அரசியல் என்றால் என்ன? சொல்ல வருகிறது ‘நான் ஆணையிட்டால்!

அரசியல் என்றால் என்ன? சொல்ல வருகிறது ‘நான் ஆணையிட்டால்!

தெலுங்கில் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ என்கிற பெயரில் உருவாகியுள்ள படம் தான் தமிழில் நான் ஆணையிட்டால் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட நேரடிப்படம் என சொல்லும் அளவுக்கு இந்தப்படத்தில் மயில்சாமி, ஜெகன், ஆர்.எஸ்.சிவாஜி என நம்முடைய காமெடி நட்சத்திரப்பட்டாளமே இதில் நடித்துள்ளது. மேலும் காரைக்குடி பகுதியில் தான் முக்கால்வாசி படத்தையும் படமாக்கியுள்ளனர். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்கியுள்ளார்.. இதில் ராணா பக்கா அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட்-11ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குநர் தேஜா, “நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான்.. ஆனா எனக்குத் தமிழ் தெளிவா பேச வராது.. தெரியாது-ன்னுதான் சொல்லணும் தெரியாது என்று சொல்லியே சகலத்தையும் மனசு விட்டு கொட்டி விட்டார். சென்னை பாண்டி பஜாரின் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய நினைவுகளை பகிர்ந்து கொண்டவருக்கு பாலிவுட், டோலிவுட் வெற்றியெல்லாம் பெரிதாகவே தெரியவில்லை. எம்.ஜி.ஆர் எனும் கேரக்டர் மட்டும்தான் அவர் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ அப்படியெல்லாம் இப்போது இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்-இன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த சமயத்தில அவரது அரசியல் பணிகளை மறந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர்-இன் குணாதசியங்களை அறிந்த நாங்கள் தற்போதைய அரசியல் நிலவரத்தில் அவர் இருந்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து அவற்றுடன் தொடர்புபடுத்தி ஒரு கதையை உருவாக்கினோம்.

இன்னிய டிரைலரில் நீங்க பார்த்தப் போது வந்த இந்த ரிசார்ட் மேட்டர், தமிழ்நாடு அரசியலில் நடந்ததற்காக வைக்கவில்லை. இதே போல ஆந்திராவிலும், சந்திரபாபு நாயுடுவில் பீரியடில் நடந்தது. அப்போது ஹோட்டலில் நடைபெற்றதால் ஹோட்டல் என்று வசனம் வைத்து அக்டோபரில் இங்குள்ள காரைக்குடியில்தான் ஷூட்டிங் தொடங்கினோம். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தார். அப்பவே ஷாக் ஆயிட்டேன். நான் தலைவர் எம்.ஜி.ஆர்.. அப்புறம் அம்மா அனுதாபி. ஆனா கட்சி பிரமுகரெல்லாம் கிடையாது.

அந்த அம்மா மறைவுக்கு பிறகு இங்கே கூவத்தூர் ரிசார்ட் சம்பவம் நடந்தது. அதனால் வசனத்தில் ஹோட்டலை எடுத்துவிட்டு ரிசார்ட்டை செருகிவிட்டோம். இது டப்பிங் படமா? நேரடி தமிழ்ப்படமா? என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. படத்தில் பேசும் பாதி அரசியல் தமிழ்நாட்டு அரசியல் சூழலையும் பேசுவதால் தமிழ்ப்படமாகவே மாற்ற நினைத்து, முக்கியமான கட்டங்களில் டப்பிங் தெரியாமல் இருக்க மீண்டும் ஷூட்டிங் எடுத்தோம். மக்களுக்கு அரசியல் என்றால் என்ன? என்பது புரியவேண்டும். அதேசமயம் அரசியல்வாதிகளுக்கும் சில விஷயங்கள் புரியவேண்டும் என்பதால், இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்” என்று கேஷூவலாக தெரிவித்தார்.

நாயகன் ராணா பேசும் போது, “ ஒரு நடிகனாக எனக்கு என் படங்களில் எக்ஸ்பிரிமெண்ட் செய்வது மிகவும் பிடிக்கும். தெலுங்கில் ஒரே மாதிரியான படங்கள் வருகின்றன. ஒரு ஹீரோ, ஐந்து பாட்டு இதுதான் டெம்பிளேட். எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்று முடிவெடுத்துதான் போர்க்கப்பல் பற்றிய படம், ராஜா காலத்தில் ஒரு படம், இப்போது அரசியல்வாதியாக ஒரு படம் என்று நடித்துக்கொண்டிருக்கிறேன். தமிழக மக்கள் சினிமாவை எந்தளவுக்கு நேசிக்கக்கூடியவர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு நல்ல சினிமா கொடுக்கவேண்டும் என நினைத்தேன். இந்தக்கதையுடன் தேஜா வந்தார். பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு முன்பே படம் முடிந்துவிட்டது. ஆனாலும், முழுமையாக சிலவற்றை செய்யவேண்டும் என்பதால் பாகுபலி 2 முடித்துவிட்டு இப்போது வந்திருக்கிறோம். எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நான் உங்களுக்கு நல்ல சினிமா தருகிறேன்” என்றார்.

error: Content is protected !!