மெயின் ரோடு & பப்ளிக் பிளேஸ் & பிளாட்பாரங்களில் உள்ள கோயில்களை அப்புறப்படுத்த ஏன் தயக்கம்? சுப்ரீம் கோர்ட் காட்டம் – AanthaiReporter.Com

மெயின் ரோடு & பப்ளிக் பிளேஸ் & பிளாட்பாரங்களில் உள்ள கோயில்களை அப்புறப்படுத்த ஏன் தயக்கம்? சுப்ரீம் கோர்ட் காட்டம்

நம் நாடெங்கும் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து சட்ட விரோதமான முறையில் வழிபாட்டுத் தலங்கள், கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை அப்புறப்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிடக் கோரியும் கடந்த 2006-ல் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அவ்வப்போது மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தது. ஆனால் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அதற்கான பிரமாணப் பத்திரத்தையும் மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
temple court apr 20
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கவுடா மற்றும் அருண் மிரஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பின்பற்றாமல் இருந்ததற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், “மாநில அரசுகளின் இத்தகைய அலட்சிய மனப்பான்மையை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. சாலைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து எழுப்பப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள், சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டும் அதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு கடைசி வாய்ப்பாக இரு வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாததற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். அத்துடன் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மே மாதத்தின் 2-வது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.