யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்! – AanthaiReporter.Com

யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்று படுகையில் யானைகளுக்கான சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள யானைகள் இங்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முகாம் 48 நாட்கள் நடைபெறும். பார்வையாளர்கள் சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்து முகாம் யானைகளை பார்க்கலாம் என்று தெரிய வருகிறது.
Yanai camp owl 18
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரம் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று காலை துவங்குகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுவை முழுவதிலும் இருந்தும் மொத்தம் நூறு யானைகள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் இருந்து 3 கோயில் யானைகள் இன்று தேக்கம்பட்டி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள், மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி, திருவானைக்காவல் கோயில் யானை அகிலா ஆகிய 3 யானைகள் இன்று காலை லாரிகளில் ஏற்றப்பட்டு, அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள திருச்சி மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது.அங்கு 3 யானைகளுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டி, கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கொடியசைத்து யானைகளை வழியனுப்பி வைத்தனர். யானைகளுடன் பாகன்கள், கோயில் அதிகாரிகளும் உடன் சென்றனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் யானை தர்மாம்மபாள், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் யானை செங்கமலம், நாகை மாவட்டம் அக்னீஸ்வரர் கோயில் யானை சூலிகாம்பாள் ஆகிய 3 யானைகளும் இன்று அதிகாலையில் தங்கள் கோயில்களில் இருந்து சிறப்பு பூஜையுடன் லாரிகளில் அனுப்பப்பட்டன. அவை இன்று காலை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையம் அருகே வந்து சேர்ந்தது.

அங்கு யானைகனை கால்நடை மருத்துவர் சுரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் யானைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து வழியனுப்பி வைத்தனர்.

*இதற்கிடையில் காட்டு யானைகள் வழக்கமாக இந்த கால கட்டத்தில் பந்திப்பூர், வயநாடு, சத்தியமங்களம், முதுமலை வனப் பகுதிகளில் இருந்து மற்ற இடங்களுக்கு இடம் பெயரும். குளிர் காலத்தில் காட்டு யானைகள் இடம் பெறுதல் துவங்கிவிட்டது. எனவே இந்த காட்டு யானைகளால் முகாமில் உள்ள யானைகளுக்கு இடையூறு நேர்ந்துவிடக் கூடாது என்பதால், முகாம் நடைபெறும் பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சூரியசக்தி மூலம் இதற்கு மின்சாரம் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

*48 நாட்கள் நடைபெறும் முகாமில் தினமும் காலை, மாலை என இரண்டு நேரம் பவானி ஆற்றில் குளியல் உண்டு.

* வழக்கமான தீவனத்துடன் கேழ்வரகு மற்றும் அரிசி போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவும் வழங்கப்படும். தினமும் 5 கி.மீ. நடை பயிற்சியுடன் ஆயுர்வேத சிகிச்சையும் வழங்கப்படும்.

* தினமும் இந்த யானைகளுக்கு சுமார் 20,000 கிலோ எடையுள்ள தீவனம் வழங்கப்படும். இத்துடன் 750 தென்னை மரங்களின் பசுந்தீவனம் வழங்கப்படும்.

*பார்வையாளர்கள் சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்து முகாம் யானைகளை பார்க்கலாம்.