”இருக்க வேண்டிய வயதில் அவன் போய்விட்டானே.!” -கே. பாலசந்தர் வருத்தம்

”இருக்க வேண்டிய வயதில் அவன் போய்விட்டானே.!” -கே. பாலசந்தர் வருத்தம்

இயக்குநர் கே.பாலசந்தரின் மூத்த மகன் பால. கைலாசம். ‘பி.கே’ என்று திரையுலகில் எல்லோராலும் அழைக்கப்பட்டவர். பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து, அமெரிக்கா சென்று ஆடியோ சவுண்ட் துறையில் பட்டம் பெற்றவர். படிப்பை முடித்து சென்னை திரும்பியதும் ‘மின் பிம்பங்கள்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியவர். மேலும், சின்னத் திரையில் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர்.
Bsls-Kailasam
அப் ‘பேர்’ பட்ட கைலாசம் நிமோனியா காய்ச்சலால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் காலமானார். மயிலாப்பூரில், கே.பாலசந்தரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பால. கைலாசத்தின் உடல் இன்று நண்பகல் 12 மணிக்கு பெசன்ட் நகரில் இறுதிச் சடங்குகள் நடத்த எடுத்துச் செல்லப்பட்டது. மறைந்த பால. கைலாசத்துக்கு கீதா என்ற மனைவியும் விலாசினி என்ற மகளும் விஷ்ணுபாலா என்ற மகனும் உள்ளனர்.

மின்பிம்பங்கள்’ தொடங்குவதற்கு முன் இவர் ஸ்டில் போட்டோகிராபராக வலம் வந்தார். அது குறித்து புதிய பார்வை மாலன் குறிப்பிடுகையில், “அவரது புகைப்படங்கள்தான் என்னிடம் முதலில் பேசின. அப்போது அவர் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். திசைகள் அலுவலகத்திற்கு அபாரமான புகைப்படங்களைக் கொண்டு வருவார். அவரது படங்களுக்காகவே ‘காமிரா எழுதிய கவிதைகள்’ என்ற ஒரு பகுதியைத் துவக்கினோம். அந்த நாள்களில் Photo Feature என்பது தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புதிது. அதை அறிமுகப்படுத்தியதில் திசைகளுக்கு ஒரு பங்கு உண்டு. பின்னால் வேறு பத்திரிகைகள் வெவ்வேறு பெயரில் அதைத் தொடர்ந்தன. Photo Journalism என்பதைத் துவக்கி அந்தப் பத்திரிகையின் Photo editor என்ற தகுதியையும் அவருக்கு அளித்தோம். ஒரு விபத்தில் சிக்கி எலும்பு முறிவைச் சந்தித்த நேரத்தில் அவர் நலம் பெற பிரார்த்திக்க பிராத்தனை கிளப்பில் வேண்டி குமுதத்திற்கு கடிதம் எழுதினேன். அப்போது திசைகள் நின்று போயிருந்தது. பிரார்த்தனை கிளப்பிற்கு உறவினர்கள்தான் வேண்டுகோள் விடுக்கமுடியும் என்ற ஒரு நடைமுறையைக் குமுதம் பின்பற்றி வந்தது. அவர்கள் அந்த நடைமுறையைச் சொல்லி என்னிடம வேண்டுகோளை வெளியிடமுடியாது எனக் கூறியபோது அவர்களிடம் அவர் என் தம்பியைப் போல எனச் சொல்லி மன்றாடிய பின் அது வெளியாகி, அந்தப் பிரார்த்தனைகள் பலித்து அவர் நலம் பெற்றார். பின்னர், மேற்படிப்பிற்காக அமெரிக்காவில் உள்ள IOWA பல்கலைக்குச் சென்றார். திரும்பி வந்து மின் பிம்பங்களைத் துவக்கினார். ஆழ்வார்பேட்டை மூகாம்பிகா காம்பெளக்சில் ஒரு சிறிய அறையில் அது துவங்கியது. என்னை அழைத்துச் சென்று பெருமை பொங்க அவற்றைக் காட்டினார். மிகத் தேர்ந்த படைப்பாளி. கணபதி ஸ்தபதியைப் பற்றிய அவரது ஆவணப்படம் (பின் அது தேசிய விருது பெற்றது) தயாரானதும் எனக்குப் பிரத்தியேகமாகப் போட்டுக் காட்டினார்.)

சமூக உணர்வுள்ள படைப்பாளி. போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடு முழுக்கச் சென்று நீதி கேட்டவர். ஜந்தர் மந்திர் முன் உண்ணாவிரதம் இருந்தவர். அவரது தந்தை ஒரு புகழ் பெற்ற இயக்குநர். ஆனால் அதை அவர் எங்கும் தன் விசிட்டிங்கார்டாகப் பயன்படுத்திக்கொண்டது இல்லை. திசைகளில் பங்களித்த இளைஞர்களில் பலர் சாதாரணப் பின்னணிகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவர்களிடம் அவர் தன் பணக்காரப் பின்னணியை விளம்பரப்படுத்தியது இல்லை. அசைன்மென்ட்களுக்குப் படம் எடுக்க அவர்களோடு டூ வீலர்களில், ஆட்டோக்களில், சைக்கிள்களில் அவர்களோடு செல்வார்” என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி பலருக்கும் அறிமுகமான பால. கைலாசத்தின் மறைவுக்கு திரையுலகமும், சின்னத்திரையும் அஞ்சலி செலுத்தியது. அப்போது இயக்குநர் சிகரம் கே.பி, “இறக்கவேண்டிய வயதில் நான் இன்னும் இருக்க, இருக்க வேண்டிய வயதில் அவன் போய்விட்டானே…” என்று வாய்விட்டு புலம்பியதைக் கேட்டு கண்ணீர் வடிக்காதோர் இல்லை!

நன்றி :http://www.jannalmedia.com/

error: Content is protected !!