முதியவர்களைக் கொல்லும் ‘தலைக்கூத்தல்’ சடங்கு இப்போதும் நடக்குது! – சர்வே ஷாக் ரிசல்ட் !

முதியவர்களைக் கொல்லும் ‘தலைக்கூத்தல்’ சடங்கு இப்போதும் நடக்குது! – சர்வே ஷாக் ரிசல்ட் !

வெகு காலமாக உடல் நலம் படு மோசமாக பாதிக்கப்பட்டு, குணமாக்கவே வழியில்லாத நோயாளிகளை குறிப்பாக வயதானவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது போன்ற ‘மிதமான கருணைக் கொலை’யை அனுமதிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன; இதை மத்திய அரசு சட்டமாக்கினால், கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கிய வெகு சில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்று இன்றளவும் எதிர்பார்க்கப்படுகிறது .
edut feb 20
அதாவது உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் நீண்ட காலமாக ஒரு நோயாளி உயிர் வாழும் சூழலில், அந்த சாதனங்களை அகற்றுவதன் மூலம், மிதமான கருணைக் கொலை நிகழ்த்தப்படலாம். சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு,’டயாலிசிஸ்’ இயந்திர உதவியுடன் மட்டுமே, ஒரு நோயாளி உயிர் வாழ்ந்தால், அந்த இயந்திர செயல்பாட்டை நிறுத்துவதன் மூலம், நோயாளி, உயிர் இழக்க அனுமதிக்கலாம். மற்றொரு வகையாக பலப் பிரயோகமாக கருணைக் கொலை நிகழ்த்தப் படுகிறது.இம்முறையில்,உயிர் கொல்லும் சாதனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு உயிரை பறிப்பது, கிரிமினல் செயலாக கருதப்படுகிறது. அதேசமயம், மிதமான கருணைக் கொலை பல நாடுகளில், கிரிமினல் குற்றமாக கருதப்படவில்லை.நோயாளியின் சம்மதத்துடன் நிகழ்த்தப்படுவது, தன்னிச்சை கருணைக்கொலையாக வகைப்படுத்தப்படும். பெல்ஜியம், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்த நடைமுறை அமலில் உள்ளது. நோயாளிக்கு சுய உணர்வு இல்லாதபோது, அவர் குடும்பத்தை சேர்ந்த மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களின் சம்மதத்துடன் நிகழ்த்தப்படும் கருணைக் கொலையை அல்பேனியா நாடு அனுமதித்துள்ளது.

இதனிடையேதான் ‘தலைக்கூத்தல்’ என்ற சடங்கு செய்து நோயுற்ற முதியோர்களை சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்யும் ஈவு இரக்கமற்ற கொலை பாதகச் செயல் ‘கருணைக்கொலை’ என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நவீன காலக்கட்டத்தில் பெற்றோர்களைக் கவனிப்பதில்லை, முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன எல்லாம் மேற்கத்திய வாழ்வியல் முறைகளால் வந்த கேடு என வாய்கூசாமல் பேசி வருகின்றோம். ஆனால் அதைவிட நம் சமூகத்தில் இருந்து வருகின்ற கேவலமான ஒரு வழக்கம் தான் இது. பாமரர்கள் நாட்டுப்புறங்களில் வாழ்கின்ற வசதியில்லாதோர் மத்தியில் மட்டுமின்றி கல்வியறிவு மிக்கவர்கள், வசதிபடைத்தோர் மத்தியில் ஏன் நகர்ப்புறங்களில் கூட இப்பழக்கம் இருந்து வருவது தான் வேதனையான ஒன்று.

இதன்படி வயதானவர்களுக்குச் சம்பவ நாளன்று காலையிலேயே விளக்கெண்ணெய் தேய்த்து குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களுக்குத் தொடர்ந்து இளநீராகக் குடிக்கக் கொடுப்பார்கள். இளநீரோடு சில சமயம் கழி மண்ணெய்யும் கரைத்துக் கொடுப்பார்கள். சில சமயங்களில் விஷ ஊசி கூடப் போட்டுவிடுவார்கள். சிலருக்கு குளிர்ந்த பாலை வாயில் ஊற்றிக் கொண்டே மூக்கைப் பொத்திவிடுவார்கள். இவ்வாறு நினைத்துக் கூடப் பார்க்க முடியாத வகையில் வயது முதிர்ந்தவர்களைக் கொலை செய்கின்ற பழக்கத்துக்குப் பேர் தான் தலைக்கூத்தல்.

இதற்கு முக்கியமான காரணங்கள் முதியோரை வைத்து பராமறிக்க மனமில்லாமல் இருப்பது தான். பல குடும்பங் களில் மருமகள்கள் மாமனார், மாமியார்களைக் கவனிக்க விரும்புவதில்லை. அவர்களைப் பாராமாகப் பார்க்கின் றனர். பல குடும்பங்களில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் வேலைக்குப் போவதால் பிள்ளைகளே முதி யோரை பராமறிக்க விரும்புவதில்லை. மேலும் பல சந்தர்ப்பங்களில் வீட்டுத் தலைவர்களாகவும், சொத்துக் களுக்கு உரிமையாளர்களாகவும் இருக்கின்ற முதியோரைக் கொல்வதன் மூலம் சொத்துக்களை அடையலாம் எனவும் கருதுகின்றனர்.

தலைக்கூத்தல் முறையில் அதிகம் கொல்லப்படுவது ஆண்கள் தான். ஏனெனில் சொத்துக்கள் பலவும் அவர்கள் பெயரில் தானே இருக்கின்றது. சொத்துக்களை அடையவே தலைக்கூத்தல் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. இப்போது எல்லாம் சொத்துகளுக்காகவே, பல முதியோர்களைத் தலைக்கூத்தல் முறையில் இளைய வர்கள் கொன்றுவிடுவதுண்டு

இந்தப் பழக்கம் எப்போது உருவானது என யாருக்குமே தெரியவில்லை. தென் தமிழகத்து நாட்டுப்புற நம்பிக்கை களின் படி இடைக்காலத்தில் வாழ்ந்த யாரோ ஒரு அரசன் தொடங்கிவைத்த பழக்கம் எனக் கூறுகின்றனர். தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வறுமை, பஞ்சம் ஆகியவை நிகழ்ந்து வந்திருக்கின்றன. பென்னிகுவிக் முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட முன்னர் அங்குக் கடுமையான வறுமையும் பட்டினிச் சாவுகளும் நிகழ்ந் திருக்கின்றன என்பதைப் பிரித்தானிய ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது. நல்லதங்காள் கதை போன்ற நாட்டுப்புறக் கதைகள் ஊடாக இடைக்காலங்களில் கொடிய வறுமை நிலை அங்கு நிலவி வந்திருக்கின்றது. இந்தியாவின் விடுதலைக்குப் பின்னரும் கூடத் தென் தமிழகத்தில் பல இடங்களில் வறுமை நிழலாடி இருக் கின்றது. ஆக, தலைக்கூத்தல் முறையில் வயதானவர்களையும், உழைக்கக் கூடிய உடல்நிலையற்றவர்களையும் கொல்லும் வழக்கம் இடைக்காலங்களில் எழுந்திருக்கலாம்.

இந்தப் பழக்கம் வழக்கொழிந்து போய்விட்டது எனக் கருதி வந்த நிலையில் பல்கலைக் கழக மானியக் குழு ஏற் பாட்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை துணை பேராசிரியர் எம்.பிரியம்வதா இது குறித்து மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் தலைப்பு “தமிழகத்தில் முதியோர் கொலைகள் பற்றிய ஆய்வு” ஆகும். 602 பேர்களிடம் ஒரு குறிப்பிட்ட 59 கேள்விகள் 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டு கேட்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 30 சதவீதம் பேர்கள் வயதானோரை சடங்கார்த்தமாக கொலை செய்தல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்று கூறினர். 22% பேர்கள் நோயுற்ற முதியோர்களுக்கு விரைவில் மரணம் ஏற்படுத்தும் சடங்கு களை நடத்தி அவர்கள் வாழ்க்கையை முடித்து வைக்கும் போக்குகளும் இருந்து வருகிறது என்று தெரிவித்துள் ளனர். இதில் வேறு வேறு 26 விதங்களில் நோயுற்ற, மனநிலை பிறழ்ந்த முதியோர்களை கொலை செய்தல் என்பது நடந்தேறி வருகிறது ஆனால் இந்த சட்டவிரோத மாபாதக கொலைச் செயல்களுக்குக் காரணமாக ஆய்வில் பதிலளித்தோர், முதியோர்கள் நோயால் கஷ்டப்படுவதை தாங்க முடியாமல் ‘கருணை’ அடிப்படையிலேயே உயிர் மாய்க்கப்படுகிறது என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் பொருளாதார இயலாமை காரணங்களைச் சுட்டிக்காட்டினர்.

ஆனால் இவையற்ற பிற காரணிகளும் இருந்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது, “தேனி மாவட்டத்தில் தனது வயதான தந்தையை அவரது மகனே கொலை செய்த சம்பவத்தில் அரசு வேலை தனக்குக் கிடைப்பதற்காக கொலை செய்தது தெரிய வந்துள்ளது.முதலில் நாங்கள் விருதுநகர் மாவட்டத்தில்தான் ஆய்வு நடத்தினோம். ஆனால் ஆய்வின் போக்கில் இது மதுரை, தேனி மாவட்டங்களிலும் இந்த செயற்கை மரணம் விளைவித்தல் விவ காரம் தெரியவந்தது. தற்போது நாங்கள் திருநெல்வேலியில் ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார் பேராசிரியர் பிரியம்வதா.

error: Content is protected !!