ராகுல் ஸ்டைலுக்கு மாறும் மு.க. ஸ்டாலின்! – AanthaiReporter.Com

ராகுல் ஸ்டைலுக்கு மாறும் மு.க. ஸ்டாலின்!

சில வருடங்களுக்கு முன் சென்னையில் ராகுல் காந்தியுடன் பொதுவான சிலர் சந்திக்கும் ஒரு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அதில் ஜோதி மூலமாக பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சந்திப்பின் போது ஈழப் பிரச்னையில் காங்கிரஸ் செய்த தவறுகள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பினேன். பின்னர் பலரும் அது குறித்து அவரிடம் கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்ன ராகுல் ஒரு கட்டத்தில் தவறுகளை ஒப்புக்கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார். ராகுல் மீதான மரியாதை  தோன்றிய நாள் அது. இன்று அவர் மீதான நம்பிக்கையும் மரியாதையும் பரவலாக அதிகரித்து வருகிறது. (https://thewire.in/196866/rahul-gandhi-congress-popularity/)

கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு அணுகுமுறையை இப்போது ஸ்டாலின் கடைபிடிக்க தொடங்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. நியூஸ் 7 விவாத பிரச்னையில் சுகிதா மீதான ஆபாச வசைகளை அவர் கண்டித்திருக்கிறார். இதற்கு முன்பு தன்யா பிரச்னையிலும் தனது கண்டனங்களை தெரிவித்தார். அவர்கள் இருவரிடத்திலும் தவறு, சுகிதா பிரச்னையில் தாக்குதல் நடத்தியவர்கள் அசலான திமுகவினர் இல்லை போன்ற பதில்களை எல்லாம் தாண்டி இந்த கண்டனங்கள் முக்கியமானவை. (இதெல்லாம் தெரியாமல் ஸ்டாலின் அறிக்கைகளை கொடுத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை).

தி.மு.க பொது மக்களிடத்தில் எப்படி அறியப்பட வேண்டும் என்றொரு பார்வை அவருக்கு இருக்கிறது. பெரியார் வழியிலான பகுத்தறிவு, பெண்ணிய சிந்தனை கொண்ட கட்சியாக அது முன்னிறுத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை அவரது சமீபத்திய இந்து பேட்டியிலிருந்தே அறியலாம். அதன் ஒரு நீட்சிதான் அவரது கண்டனங்கள்.

ஆனால் கண்டனங்கள் தெரிவித்திருக்கிறார் என்பதற்காகவே அவர் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று சில திமுக. வினர் நினைப்பது ஏன்? பெண்கள் ஆபாசமாக தாக்கப்பட்டதற்கு, அது திமுகவின் பெயரில் நடந்திருப்பதற்கு ஒரு தலைவர் கண்டனம் தெரிவித்தால் அவர் நிச்சயம் நல்ல தலைவராகதான் இருப்பார். சில வருடங்களில் ராகுலுக்கு இன்றிருக்கும் மரியாதை போல ஸ்டாலினுக்கும் கூடுதல் மரியாதை பொதுத் தளங்களில் கிடைக்கும். அப்போது அதற்கு இந்த கண்டனங்களும் ஒரு சின்ன காரணமாக இருக்கும்.

கவிதா முரளிதரன்