கசப்பை ஏற்படுத்தும் கட்டாய சேவை!

கசப்பை ஏற்படுத்தும் கட்டாய சேவை!

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியச் சென்றிருந்த என் நண்பரின் அனுபவம் என் நினைவுக்கு வருகிறது. ஓர் உடைந்த நாற்காலியும், மருத்துவர் அறையிலிருந்து ஒரு பாம்பும் அவரை வரவேற்றன. கடினமான அச்சூழலை சீர்படுத்திய பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அக்கிராமத்தில் அவர் பணிபுரிந்துவிட்டு பின்பு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றார்.

சமீபத்தில் புதுதில்லியில் “”கிராமப்புறங்களில் கட்டாய சேவை” என்பதை எதிர்த்து மருத்துவ மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்படியான கட்டாய சேவைக்கு உள்பட்டால் தங்களது மருத்துவப்படிப்பு ஆறரை வருடங்கள் வரை நீளும், மருத்துவ மேற்படிப்புக்குச் செல்ல மேலும் ஒருவருடம் காத்திருக்க நேரிடும் என்பதெல்லாம் அவர்களது குற்றச்சாட்டாக இருந்தது. அவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று இன்முகத்துடன் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? “”மருத்துவம் படிப்பேன், மக்களுக்கு சேவை செய்வேன்”. தங்கள் உதடுகளிலிருந்து தித்திப்பாக உதிர்த்த “சேவை’ என்னும் வார்த்தை கட்டாய சேவை என்று சொல்லும்போது மட்டும் அவர்களது உடல் முழுவதும் கசப்பை ஏற்படுத்துகிறது.
31 - rural area doctors
நாட்டின் சுகாதாரத் துறை அடைந்திருக்கும் சீர்கேடுகள் பற்றி யாரும் வாய் திறப்பது இல்லை. நாடாளுமன்றத்தில் கூச்சலிடுவது இல்லை. நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு மேல் தட்டம்மையால் இறந்து போகிறார்கள். உலகம் முழுவதும் தட்டம்மையால் இறந்துபோகும் குழந்தைகளில் 47 சதவீதம் இந்தியாவில் மட்டும் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழிந்தும்கூட ஒரு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசித் திட்டங்களில் (போலியோ தவிர) உலக நாடுகளின் மத்தியில் நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்.

நம்முடைய பக்கத்து நாடான வங்கதேசம் அனைத்து தடுப்பூசித் திட்டங்களையும் 94 சதவீதக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்க, நாமோ பி.சி.ஜி. தடுப்பூசித் திட்டத்தில் 87 சதவீதத்தையும், டி.பி.டி.-இல் 72 சதவீதத்தையும், தட்டம்மையில் 74 சதவீதத்தையும், ஹெப்பாடடைஸ் பி-இல் 37 சதவீதத்தையும் மட்டுமே நிறைவேற்றியிருக்கிறோம். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நாட்டின் மொத்த வருவாயில் (ஜி.டி.பி) 1.2 சதவீதம் மட்டுமே மத்திய அரசு சுகாதாரத்திற்கு ஒதுக்கும் நிலையில் அத்தொகையின் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவிடப்படுகிறது. இந்த சதவீதம் சீனாவில் 2.7, லத்தீன் அமெரிக்க நாடுகளில் 3.8, ஐரோப்பிய நாடுகளில் 8.0, உலக அளவில் சராசரியாக 6.5 சதவீதம் என்று இருக்க போரினாலும், உள்நாட்டு கலகத்தினாலும் பாதிக்கப்படும் நாடுகளில் மட்டுமே நம் நாட்டைப் போன்று குறைந்த தொகை சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படுகிறது. அரசு மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் நமது நாட்டின் சுகாதாரத் துறையில் என்ன நடக்கிறது என்பது குறித்துப் பேச வேண்டும்.

பக்கத்து நாடான வங்கதேசத்தின் தனிநபர் வருமானத்தைவிட இரண்டு மடங்கு அதிகம் பெற்றிருக்கும் நாம், குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் அங்கு இருப்பதைவிட அதிகமாகப் பெற்றிருக்கிறோம். இன்னமும் நமது ஆரம்ப சுகாதார நிலையங்களில் 69 சதவீதம் ஒரு படுக்கையை மட்டுமே பெற்றிருப்பதையும், 20 சதவீதம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே தொலைபேசி வசதி பெற்றுள்ளது என்ற உண்மையையும் மருத்துவ மாணவர்கள் உணர வேண்டும். இத்தகைய வசதிகளைப் பெற்றிருக்கும் பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவர் இன்மையால், சுகாதாரப் பணியாளர்கள் இன்மையால் பகல் முழுவதும் பூட்டியே கிடக்கின்றன என்ற அவலத்தையும் மருத்துவ மாணவர்கள் உணர வேண்டும். நமது நாட்டின் அவல நிலையைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசும், மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் கூட்டாக விவாதிக்க வேண்டும்.

அரசு நடத்தும் பலநூறு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து குறைந்த செலவில் மருத்துவப்பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்கள் அரசின் சில கடமைகளை, வேண்டுகோள்களை, கட்டளைகளைப் புறக்கணித்திட முடியாது. அரசுக்கு வெளியே பல்வேறு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு மலைப் பகுதிகளில், பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில், காடுகளின் உள்பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்காக பல்வேறு மருத்துவ வசதிகளைச் செய்து தருகின்றன. தன்னலம் பாராமல், மருத்துவம் என்பதைத் தொழிலாகக் கருதாமல் சேவை என கருதி உழைக்கும் மருத்துவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அப்படிப்பட்ட மகத்தான மருத்துவர்களை மருத்துவ மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மருத்துவ மாணவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ அது ஒரு சேவை.

மருத்துவத் துறையில் தனியார் பிரகாசிக்கும் ஒரு சில நாடுகளில் நம் நாடும் ஒன்று என்பதனால்தான் பிரகாசமான எதிர்கால வேலைவாய்ப்புகளை எண்ணி மருத்துவ மாணவர்கள் ஒருவருட கால இழப்பைப் பெரிதாக எண்ணுகிறார்கள். மருத்துவ மாணவர்களின் இம்மனப்பாங்கு மட்டுமே பிரச்னை அல்ல. அரசும் சுகாதாரத்துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

செ. சண்முகசுந்தரம்

error: Content is protected !!