எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 2 இந்திய குழந்தைகள்!

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 2 இந்திய குழந்தைகள்!

முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த 2 குழந்தைகள், தங்கள் தந்தையுடன் எவரெஸ்ட் மலைச் சிகரத்தை அடைந்தனர். அங்கு மூவர்ணக் கொடியை நாட்டிய அவர்கள், சிகரம் மீது ஏறியது மிகுந்த உற்சாகமாக இருந்ததாக கூறினர். மேலும் எவரெஸ்ட் சிகரம் மீது 2014–ம் ஆண்டு 5 வயது 11 மாதம் நிரம்பிய ஹர்ஷித் என்ற சிறுவன் ஏறினான். அந்த சாதனையை தற்போது 5 வயதே ஆன கந்தர்ப் முறியடித்துள்ளான். ரித்விகா–கந்தர்ப் ஆகியோருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
everset child
நேபாளத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள எவரெஸ்ட் மலை சிகரம் உலகிலேயே அதிக உயரம் கொண்டது. பனிச் சிகரமான இதன் மீது இந்தியா உள்பட பல்வேறு நாட்டினர் ஏறி உச்சியை அடைந்து சாதனை புரிந்து வருகின்றனர்.
முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த 8 வயது ரித்விகாவும், இவரது தம்பி 5 வயது கந்தர்ப்பும் எவரெஸ்ட் சிகரம் மீது வெற்றிகரமாக ஏறி தேசியக் கொடியை நாட்டி உள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த வர் பூபிந்தர் சர்மா. மலையேறும் பயிற்சியாளரான இவர் கடந்த 20 வருடங்களாக இதில் சர்வதேச அளவில் நிபுணராக விளங்குகிறார்.

பூபிந்தர் சர்மாவின் குழந்தைகளான ரித்விகா குவாலியரில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 4–ம் வகுப்பும், கந்தர்ப் ஒன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்களுக்கு, தந்தை பூபிந்தர் விளையாட்டில் கடுமையான பயிற்சி கொடுத்து சிறப்பாக உருவாக்கி உள்ளார். குதிரை சவாரி, நீச்சல், கயிறு கட்டி ஆற்றை கடந்து செல்லுதல், மலையேற்றம் உள்பட பல்வேறு விளையாட்டுகளில் குழந்தைகள் பயிற்சி பெற்று சிறந்து விளங்குகின்றனர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விருதுகளையும் வென்றுள்ளனர்.

குழந்தைகள் ரித்விகாவும் கந்தர்ப்பும் தங்கள் தந்தையுடன் எவரெஸ்ட் மலைச்சிகரம் 5 ஆயிரத்து 380 மீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தனர். சிகரத்தின் உச்சி மீது ஏறிய அவர்கள், ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் எழுப்பியபடி தேசியக் கொடியை நாட்டினர். சிகரம் ஏறிய அனுபவம் குறித்து ரித்விகா நிருபர்களிடம் தெரிவிக்கையில், ‘உச்சியை அடைந்தபோது மிகுந்த உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எவரெஸ்ட் சிகரத்தை மிக அருகில் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது. பனிப்பொழிவை ரசித்தோம்’ என்றார்.

குழந்தைகளுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறும் சவாலை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டு வெற்றி பெற்றுள்ளதாக, அவர்களின் தந்தை பூபிந்தர் சர்மா தெரிவித்தார். குழந்தைகள் சாதனை குறித்து நேபாள சுற்றுலா வாரிய அதிகாரி சரத் பிரதான் கூறுகையில், ‘இந்தியாவை சேர்ந்த 2 குழந்தைகள் சிகரம் ஏறியது, அவர்கள் எவரெஸ்ட் மீது வைத்துள்ள அன்பை மட்டும் காட்டவில்லை. இது நேபாள சுற்றுலா வளர்ச்சிக்கு ஒரு உந்துதலையும் அளித்துள்ளது’ என்றார்.கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பூகம்பத்தினால் நேபாள சுற்றுலாத்துறை பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது ஆகும்.

error: Content is protected !!