இந்தியா – பாகிஸ்தான் உறவில் நடப்பது என்ன?

இந்தியா – பாகிஸ்தான் உறவில் நடப்பது என்ன?

இந்தியத் துணைக்கண்டத்தின் இரு பெரிய நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் 66 ஆண்டுகளுக்குமுன் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி உருவாக்கப்பட்டன. ஆனால், இன்றுவரை இந்த இரண்டு அண்டை நாடுகளும் ஒன்றையொன்று நட்புடன் நடத்தும் நிலை உருவாகவில்லை என்பது வேதனையளிக்கிறது.

ராணுவப் படைகளின் ரோந்தும், இரண்டு அண்டை நாடுகளும் ஒரு நாட்டின் படை தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது என்று மற்ற நாட்டை குற்றம் சுமத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில நாள்களுக்கு முன்னால் இந்திய ராணுவத்தின் படைவீரர்கள் 5 பேரை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சி மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் சமாதான பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி விடுத்திருக்கிறது.
31 - india - pak border
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து பகைமையை உருவாக்கி அதில் குளிர்காய்வது ஜிஹாதிகள் எனப்படும் இஸ்லாமிய மதப் போராளிகளும், தாலிபான்கள் எனும் இஸ்லாமிய தீவிரவாத போராளிகளும்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்தியாவின் முன்னேற்றத்தை தடைசெய்து கலகம் விளைவிப்பது ஒன்றுதான் இந்த இயக்கங்களின் ஒரே குறிக்கோள் என்பதும், இதை பாகிஸ்தானின் ராணுவம் முழு மனதுடன் ஆதரிக்கிறது என்பதும்கூடக் கசப்பான உண்மைகள். இரண்டு நாடுகளுக்கிடையிலும் சமாதான பேச்சு துவங்க வேண்டும் என ஒரு தேதியை குறிப்பிட்டால் உடனடியாக எல்லைப்பகுதியில் ஒரு மோதம் உருவாகி சமாதானப் பேச்சு துவங்க முடியாமல் போவது பல முறை நடந்துவிட்டது.

இரண்டு நாடுகளின் எந்த ஒரு அரசியல் தலைவரும், சரித்திர ஆசிரியரும், சமூக ஆராய்ச்சியாளரும் நமக்கு விளக்கிச் சொல்ல முடியாத ஒரு விஷயம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த இந்துக்களும் முஸ்லிம்களும் ஏன் இப்படிக் கடுமையாக மோதிக் கொள்கிறார்கள் என்பதே.

சமூக, சரித்திர ஆதாரங்கள் நம் நாட்டில் கடந்த பத்து நூற்றாண்டுகளாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடி தங்கள் மதப்படியான வாழ்க்கை முறைகளை பின்பற்றியதை உறுதி செய்கின்றன. சமூக இணக்கத்துடன் இரண்டு மதத்தினரும் உறவாடித் தங்கள் மதவிழாக்களைக்கூட இணைந்து கொண்டாடி வந்த வரலாறும் உண்டு.

1930-ஆம் ஆண்டு முதல் இவர்களுக்குள் மதம்சார்ந்த பிளவுகள் உருவாகி அரசியல் களத்தில் அது பிரதிபலித்தது என இரு மதத்தை சார்ந்த தீவிரவாதிகளும் வாதம் செய்கின்றனர். அது உண்மை என்றால், இந்தியாவை இரண்டாகப் பிரித்து இஸ்லாமியர்களுக்குத் தனியாக ஒரு நாடு உருவாக்கப்படும் என சுதந்திரம் வழங்கப்பட்டப்பட்டபோது, இந்தியாவின் பல மாநிலங்களில் வசித்த முஸ்லிம் பெருமக்கள் இந்தியாவை தங்கள் தாய்நாடாக ஏற்றுக்கொண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பவில்லை என பிரகடனம் செய்தது ஏன் எனும் கேள்வி எழுகிறது.

பாகிஸ்தான் உருவானபோது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குப் போக விரும்பாத இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டின் ஜனத்தொகையையும்விட அதிகம். இவர்கள் அனைவரும் சகஜமாக இந்து மதத்தைச் சார்ந்த மக்களுடன் பழகி வருபவர்கள் என்பதையும் இக்காலத்து இளைஞர்கள் உணர வேண்டும். 1930-களில்தான் முஸ்லிம் லீக் கட்சி முகமது அலி ஜின்னாவின் தலைமையில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் வடஇந்தியாவில் பிரிவினை வித்திட்டது. 1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 11 பிராந்தியங்களில் உள்ள 248 முஸ்லிம் தொகுதிகளில் 57 இடங்களில் முஸ்லிம் லீக் வென்றது. இந்த ஆதரவு நிலைமை பெரிய அளவில் வளர்ந்து 1946-இல் நடந்த தேர்தலில் இந்தியாவெங்கிலும் பரவி, வங்காள பிராந்தியத்தில் 119 தொகுதியில் 116-யும், பிகாரில் 50-ல், 43-யும், உ.பி.யில் 61-இல் 54-யும், சிந்த் பிராந்தியத்தில் 34-க்கு 34 இடத்திலும் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது.

1947-இல் பிரிவினையின்போது வடஇந்தியாவின் சில மாநிலங்களின் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று குடியமர்ந்து கொண்டனர். இன்றைய பாகிஸ்தான் பகுதியிலிருந்து பல இந்துக்கள் இந்தியாவிற்கு வந்து குடியமர்ந்தனர். பல இடங்களில் மதஎதிர்ப்புகள் உருவாகி தங்கள் லாபகரமான வியாபாரத்தையும் சொத்துகளையும் விட்டுவிட்டு குடிபெயர்ந்தவர்கள் பலர். இவர்கள் மனதில் மத ரீதியிலான காழ்ப்புணர்ச்சி உருவாகியிருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

இதுபோன்ற இரண்டு சமூகங்களிலும் தீவிரவாத எண்ணமுடையவர்கள் சிறு எண்ணிக்கையிலானவர்கள்தான் என்பதும், பெருவாரியான இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையுடன்தான் வாழ்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், இது பலருடைய ஓட்டு வங்கி அரசியலுக்குத் தடங்கலாக இருப்பதால்தான் மதக்கலவரங்களை அவர்கள் தூண்டுகிறார்கள் என்பதுதான் உண்மை.

பாகிஸ்தானைப் பொருத்தவரையில் ஜனநாயகம் பெயரளவில்தான் உள்ளது. மதவாதிகளும், அவர்களுக்கு மேலாக, ராணுவமும்தான் அந்நாட்டின் ஆட்சியை நடத்திச் செல்கின்றன. முறையான பொருளாதார முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதால், மக்கள் ஆட்சியின் மீது வெறுப்படைந்த நிலையில் இருக்கிறார்கள். ஆட்சியின் மீது தங்கள் பிடி தளராமல் இருக்க தங்கள் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக எல்லா நேரமும் மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு அங்கே உண்டு.

அதேபோல, ஜனநாயகம் முறையாக இயங்குமானால் இந்தியாவுடன் பகைமை பாராட்டுவதால் ஏற்படும் மிக அதிகமான ராணுவச் செலவுதான் தங்கள் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு காரணம் என்பதை பாகிஸ்தான் மக்கள் உணர்ந்து விடுவார்கள். ராணுவ அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊழலில் திளைத்து பல்லாயிரம் கோடி பணம் சேர்த்து வெளிநாட்டு வங்கிகளில் தேக்கி வைத்திருக்கும் செய்திகள் வெளியாகிவிடும்.

1965-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த ஓர் எல்லை மோதலின்போது சிறைபிடிக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரரில் ஒருவர் மிக அதிக அளவில் உடல் காயங்களால் பாதிக்கப்பட்டு எல்லை ஓர ராணுவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நினைவு திரும்பாமல் 20 நாள்கள் இருந்து பின் நினைவு திரும்பியபோது தேம்பித் தேம்பி அழுததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் என்ன காரணம் என பல முறை கேட்டும் அவர் பதில் சொல்லவில்லை. பின் மருத்துவர்கள் அவரை முழுமையாகக் குணப்படுத்தியபின் அவர் கூறியது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“”இந்திய வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டால் உடனடியாக எங்களைக் கொன்று விடுவார்கள் என எங்கள் உயர் அதிகாரிகள் ராணுவப் பயிற்சியில் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஆனால், என்னை இந்த மருத்துவமனையில் வைத்துக் கனிவுடன் கவனித்து உயிர் பிழைக்க வைத்து எனக்கு உணவு ஊட்டி, சுத்தம் செய்து நீங்கள் கவனித்ததைப் பார்க்கும்போது, நானும் என் போன்றவர்களும் உங்களைப் பற்றி நினைவு தெரிந்த காலம் முதலாய் தவறாக எதிரிகள் என வாழ்ந்து வந்தது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நான் எங்கள் நாட்டில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால்கூட இந்த அளவு கனிவுடன் என்னைக் கவனித்திருக்க மாட்டார்கள்” என அவர் கண்ணீர் மல்கக் கூறியது செய்தியாகியது.

அதாவது பாகிஸ்தானிய மக்கள் இந்திய எதிர்ப்புடன் இருந்தால்தான் அங்கு ராணுவ ஆட்சி தொடர முடியும். அதுபோலவே தேர்தலில் ஜெயித்த ஒரு பிரதமர் இந்தியாவுடன் சமாதானமாகப் போய்விட்டால் ராணுவத்தின் தேவை குறைந்துவிடும். எனவே, புதிய பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சமாதானம் பேசிவிடக்கூடாது என்பதற்காக எல்லை ஓரங்களில் ராணுவத்தினர் புகுந்து சண்டைகளை உருவாக்க வேண்டும் என்ற செயற்கையான செயல்களை பாகிஸ்தானின் ராணுவம் செயல்படுத்துகிறது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தாலும், பிஜேபியின் நரேந்திர மோடி இந்திய பிரதமராகி ஆட்சி செய்தாலும் இந்தியாவின் இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்க்கையை சரியான வகையில் நடத்திச்செல்ல முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், இதுபோன்ற மதநல்லிணக்கத்துடன் கூடிய ஒற்றுமை தங்களது அரசியல் வாழ்க்கையை ஸ்தம்பிக்க செய்துவிடும் என முலாயம்சிங் யாதவ் தொடங்கி, சில முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும் நம்புகின்றன. அதனால்தான் ஏதேனும் ஒரு தாக்குதல் நிகழ்ச்சியை உருவாக்கி மதச் சச்சரவு ஓயாமல் பார்த்துக் கொள்கின்றன.

இந்து தீவிரவாதிகளும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்கள் என்பதால் பெருவாரியான இந்து மற்றும் இஸ்லாமிய மக்களின் ஒற்றுமை கலாசாரத்தை அவர்களால் சீரழித்துவிட முடியாது!

என். முருகன் (பணி நிறைவு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.)

error: Content is protected !!