“எப்படி” இருந்த பொங்கல் ‘இப்படி’ ஆகி போச்சே!

“எப்படி” இருந்த பொங்கல்  ‘இப்படி’ ஆகி போச்சே!

நெருப்பைக் கண்டு மிரண்டு கிடந்த ஆதி மனிதர்கள் அந்த நெருப்பில் வெந்து கிடந்த உணவுகளை உண்ட போது அதன் மென்மையையும் சுவையையும் அறிந்து கொண்டார் கள். அதே நெருப்பு இருட்டில் வெளிச்சம் தருவதை, குளிரில் வெப்பமூட்டுவதை, வனத்தில் பிற விலங்குகள் நெருங்கித் தாக்காமல் தடுப்பதை அனுபவத்தால் புரிந்து கொண்டவர்களாக அதைப் பாதுகாத்தார்கள். பின்னொரு நாளில் நாமே நெருப்பை உண்டாக்க முடியும் என்று கண்டுபிடித்தபோது குதித்தாடிக் கொண்டாடினார்கள்.

edit jan 14

அப்படிக் கொண்டாடியதன் நோக்கம் அந்தக் கணத்தின் வெற்றியில் மகிழ்வது மட்டுமல்ல, சக மனிதர் களுக்கு அந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பதைத் தெரிவிப்பதும் தான். ஆம், பொது அறிவைத் தனிச்சொத்தாகக் காப்புரிமையாக்கி வர்த்தகமாக்காத காலமல்லவா அது!

நெருப்பே ஒரு முழு நட்சத்திரமாக பூமிக்கு வெப்பமும் வெளிச்சமும் உயிர்களுக்கு இயக்கமும் தந்து கொண்டிருக்கிற சூரியனின் சேவையைக் கண்டுணர்ந்ததையும் கொண்டாடினார்கள். வெயிலின் அருமை அடர் காட்டின் இருளில், கடுங்குளிர்ப் பனியில் புரிந்தது. உழுது பயிரிட்டு உணவை உற்பத்தி செய்யக் கற்றுக்கொண்டபோது சூரிய வருகையின் முக்கியத்துவம் பல மடங்கு உணரப்பட்டது,அடுத்தடுத்த தலை முறைகளுக்கு அதைக் கற்பிப்பிக்கும் வழியாகவும் கொண்டாட்டம் கைக்கொள்ளப் பட்டது. உழுது பயிரிட்டு எடுத்ததைச் சூரியனுக்கு நன்றிப் படையலாக்கி, அதைச் சாக்கிட்டு மற்றவர்களோடு பகிர்ந்து கொண்ட கொண்டாட்டம் உலகம் முழுவதும் ஒவ்வொரு வகையாய்த் தொடர்கிறது. நம் ஊரில் பொங்கலாய் இனிக்கிறது.

ஒரு கவளப் பொங்கலில் இப்படியொரு மானுடப் பயண வரலாறே இருக்கிறது! அது தெரியாமலே, அது தெரிவிக்கப்படாமலே கடைப்பிடிக்கப்படுகிறபோது வெறும் சடங்காகிறது. முதலில் சொன்னது போல் கொண்டாட்டத்தின் நோக்கம் கூடிக் களித்திருப்பது மட்டுமல்ல, சக மனிதர்களுக்குத் தெரிவிப்பதும்தான் என்பதால், பொங்கலை மட்டுமல்லாமல் பொங்கலின் வரலாற்றையும் பகிர்ந்திருப்போம்.

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி சூரியன் நம்மிடம் எதிர்பார்ப்பது நன்றியை அல்ல. அது எதிர் பார்ப்பதெல்லாம் பூமியில் மனிதரின் பரிணாமம் கூடி உழைப்பதிலும் உழைப் பின் பயன்களைச் சேர்ந்து கொண்டாடுவதிலும்தான் அர்த்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு நாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையே. மனிதர்கள் இயற்கையின் ரகசியங் களைக் கண்டறிந்த வெற்றியைக் கொண்டாடியது போக, மனிதர்களை மனிதர் களே தாக்கி அழிப்பதை வெற்றியெனக் கொண்டாடுவதாகத் தடம் புரண்டு போன கொண்டாட் டங்களைக் கண்டு, அந்தச் சூரியனுக்கு உணர்வு இருக்குமானால், மனம் நொந்து கொண்டிருக்கும்.

இன்னும் எத்தனையோ கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய நெருப்பு முற்றிலுமாக அவிந்துபோகும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். பொருளாதாய வேட்டையில், உழைப்புச் சுரண்டல் மூர்க்கத்தில், இனவெறி வன்மத்தில், மத வேறுபாட்டுப் பகைமை யில், இந்திய மண்ணின் சாதி வேற்றுமைச் சிறுமையில், பாலினப் பாகுபாட்டுக் கொடுமையில் கொண்டாடப்படுகிற வெற்றிகளைக் காணக் காண, அந்தச் சூரியனுக்கு சீக்கிரமே அணைந்துபோனால்தான் என்ன என்ற எண்ணம் ஏற்படுமானால் வியப்பில்லை.

கூடிக்கொண்டாடுகிற பண்பாடு எப்படியெல்லாம் சீர்குலைக்கப்படுகிறது! ஊரே சேர்ந்து கொண்டாடும் பண்பாடு மறக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் “ஸ்பான்சர்” ஏற்பாட்டில் டிக்கெட் போட்டு நடத்தப்படுகிற ஆட்டபாட்டங்களைப் பார்த்து விசிலடிக் கிறவர்களாக மட்டும் மக்கள் மாற்றப்பட்டு விட்டார்களே! மானுட அறிவையெல்லாம் கொண்டுவந்து கொட்டுவதற்கென அறிவியலாளர்கள் கண்டுபிடித்துக் கொடுத்த மொபைல் போன்களும் டேப்லட்டுகளும் கம்ப்யூட்டர்களும் சன்னல்களைக் கூடத் திறந்து வெளியே பார்க்கவிடாமல் மனிதர்களைத் தனித்தனித் தீவுகளாக்கிக்கொண்டிருக் கின்றனவே! ஊரே ஒன்றுபட்டுக் கொண்டாடிய நாட்கள் காலண்டர் தாள்களோடு கிழிக்கப்பட்டதாகி, வீட்டுக்குள் அவரவர் சாமியும் மதமும் சார்ந்த வழிபாட்டுச் சடங்குகளாக்கப்பட்டுவிட்டதே!

அப்படியான தனித்தீவுக் கொண்டாட்டங்களிலும் அந்தக் கறி சாப்பிடாதே, இந்த உடை உடுத்தாதே என்று வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. எல்லாப்புகழுக்கும் உரியவரின் பெயரால் தீவிர வாதத் தோட்டாக்கள் பாய்ச்சப்படுகின்றன. ஆத்ம சுக ஜெபங்களால் மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கும் உபாயங்கள் கையாளப் படுகின்றன. எல்லா மதங்களின் அதிகார பீடங்களும் மக்களை அந்தந்த வேலிகளுக்குள் அடைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கின்றன.

பண்பாட்டு மீட்பு பற்றிய பேச்சுகள் இன்று அதிகம் அடிபடுகிறது. அவற்றில் பெரும் பாலானவை, மக்களை இப்படித் தனிமைப் படுத்திடும் அடையாள அரசியல் உத்திகளாக இருப்பது தற்செயலானது அல்ல. ஊர்கூடி கொண்டாடுகிற உண்மையான தொன்மை யான பண்பாடுதான் மீட்கப்பட வேண்டியது, வலுவாகக் கட்டப்பட வேண்டியது. இன்று விழாக்களுக்கான கொண்டாட் டத்திற்காகக் கூடுகிற ஊர், நாளை நியாயங்களுக்கான போராட்டத்திற்காகவும் கூடுமே! போராட்டத்திற்காக மக்கள் கூடுவதைத் தடுப்பது உலகச் சுரண்டல்மயவாதிகளின் கட்டாயத் தேவை! அன்று நம் ஆதித்தாத்திகளும் தாத்தன் களும் இயற்கைச் சவால் களை வெற்றிகொண்டு சக மனிதர்களுக்குத் தெரிவித்துக் கொண்டாடத் தொடங்கியது போல, இன்று நாம் இந்தச் செயற்கைச் சவால்களை வெற்றிகொண்டு தலைமுறை களுக்குத் தெரிவித்துக் கொண்டாடுவது வரலாற்றுத் தேவை!

செயற்கை வேலிகளை உடைக்கவே மனித மனம் விரும்புகிறது என்பதற்குச் சான்று தான் நேரிலும் தொலைபேசியிலும் குறுஞ்செய்திகளிலும் சமூகவலைத் தளங்களிலும் மனமுவந்து பரப்பப்படுகிற பொங்கல் வாழ்த்துகள். இன்று மகிழ்ச்சியைத் தருகிற அன்பைப் பரிமாறும் வாழ்த்துகள், நாளை அனைவரும் கூடிக்கொண்டாடுகிற – மாற்றங்களுக்காகக் கூடிப் போராடுகிற பண்பை வளர்க்கட்டும்.

Kumaresan Asak

error: Content is protected !!