காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 1

காமன்வெல்த் மாநாடும்  இந்தியாவும் – 1

இந்தியா 1947 ஆகஸ்டு 15இல் விடுதலை பெற்றது. அரசமைப்புப் பேரவை 1946 டிசம்பரில் தொடங்கி, 1950 டிசம்பர் 26இல் அரசமைப்புச் சட்டத்தைத் தந்தது. அதுவரை, சட்டப்படி, ஆங்கில ஏகாதிபத்தியக் காமன்வெல்த்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாகத்தான் இந்தியா இருந்தது.1949 ஏப்ரல் 27இல் லண்டனில் கூடிய காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஜவாஹர்லால் நேரு சுதந்திர இந்தியா காமன்வெல்த் அமைப்பில் சேருவது குறித்து சில வரைமுறைகளை வற்புறுத்தினார்.
nov 18 Flag-map_of_India_(Commonwealth_mini
லண்டன் காமல்வெல்த் பிரதமர்கள் மாநாடு முடிவடைந்ததும், இந்தியாவில் நேரு வெளியிட்ட கருத்துகளுக்கு பொதுவான ஆதரவு இருந்தாலும் சில கருத்து வேறுபாடுகளும் எழுப்பப்பட்டன. அதற்கு பிரதமர் நேரு 1949 மே 10 அன்று வானொலியில் விளக்கம் தந்தார். “”ஒன்றை நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். நாட்டின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில், எத்தகைய ரகசிய உடன்பாட்டையும் நாம் செய்துகொள்ளமாட்டோம். நமது வெளிநாட்டுக் கொள்கையின் மூலம், அடக்கப்பட்ட தேசிய மக்கள், ஒடுக்கப்பட்ட இனங்கள் ஆகியோருக்கு உரிய அடிப்படை மனித உரிமைகளைத் தரவும் பாதுகாக்கவும் தக்க நடவடிக்கைகளை எடுப்போம்.காமன்வெல்த் அமைப்பில் பல நாடுகள் இருந்தாலும், நமது நாட்டின் சுதந்திர நிலைமைக்கு அதனால் பாதிப்பு ஏற்பட அனுமதிக்கமாட்டோம். தேவைப்பட்டால் எந்த நாடும் காமன்வெல்த் அமைப்பைவிட்டு வெளியேறலாம். காமன்வெல்த் என்பது ஒரு அமைப்பு – ஆனால் எந்த ஒரு நாட்டையும்விட அது சூப்பர் ஸ்டேட் அல்ல” என்பதுதான் பிரதமர் நேருவின் வானொலி உரையின் சாராம்சம்.

அரசமைப்புப் பேரவையின் 1949 மே 17 ஆம் நாள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை பிரதமர் நேரு முன்மொழிந்து, இவ்வாறு குறிப்பிட்டார்: “விடுதலை பெற்ற இந்தியா காமன்வெல்த் அமைப்பில் சேர்வதால் தனக்குள்ள சுதந்திரம், தன்னாட்சி முறை, ஜனநாயக ஆட்சி ஆகிய எதையும் இழந்து விடாது. இங்கிலாந்து காமன்வெல்த் நாடுகள் என்பது மாற்றம் அடைந்து, காமன்வெல்த் நாடுகள் என்ற அளவில் மட்டும் எதிர்காலத்தில் இருக்கும். இங்கிலாந்து மன்னர் தலைமையில் காமன்வெல்த் அமைப்பு இருந்தாலும், விடுதலை பெற்ற இந்தியா எத்தகைய முடிமன்னர் ஆட்சியின் கீழும் வராது. மேலும் எந்த வகையிலும் வெளிநாட்டு அதிகாரத்துக்குக் கட்டுப்படாமல் இந்தியாவின் ஆட்சிமுறை வளரும்’.

1949 மே 16 மற்றும் 17 தேதிகளில் இந்தியாவின் அரசமைப்புப் பேரவையில், காமன்வெல்த் அவையில் இந்தியா இருப்பதற்கான ஏற்பாடு பற்றி பிரதமர் ஜவாஹர்லால் நேரு முன்வைத்த தீர்மானம் நிறைவேறியது.ஆக காமன்வெல்த் அமைப்பில் இருக்க இந்தியா முடிவு செய்தது என்பது வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்று. அது அரசமைப்புப் பேரவையினால் ஆமோதிக்கப்பட்டதும்கூட.

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரின் அருகில் உள்ள ஷார்ப்வில்லே என்ற ஊரில், 1960 மார்ச் 21 அன்று தென்னாப்பிரிக்க வெள்ளையர் ஆட்சியின் போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தால் நிராயுதபாணிகளாக இருந்த 69 கருப்பு ஆப்பிரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணம் தாம் பிறந்த நாட்டில் தமது இச்சைப்படி கருப்பர்கள் ஊர்விட்டு ஊர் செல்வதை தென்னாப்பிரிக்க வெள்ளையர் அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முற்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த கருப்பர்களை அடக்க தென்னாப்பிரிக்க அரசாங்கம் துப்பாக்கி பிரயோகம் செய்தது.

ஷார்ப்வில்லே ஊரில் நடைபெற்ற துப்பாக்கி அடக்குமுறைக்கு மறுநாள் கேப்டவுன் நகரின் அருகில் லங்கா என்ற ஊரில் கருப்பு மக்கள் மீது போலீசாரின் துப்பாக்கி வேட்டை நடைபெற்றது.

மார்ச் 21, 22 தேதிகளில் தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியில் வெடித்த துப்பாக்கி குண்டுகளின் எதிரொலி இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கேட்டது. தென்னாப்பிரிக்காவில் ஷார்ப்வில்லே, லங்கா இடங்களில் பெரும் அளவில் ஆப்பிரிக்கக் கருப்பர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து மக்களவையில் 1960 மார்ச் 8இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பேசியதாவது: “ஆப்பிரிக்காவின் ஷார்ப்வில்லே ஊரில் நடைபெற்ற கோரசம்பவம் வரலாற்றுப் போக்கை மாற்றுவதாகும். இது இந்தியாவில் ஜாலியன்வாலாபாக்கில் 41 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேய ஆட்சி நடத்திய படுகொலைகளை நினைவூட்டுகிறது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, அதைவிட அதிகமாக எதேச்சதிகாரத்தின் ஆதிக்கம், இன அடிப்படையில் நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை தாழ்ந்த குடியினர் என ஒதுக்கிவைப்பது ஆகியவை. நாளடைவில் நிலைமை பெருமளவுக்கு மாறக்கூடும்’.

இந்தியப் பிரதிநிதி சி.எஸ்.ஜா ஏப்ரல் 1 இல் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பேசும் பொழுது, அடிப்படை மனித உரிமைகளை அழிக்கும் தென்னாப்பிரிக்காவின் நடவடிக்கைகளை நேரடியாகக் கட்டுப்படுத்த ஐ.நா. பாதுகாப்புச் சபை முன்வரவேண்டும். அப்படிச் செய்வதுதான் மனித குலத்துக்கு ஐ.நா. செய்யவேண்டிய முதல் கடமை ஆகும் என்றார். இவ்வளவுக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. இருப்பினும் 29 ஆப்பிரிக்க-ஆசிய நாடுகளின் வேண்டுகோள்களின்படி, இந்தியப் பிரதிநிதி அங்கு பேச அனுமதிக்கப்பட்டார்.

பல நாடுகளில் எதிர்பாராத அநீதிகள் அக்கிரமச் செயல்பாடுகள் நிகழ்கின்றன, அவை உள்நாட்டுப்பிரச்னைகள் என அங்கு ஒதுக்கப்பட்டாலும், இந்திய மக்களின் உணர்வுகளை, கருத்தோட்டங்களை நமது நாடாளுமன்றம் பிரதிபலிக்கவேண்டும். அந்த அடிப்படையில்தான், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி இந்த அவையில் தீர்மானமும் விவாதமும் வந்தன.

தென்னாப்பிரிக்காவில், நிற-இன பேதத்தின் அடிப்படையில் நடைபெற்ற கொடுமைகளை இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பேசியது மட்டுமல்ல, அதைவிட வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை அவர் செய்தார்.

1961 மார்ச் மாதத்தில் லண்டனில் காமன்வெல்த் பிரதமர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள தென்னாப்பிரிக்காவின் பிரதமர் ஹெச். எப்.வெர்வோர்ட் வந்திருந்தார். அவர் வந்ததற்குக் காரணம், பொது வாக்கெடுப்பின்மூலம், தென்னாப்பிரிக்கா ஒரு குடியரசு நாடாக மாறியது. அந்த வகையில் வேண்டுகோளைத் தந்து காமன்வெல்த் அவையில் சேர்ந்திட அவர் வந்திருந்தார்.

நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை இன அடிப்படையில் ஒதுக்கிவைக்கும் அநீதியான முறை வெளிப்படையாக தென்னாப்பிரிக்க அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதால், அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் சேர்ப்பதற்கு ஆப்பிரிக்க நாட்டுப் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியாவின் ஜவாஹர்லால் நேரு, மலேசியாவின் துங்கு அப்துல் ரஹிமான் போன்றவர்களும் தென்னாப்பிரிக்காவின் வேண்டுகோளை எதிர்த்தனர். தென்னாப்பிரிக்கா தொடர்ந்து காமன்வெல்த் அமைப்பில் நீடித்து இருக்கலாம் என்பதற்கு ஆதரவாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ரொடீசியா, ஆகிய நாடுகள் இருந்தன. ஆயினும், கனடா பிரதமர் ஜான் டீபன்பேக்கர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இருந்தார். தமக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த தென்னாப்பிரிக்கா பிரதமர் தனது வேண்டுகோளை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

1961 லண்டன் காமன்வெல்த் மாநாட்டிற்குப் பிறகு அந்த மாநாட்டு முடிவுகள் பற்றி நாடாளுமன்றத்தில் 1960 மார்ச் 27 அன்று வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு இறுதியாகக் கூறினார்:

“இந்த முடிவுகள் தனிப்பட்டு தென்னாப்பிரிக்கா பற்றி மட்டும் ஏற்பட்டவை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த நிகழ்ச்சிகள் ஆப்பிரிக்கா கண்டத்தின் நாடுகள் அனைத்தையும், நம்மையும் சேர்த்து உலகில் அனைவரையும் பாதிப்பதாகும். ஐ.நா. சபையில் இணைந்துள்ள எந்த நாடாவது தனது அரசாங்க அதிகாரத்தை வைத்து இன வேறுபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முற்பட்டால், அது காலத்துக்கு ஒவ்வாத ஒன்றாகிவிட்டது என்றாகும். மேலும் அது ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட குறிக்கோள் மற்றும் பிரகடனத்துக்கும் விரோதமான செயல்பாடாகும்.

1947-64 வரை தொடர்ந்து சுதந்திர இந்தியாவின் முதல் 17 ஆண்டு காலத்தில் வெளியுறவுத் துறைக்கும் தலைமை வகித்து பிரதமர் ஜவாஹர்லால் நேரு கடைப்பிடித்த வெளிநாட்டுக் கொள்கை, நேர்மையாக, உறுதியாக இந்தியாவைப் பெருமைப்பட வைத்தது. இந்திய ஜனநாயகத்தின் பொற்காலம் அது.

இரா. செழியன்

Related Posts

error: Content is protected !!