தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாச்சு!- அது சரி.. அப்படீன்னா என்னா?

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாச்சு!- அது சரி.. அப்படீன்னா என்னா?

டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று பிற்பகல் 3 மணிக்கு சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை யில் நிருபர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிகளை வெளியிட்டார். அதன்படி..சென்னையில் உள்ள ‘அம்மா’ உணவகங் களின் பெயர் பலகையில் உள்ள ஜெயலலிதா உருவப்படத்தை மறைக்கும் பணியிலும், அரசியல் கட்சியினர் சாலையில் ஆங்காங்கே வைத்துள்ள பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை அப்புறப்படுத்தும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக ஈடுபட தொடங்கினர்.அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை சுண்ணாம்பு கொண்டு அழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒரு சில தினங்களில் இந்த பணிகள் அனைத்தும் முழுமையடையும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

*வாக்குறுதிகளோ, புதிய திட்டங்களோ, புதிய திட்டங்களுக்கான நிதிகள் ஒதுக்கீடோ செய்யக் கூடாது.

அமைச்சர்களோ அல்லது அரசியல்வாதிகளோ புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவோ, தொடக்க விழாக்களில் பங்கேற்கவோ கூடாது.

அரசுத் துறையைச் சேர்ந்தவர்களோ அல்லது அரசியல்வாதிகளோ சாலை அமைத்துத் தருவது குறித்தோ, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தருவதாகவோ எந்த வாக்குறுதிகளையும் அளிக்கக் கூடாது.

அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் புதிதாக எந்த நியமனங்களையும் செய்யக் கூடாது. பணியில் உள்ளவர்களுக்கும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது.

ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியினை நோக்கி, வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அமையும் என்பதால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் தேர்தல் பணிகளுடன் இணைத்து தங்களது அலுவல் பணிகள் மேற்கொள்ளக் கூடாது.

தேர்தல் பணிகளில் அரசு இயந்திரத்தையோ, தங்களுக்குச் சாதகமாக அரசுப் பணியாளர்களையோ அமைச்சர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.

பணம், பரிசு பொருள்கள் கொடுத்து வாக்காளர்களைக் கவரும் சட்ட விரோதச் செயல்களைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பறக்கும் படைகள், கண்காணிப்புப் படைகள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள், வரவு-செலவுகளைக் கண்காணிக்கும் குழுக்கள் போன்றவை உடனடியாக உருவாக்கப்படும்.

வாக்காளர்களைக் கவரும் வகையில், வேட்பாளருக்குச் சாதகமாக வாக்களிக்க பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதும், ஆள்பலத்தைப் பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றச்செயலாகும். மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும் கடும் குற்றத்துக்கு உரியது. எனவே, பொது மக்கள் அதிக பணத்தையோ, நகை போன்ற விலை உயர்ந்த பொருள்களையோ எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். தகுந்த ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்ய நேரிடலாம்.

விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள்: நகரங்களில் பொது, தனியார் இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்படும் விளம்பரங்கள் உடனடியாக அகற்றப்படும்.

கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள், அரசு கட்டடங்கள் போன்றவற்றில் விளம்பரங்கள் செய்யக் கூடாது. அதேசமயம், தனியார் சுவர்கள், கட்டடங்களில் விளம்பரம் செய்யும் போது சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளரிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்று இருக்க வேண்டும். இந்த ஒப்புதல் கடிதம் தேர்தல் நடத்தும் அதிகாரியால் பாதுகாத்து வைக்கப்படும்.

தேர்தல் பிரசாரம் செய்யும்போது, கொடிகள்-பேனர்கள் ஆகியன பிறருக்கு எந்தவகையிலும் தொந்தரவாக இருக்கக் கூடாது

வெவ்வேறு ஜாதிகள், சமயம், மொழி, சமுதாயத்தினருக்கு இடையே இப்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்துகின்ற அல்லது பரஸ்பரம் வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்ற அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

வாக்குகளைப் பெறுவதற்காக ஜாதி, சமுதாய உணர்வுகளின் அடிப்படையில் வேண்டுகோள் விடுக்கக் கூடாது. மசூதிகள், தேவாலயங்கள்,
திருக்கோயில்கள், பிற வழிபாட்டு இடங்களைப் பிரசாரம் செய்வதற்கான இடங்களாகப் பயன்படுத்தக் கூடாது.

கூட்டங்கள்: அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ள இடம், நேரம் குறித்து உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். கூட்டம் தொடர்பாக ஒலிபெருக்கியோ அல்லது வேறு வசதிகளுக்கான அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டி இருந்தால், முன்னதாகவே விண்ணப்பித்து அதனைப் பெற வேண்டும்.

விளம்பரக் கொடிகளோ அல்லது பேனர்களோ பிறருக்கு தொந்தரவாக அமையக் கூடாது. அரசுக்குச் சொந்தமான ஓய்வு இல்லங்கள், பயணிகள் தங்குமிடங்கள், அரசுக்குச் சொந்தமான ஏனைய தங்கும் இடங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பாகுபாடு இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

அதேசமயம், அந்த இடங்களைப் பிரசாரம் செய்யும் நோக்கத்துக்காகவோ அல்லது பிரசார அலுவலகங்களாகவோ மாற்றி பயன்படுத்தக் கூடாது

error: Content is protected !!