ஆம் ஆத்மி கட்சி-சென்னையில் கோஷ்டி பூசல்!

ஆம் ஆத்மி கட்சி-சென்னையில் கோஷ்டி பூசல்!

டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
jan 7 - AAP
ஆம ஆத்மி கட்சியின் சென்னை மாநில பொருளாளர் ஆனந்தகணேஷ் நேற்று பேட்டி அளிக்கும்போது, “இந்தமாத இறுதியில் கட்சியின் தமிழக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 200 பேரிடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. எங்கள் கட்சியை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. தவறாக நடப்பவர்கள் கட்சியில் நீடிக்க முடியாது. இதுவரை 6 கமிட்டி உறுப்பினர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.

இந்த நிலையில் இவரது பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.நாராயணன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் தனசேகரன், நிர்வாகிகள் அருண், ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக அமைந்தகரை மார்க்கெட் அருகே உள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ,”இன்று காலை பத்திரிகையில் “எங்கள் கட்சியில் 6 பேர் நீக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. எங்களை நீக்கியவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் அல்ல. கட்சியில் உறுப்பினரை நீக்க வேண்டும் என்றால் கட்சியின் செயற்குழு கூடி பரிந்துரை செய்ய வேண்டும். அமைந்தகரை மார்க்கெட் அருகேதான் மாநில அலுவலகம் இயங்கி கொண்டு இருக்கிறது.

ஆனந்தகணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார். நாங்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே நினைக்கிறோம்.

ஆனால் இதற்கு மேலும் அவர் இதுபோன்று செயலில் ஈடுபட்டால் அவர்கள் செய்யும் தவறுகளை குறிப்பாக பணம் வசூல் செய்வது குறித்து வெளிப்படையாக எடுத்துக் கூறுவோம்.”என்று அவர் கூறினார்.

இதுபற்றி ஆனந்த கணேசிடம் கேட்டபோது, “இன்று பேட்டி அளித்தவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்” என்று பதில் அளித்தார்.ஆக கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டி பூசல் வெடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!