நகைக்கடைகள் இன்று முதல் 3 நாட்கள் அடைப்பு!

நகைக்கடைகள் இன்று முதல் 3 நாட்கள் அடைப்பு!

2016-2017-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிமந்திரி அருண் ஜெட்லி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், வெள்ளி நீங்கலான தங்கநகை உள்பட பிறவகை ஆபரணங்களுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்பு தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள், கைவினை கலைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்க நகை நிறுவனங்கள் இன்று(புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கடைகளை அடைப்பதாக அறிவித்து இருக்கின்றன.
gokd
இது குறித்து, சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி நிருபர் களிடம், “உற்பத்தி செய்யப்படும் தங்கத்தின் மீது ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் டில் நிதிமந்திரி அறிவித்து இருக்கிறார். இந்த வரி விதிக்கப்படுவதால், நகை வாங்கும் நுகர்வோருக்கு, ஒரு சவரனுக்கு ரூ.250 கூடுதலாக சுமை ஏற்படும்.

மேலும், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதற்குரிய ஆவணங்களை சரியாக பராமரிக்கவேண்டும். ஏற்கனவே உள்ள வேலைப்பளுவில் மிக அதிகமான சுமையாக இது அமையும். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகை சார்ந்த தொழிற்கூடங்கள், கைவினை கலைஞர்கள் இன்று(புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கடைகளை அடைத்து, கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருக்கிறோம்.இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான நகைக்கடைகள் அடைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 35 ஆயிரம் நகைக்கடைகள் மற்றும் அதனை சார்ந்த 12 லட்சம் தொழிலாளர்கள் இந்த கடை அடைப்பில் பங்கேற்க உள்ளனர். இதனால், அரசுக்கு ரூ.1,000 கோடி வர்த்தக மற்றும் வருவாய் இழப்பு ஏற்படும். இதை ஒரு அடையாள போராட்டமாக தான் செய்கிறோம். தங்க நகைகளுக்கு கலால் வரி ஒரு சதவீதம் விதிப்பதைவிட, தங்கம் இறக்குமதியில் ஒரு சதவீதத்தை ஏற்றி இருக்கலாம்.

ஏற்கனவே தங்கம் இறக்குமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு சதவீதத்தை அதில் ஏற்றி எங்களிடம் இருந்து மத்திய அரசு பெற்றிருக்கலாம். ஆனால் கலால் வரி மூலம் அதை பெறுவதை ஏற்க முடியாது. கலால் வரி சட்டம் மிக கடுமையான சட்டம். இதை சாதாரண தொழில் செய்யும் நிறுவனங்கள் மீது திணிப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக மத்திய அரசு இதை திரும்ப பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதே போல், தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்ட ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்யவும், ரூ.2 லட்சத்துக்கும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு நகை வாங்கும்போது, பான்கார்டு கட்டாயம் என்பதை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரி அனைத்து மாநிலங்களிலும் தங்க நகை நிறுவனங்கள் கடை அடைப்பில் ஈடுபடும் என்று அகில இந்திய ரத்தினக்கல் மற்றும் தங்கநகை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

error: Content is protected !!