தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச்செல்வன் நீக்கம்!

தமிழக அமைச்சரவையிலிருந்து  வைகைச்செல்வன் நீக்கம்!

தமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இத்துடன் சேர்த்து தமிழக அமைச்சரவையை பத்தாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா மாற்றி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் இன்று நடைபெற உள்ள, நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில்கூட அவர் கலந்துகொள்வார் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் விழா தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதை கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்..
sep 5 - vagai selvan
அவருக்குப் பதில், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வித் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன் அமைச்சரவை மாற்றத்தின்போது, சேர்க்கப்பட்ட அமைச்சர்களில் குறிப்பிடத்தக்கவரான வைகைசெல்வன் மீது ஏராளமான புகார்கள் வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வைகைச் செல்வனை முதல்வர் ஜெயலலிதா அழைத்து எச்சரித்திருந்ததாக கூறப்பட்டது. மேலும் இவரது நீக்கத்திற்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சபீதாவுடன் ஏற்பட்ட மோதலே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் பள்ளிக்கல்வித் துறையின் 7 இயக்குனர்கள் மாற்றப்பட்ட விவகாரத்திலேயே இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தனக்குள்ள நெருக்கமான செல்வாக்கை பயன்படுத்தி வைகைச் செல்வனுக்கு எதிராக சபீதா புகார் கூறியதாகவும், இதனைத் தொடர்ந்தே இந்த பதவி பறிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.

error: Content is protected !!