைகிறேன்.

கமல்ஹாசன்

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்.

பாரதிராஜா

ஸ்ரீதேவி இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரின் சிரிப்பு நம் கண்ணை விட்டு மறையவில்லை. தெற்கில் இருந்து இந்திக்கு சென்ற நடிகைகளில் மிகச்சிறப்பான வெற்றி பெற்றவர் ஸ்ரீதேவி.

error: Content is protected !!