இஞ்சி இடுப்பழகி பாடல் வெளியீட்டு விழா – ஆல்பம்!

இஞ்சி இடுப்பழகி  பாடல் வெளியீட்டு விழா – ஆல்பம்!

ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், ‘இஞ்சி இடுப்பழகி.’ இந்த படத்தை பி.வி.பி. நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பிரபல தெலுங்கு டைரக்டர் ராகவேந்திரராவின் மகன் கே.எஸ். பிரகாஷ்ராவ் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.


இப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா உடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. தெலுங்கில் ஜீவா வேடத்தில் நாகார்ஜூன் நடித்திருக்கிறார். கெளரவ பாத்திரம் என்றாலும், கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். ஏற்கனவே ஆர்யா நடித்த ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தில் கெளரவ வேடத்தில் ஜீவா நடித்திருந்தார்.இப்படத்தின் பாத்திரத்துக்காக அனுஷ்கா தன் உடல் எடையை அதிகரித்து படப் பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் உடல் எடையை குறைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படப் பாடல்களை, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டு பேசினார். அவர் பேசும் போது, “‘‘நான் ஒரு நடிகர் என்ற முறையிலோ அல்லது நடிகர் சங்க தலைவர் என்ற முறையிலோ விழாவுக்கு வரவில்லை. என் மகள் அனுஷ்காவுக்காக விழாவில் கலந்துகொண்டேன். இந்த படத்தில், என் மகள் வித்தி யாசமாக நடித்து இருக்கிறார்.நான், அனுஷ்காவை என் மகளாக சுவீகாரம் எடுத்துக்கொண்டேன். படத்துக்காக அனுஷ்கா தன்னை குண்டு பெண்ணாக மாற்றிக் கொண்டார். கதாபாத்திரத்துக்காக தன் உருவத்தை மாற்றிக் கொள்வது சுலபம் அல்ல. இந்த படத்துக்காக அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார்.

இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் மரகதமணி தான். இளையராஜாவுக்கு இணையான ஓர் இசையை அவர் வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதற்கு ‘பாகுபலி’ உள்ளிட்ட பல படங்கள் சாட்சியாக இருக்கின்றன.

இப்படத்தின் இயக்குநர் பிரகாஷ் ராவ் எனக்கு ஒரு நடிகராக தான் அறிமுகம். அவரே இயக்கி நடித்த ஒரு ஆங்கில படத்தில் நான் நடித்திருக்கிறேன். அவர் தனக்கான ஒரு அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அழிக்க முடியாத ஓர் அடையாளம் இருக்கிறது. அவருடைய அப்பா ராகவேந்திர ராவ் அவ்வளவு பெரிய இயக்குநர். அந்த அடையாளத்தை விட, தனக்கு ஒரு சுய அடையாளம் வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்.

ஆர்யாவைப் பற்றி பெண்கள் மட்டுமே பேச வேண்டும் என்று கிடையாது. அவருடன் நானும் 3 படங்கள் பணி யாற்றிவிட்டேன். ஆகையால் நிறையப் பேசலாம். படப்பிடிப்பு தளத்தை எப்போதுமே கலகலப்பாக வைத் திருப்பார். அனைவருமே நாயகிகளோடு மட்டும் தான் பேசிக் கொண்டிருப்பார் என நினைக்கிறார்கள். தன்னைச் சுற்றி தான் கதை நகர வேண்டும், சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இன்றைய நாயகர்கள் மத்தியில் ஒரு நல்ல கதைக்காக தேதிகள் ஒதுக்கி நடித்திருப்பதற்காக ஆர்யாவைப் பாராட்டுகிறேன்’’ என்றார்.

விழாவில் நடிகை அனுஷ்கா, ‘‘ஒவ்வொரு பெண்ணும் குண்டாக இருக்கிறோமே அல்லது ஒல்லியாக இருக்கிறோமே என்று கவலைப்பட வேண்டாம். அழகு மனதில்தான் இருக்கிறது. உடம்பில் அல்ல. அதனால் அழகாக இல்லையே என்று எந்த பெண்ணும் கவலைப்பட தேவையில்லை.சின்ன வயதில் என்னை அழகாக இருப்பதாக பலர் சொல்லியிருக்கிறார்கள். அதைக்கேட்டு கேட்டு பழகி விட்டது. எனவேதான் இந்தப் படத்தில் குண்டு பெண்ணாக வரவேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், உடனே நடிக்க சம்மதித்தேன். கதாபாத்திரத்துக்காக நிறைய சாப்பிட்டு உடலை குண்டாக்கிக்கொண்டேன். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நல்ல கதையும் இருக்கிறது. நல்ல கருத்தும் இருக்கிறது.’’என்று பேசினார்.

error: Content is protected !!