கோர்ட் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச். ராஜா மீது 8 வழக்கு!

கோர்ட் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச். ராஜா மீது 8 வழக்கு!

கோர்ட் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுதல், நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலங்களை இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து நடத்தி வருகிறது பாஜக. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகிலுள்ள மெய்யபுரம் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அதனால் இந்த வருடம் இங்கே ஊர்வலம் நடத்தி அதன் மூலம் ஒரு கவன ஈர்ப்பு பெறலாம் என்று அப்பகுதி பாஜகவினர் மூலம் ஹெச்.ராஜாவுக்குத் தகவல் சென்றது. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் ஊர் என்பதால் ராஜாவும் வருவதற்குச் சம்மதித்தார். விநாயகர் ஊர்வலத்தை மெய்யபுரத்தில் உள்ள சர்ச் வழியாகத்தான் நடத்துவோம் என்பதுதான் பாஜகவினரின் கோரிக்கை. ஆனால், அந்த வழியாகச் சென்றால் தேவையற்ற அசம்பாவிதம் நடைபெறும் என்பதால் போலீஸார் அனுமதிக்காமல் மாற்று வழியில் அனுமதிப்போம் என்றனர். மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்குவதற்கு மேடை அமைக்கவும் அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில்தான் நேற்று மாலை நான்கு மணிக்கு திருமயம் வந்த ஹெச்.ராஜா, அங்குள்ள இந்து முன்னணி, பாஜகவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கி வைப்பதற்காக மெய்யபுரம் வந்தார்.

அப்போது அவரிடம் இன்ஸ்பெக்டர் மனோகரன், டிஎஸ்பி தமிழ்மாறன் ஆகியோர், “அண்ணாச்சி மேடை அமைக்க அனுமதி இல்லை. அதனால் இங்கே பேச வேண்டாம்’’ என்றனர். அதைக் கேட்டுப் பொங்கிவிட்டார் ஹெச்.ராஜா.

“இந்துன்னா கேவலமா… என்னை பேச விட மாட்டீங்களா? டிஜிபி வீட்லயே ரெய்டு நடக்குது. உங்களுக்கெல்லாம் வெட்கம் இருந்தா அன்னிக்கே வேலையை விட்டுப் போயிருக்கணும். இன்ஸ்பெக்டர் மனோகரன் அந்த பாதிரியார்கிட்ட லஞ்சம் வாங்குறார்னு ஊரே சொல்றது. என்னைக் கேளுய்யா நான் தர்றேன் லஞ்சம்” என்று வரம்பை மீ|றி பேச, காவல் துறையினர் அமைதி காத்தனர்.

“அண்ணாச்சி, தவறான வார்த்தைகளைப் பேசறீங்க அண்ணாச்சி… நாங்க ஹை கோர்ட் கைடுலைன்ஸ்படிதான் செய்யுறோம்” என போலீஸார் சொன்னதும், “ஹை கோர்ட்டாவது…” என்று மீண்டும் தன் தாக்குதலைத் தொடர்ந்தார் ஹெச்.ராஜா. ஒருகட்டத்துக்கு மேல் போலீஸ் உத்தரவை மீறி சர்ச் வழியாகவே விநாயகர் ஊர்வலத்தை நடத்தி முடித்துவிட்டுதான் புறப்பட்டார் ஹெச்.ராஜா. உயர் நீதிமன்றத்தையும் காவல் துறையையும் கடுமையாக விமர்சித்து, தடையை மீறி ஊர்வலம் சென்ற ஹெச்.ராஜா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பலத் தரப்பிலும் எதிர்ப்பு வந்த நிலையில் திருமயம் இன்ஸ்பெக்டர் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்.சிஆர். எண் 114/18 எண்ணுள்ள அந்த ஆவணத்தில் 143, 188, 153(A), 290 , 294 (b), 353, 505 (1)(b)(c) & 506 (I) IPC ஆகிய பிரிவுகளில் ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்- தடையை மீறுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அசிங்கமாக பேசுதல், சட்ட விரோத மிரட்டல், அவமதிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!