இணைய தளங்கள் மூலமாக குழந்தைகள் பாலியல் பாதிப்புகள் – தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை

இணைய தளங்கள் மூலமாக குழந்தைகள் பாலியல் பாதிப்புகள் – தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை

“சமீபகாலமாக குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்ததற்கு இன்டர்நெட் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொருவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டினாலும் வரும்காலத்தில் குழந்தைகளை அது கடுமையாக பாதிக்கும் என்பது எனது கருத்தாகும். இதன்மூலம் குழந்தைகள் கடுமையான குற்றங்களைச் செய்யலாம். தற்போது மொபைல் போன்கள் மூலம் இன்டர்நெட் வசதி வந்துள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை அதிகரித்துள்ளது.” என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை விடுத்துள்ளார்
nov 17 - child abuse..mini
சென்னையில் உள்ள ஜுடிசியல் அகடமியில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் குறித்த தென்மண்டல நீதிபதிகள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டின் தொடக்க விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் கலந்துகொண்டு பேசும் போது ,”குழந்தைகளைப் பாதுகாக்க 2012ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டம் (போக்ஸோ சட்டம்) முதன்முறையாக கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் 53.22 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தெரிந்தவர்கள் மூலம் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கு நீதிபதிகள், அரசு வக்கீல்கள், விசாரணை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங் களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக் கும் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்படும் குழந்தைகளிடம் விசாரணை நடத்துவதிலும் மிகவும் கவனம் தேவை. குழந்தைகளை விசாரணை என்ற பெயரில் அடிக்கடி தொந்தரவு செய் தால் அந்த குழந்தைக்கு மன தளவில் பாதிப்பு ஏற்படும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் உரிய பயிற்சி இல்லாதவர்களாக உள்ளனர். இதுபோன்றவர்களின் விசாரணையால் குழந்தைகள் குழம்பி விடுவார்கள். மொழி பிரச்னை உள்ள குழந்தைகளிடம் விசாரணை நடத்தும்போதும் குறுக்கு விசாரணை நடத்தும்போதும் மொழிபெயர்ப்பாளர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். விசாரணை நடத்தும் வக்கீல்களும் தேவையற்ற வார்த்தைகளையும், தேவையற்ற கேள்விகளையும் கேட்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளை தொட்டோ, தொடாமலோ அல்லது ஆபாசமாகவோ படம் எடுத்தோ பாலியல் வன்முறை செய்வது போக்ஸோ சட்டத்தின்படி குற்றமாகும். பாலியல் தொழிலுக்காக குழந்தைகளைக் கடத்துவதும் இந்த சட்டத்தில் கடுமையான குற்றமாக வகை செய்யப்பட்டுள்ளது.

போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் சிறப்பு நீதிமன்றங்களில் 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பத்திரிகைகளில் செய்தி வெளிவரக்கூடாது. இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

தொடர்ந்து கருத்தரங்கில் பேசிய அவர்,”இந்தியாவில் 43 கோடி குழந்தைகள் உள்ளனர். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் மூலம் குழந்தைகளுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. பாலுறவுக்கு குழந்தைகளை பயன்படுத்தும் குற்றம், தற்போது உருவானதல்ல. அதை ஏதோ வெளிநாட்டு சமாச்சாரம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இந்தக் குற்றம் தொடர்பான இந்தியாவின் விகிதாச்சாரத்தை கணக்கிட்டால், அப்படி நினைத்துவிட முடியாது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் 2007–ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு வரும்வரை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை நாட்டில் இல்லை என்றுதான் பலர் நினைத்தனர். ஆனால், ஒன்று அல்லது அதற்கும் கூடுதலாக நிகழ்வில், பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப்பட்டதாக 53.22 குழந்தைகள் கருத்து கூறியதாக அந்த கணக்கெடுப்பு கூறுகிறது.

மேலும், தெருவோர குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், சில அமைப்புகளில் வளரும் குழந்தைகள் போன்றோர் அதிகமாக பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். 50 சதவீதம் குழந்தைக்கு, அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களால் அல்லது பொறுப்பானவர்களால்தான் துன்பம் விளைந்துள்ளது.

காப்பக இல்லங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் கடந்த செப்டம்பர் மாதம் வந்தன. உடனே நான் நாட்டிலுள்ள அனைத்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளையும் அழைத்து, குழந்தை நலனுக்கான சட்டங்கள் அமல்படுத்துவது பற்றியும், காப்பகங்களை தொடர்ந்து ஆய்வுக்குள் வைப்பதற்காகவும் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று அவர்களை கேட்டுக்கொண்டேன்.

இந்த குற்றங்களை களைவதை முறையாக கையாளாவிட்டால், குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்காலமே வீணாகிவிடும். இந்த குற்றங்களை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டுகளை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இணைய தளங்கள் மூலமாகவும் குழந்தைகள் பாலியல் பாதிப்புகளை அடைகின்றனர். ஆனால் இதுபற்றி குழந்தை பாதுகாப்புக்கான 2012–ம் சட்டத்தில் கூறப்படவில்லை. வரும் காலங்களில் இந்த குற்றம் அதிகமாகும் என்பதால் அதை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியமாக தேவைப்படுகின்றன.

மேம்படுத்தப்பட்ட இணையதள சேவையை நாமே வரையறுத்துக்கொள்வது சரியாக இருக்கும். குழந்தைகளை பாதுகாப்பது என்பது அனைத்து தொழிலிலும் உள்ள எல்லோர் மீதும் இருக்கும் ஒரு பரவலான பொறுப்பு. நல்ல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவற்றை சரியாக அமல்படுத்தினால் மட்டுமே அதன் பலனை அடைய முடியும்.

குழந்தைகளை நாம் பாதுகாப்பதை மட்டுமே நோக்கத்தில் வைக்காமல், குழந்தைகளும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தி தரவேண்டும். இந்த சட்ட அமலாக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.

சமுதாயத்தின் அனைத்து தரப்பினரிடமும் இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு கொண்டு வரப்பட வேண்டும். குழந்தைகள் பாதுகாப்புக்கான ஹாட்லைன் வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

குழந்தைகள் பாலியல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு, குழந்தைகளிடம் தொடர்பு கொள்ள வகை செய்யக்கூடிய பணிகளை கம்பெனிகள் வழங்கக்கூடாது. பாலியல் துன்பங்கள் குறித்து அந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.”என்று சதாசிவம் பேசினார்.

error: Content is protected !!