வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தால் காட்டிக் கொடுக்கும் அப்டேட்! – AanthaiReporter.Com

வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தால் காட்டிக் கொடுக்கும் அப்டேட்!

தற்போது பலதரப்பிலும் சகலராலும் உபயோகிக்கப்படும்,வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தால் அதை பயனர்களுக்கு காண்பிக்கும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் உண்மைக்கு புறம்பான போலி தகவல்கள் மிகவும் அதிகளவில் பகிரப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகிறது. ஆனால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் பலரும் இதை செய்வதில்லை. ஒரே க்ளிக் மூலம் போலியான தகவல்களை மற்றவர்களுக்கும் எளிதில் ஃபார்வேர்டு செய்து விடுகிறார்கள். இதனால் சர்ச்சைகள், குழப்பங்கள், பிரச்சனைகள் எழுகின்றன.

இந்நிலையில், வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தால் அதை பயனர்களுக்கு காண்பிக்கும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இனி வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தால் அதை பெறும் பயனருக்கு Forwarded என்று சுட்டிக் காண்பிக்கிறது. அதாவது குறுந்தகவலின் இடது மேற்புறத்தில் இவ்வாறு காட்டுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட குறுந்தகவல் நேரடியாக டைப் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறதா அல்லது மற்றவர்களிடம் இருந்து ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த புதிய ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சத்தை வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் பெற முடியும். இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் போலியான செய்திகளை குறைக்க உதவியாக இருக்கும். மேலும், கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் (suspicious link detection) அம்சம் சோதனை செய்யப்படுவது தெரிய வந்தது.

இதன் மூலம் வாட்ஸ்அப்-இல் பகிரப்படும் இணைய முகவரிகள் போலியானதா என்பதை வாட்ஸ்அப் செயலி தானாகவே கண்டறியும். இதனால் போலி இணையதளங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் வலைதளங்களை பயனர்கள் எளிதில் கண்டறிய முடியும்.