“மிஸ் இந்தியா” அனுகீர்த்தி தமிழக முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்! – AanthaiReporter.Com

“மிஸ் இந்தியா” அனுகீர்த்தி தமிழக முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

பாரத தேசத்தில் முதல் முறையாக இந்திய அழகிக்கான தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற தமிழச்சி அனுகீர்த்தி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய அழகிக்கான தேர்வு போட்டி கடந்த ஜூன் 19ம் தேதி மாலை மும்பையில் நடைபெற்றது. இந்த “மிஸ் இந்தியா” போட்டியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழக மங்கையான அனுகீர்த்தி வாஸ் ”மிஸ் இந்தியா” வாக முடி சூட்டப்பட்டார்.

ஆம்..”பெமினா மிஸ் இந்தியா” வில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற 30 பேரில் தமிழகத்தை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மிஸ் இந்தியா அனுகிரீத்தி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்திய அழகி அனுகீர்த்திக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூக்கூடை கொடுத்து வாழ்த்தினார்.

முன்னதாக அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், அழகி போட்டி குறித்து தமிழகத்தில் போதிய விழிப்புணர்வு இருந்தால், மிஸ் இந்தியா மட்டுமின்றி உலக அழகியாகவும் தமிழ் பெண்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் நான் பங்கேற்க உள்ளேன். உலக அலகிக்கான கிரீடத்தை இந்தியா விற்கு பெற்றுக் கொடுப்பதே எனது லட்சியம் என்றும் அனுகீர்த்தி வாஸ் தெரிவித்தார்.

தனி ஒருவராக இருந்து என்னுடைய அம்மா என்னை தைரியமான பெண்ணாக வளர்த்ததே நான் வெற்றி பெற்றதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அனுகீர்த்தி வாஸ், தற்போது சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் பிரஞ்ச் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். எனது கவனம் முழுவதும் தற்போது உலக அழகிப் போட்டி குறித்து தான் உள்ளது. இந்த போட்டி முடிந்த உடன் மீண்டும் கல்லூரிப் படிப்பை தொடங்குவேன் என்றார் அவர். மேலும் என்னுடைய உடை குறித்தும், அலங்காரம் குறித்தும் விமர்சித்த என் பாட்டி நான் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அனுகீர்த்தி வாஸ் தெரிவித்தார்.