ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் – ஜெயலலிதா தகவல்

ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் – ஜெயலலிதா தகவல்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் 175 பேர் பலியாகியுள்ள நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்துக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.5 கோடி நிதி உதவி அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
jaya sep 8
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவால் பெருமளவு உயிர்ச் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.இந்திய அரசு, காஷ்மீர் இயற்கை பேரிடரை தேசிய பேரிடர் நிலையாக அறிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் 15,000 மக்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இருப்பினும் நிறைய பேர் பலியாகியுள்ளனர். இயற்கை பேரிடரில் தங்கள் உறவுகளை இழந்த ஜம்மு -காஷ்மீர் மக்களுக்கு தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மழை – வெள்ளம் மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ள நிலையில் மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குவது, அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்து தருவது என ஜம்மு – காஷ்மீர் மாநில அரசு முன் மிகப்பெரிய சவால் உள்ளது.

வெள்ளம் வடிந்த பின்னர் சிதிலிமடைந்த பகுதிகளை மறுசீரமைக்க வேண்டியிருக்கும். இத்தகைய சூழலில் ஜம்மு – காஷ்மீர் மாநில அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், துயரத்தை பங்கிட்டு கொள்ளும் வகையிலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி உடனடியாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதவிர, ஜம்மு – காஷ்மீர் அரசு கோரினால் வேறு எந்தவிதமான உதவியையும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!