திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !

திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம் !

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில், அதிலும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாட வீதிகளில் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கடந்த 14ந் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது. 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்தன. கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் ஏற்றபடுகிறது.
nov 17 - deepam
மகாதீபம் ஏற்றபடுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கபட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை செய்யபட்டது. அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றபட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்க்கப்பட்டு அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டுவரபட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக காட்டப்பட்டது. அப்போது பக்திகோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின் பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றபட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லபட்டு அங்கு தீபம் ஏற்றபட்டது.மாலையில மகாதீபம் ஏற்றுவதை முன்னிட்டு கோவிலில் சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றபடும். முன்னதாக பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வார்கள் அதை தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடி கோவில் கொடிமரம் முன்பு பக்தர்களுக்கு காட்சி தருவார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக 6 மணிக்கு அகண்ட தீபம் ஏற்றபடும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றபடும். அப்போது கோவிலில் உள்ள பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோ கரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள்.மகா தீபம் ஏற்றுவதற்காக சுமார் 200 கிலோ எடை, 5 அடி உயரம் கொண்ட கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று அதிகாலையே மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பிரகாசிக்கும்.
கிரிவல பாதையில் 14 கிலோ மீட்டர் முழுவதும் நிறைந்து வழியும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை நகர் சுற்றுபுற கிராமங்களில் விளக்கேற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள்.

மேலும் மகாதீபம் ஏற்றிய பிறகே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின்விளக்கு போடுவார்கள். வீடுகள் மட்டுமின்றி தெருக்களிலும் பொதுமக்கள் அகல் விளக்கு ஏற்றுவதால் திருவண்ணாமலை நகர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும்.

கோவிலில் வாண வேடிக்கைகள் விண்ணில் கோலாகலமாக காட்சியளிக்கும். இன்று மகாதீபம் ஏற்றபடுவதை தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கி விட்டனர்.

மழை, கடுங்குளிர் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவண்ணாமலை நகரம், கிரிவலபாதை, மாடவீதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் நிரம்பி வழிகின்றன.

மகாதீபம் காண 20 லட்சத்துக்கும். அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யபட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!