மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்! – AanthaiReporter.Com

மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டப்படி மின் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு வருடமாக இவை நிலுவையில் இருந்து வருகிறது.இதன் காரணமாக, சுமார் 88,000 நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படுவதாக கூறும் தொழிற் சங்க நிர்வாகிகள், உயர் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தனர். இதுத் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், நிலுவை தொகை இல்லாமல். 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க மின்வாரியம் முடிவு செய்தது.

ஆனால், தமிழக அரசின் நிதித்துறை 2.40 மடங்கு ஊதிய உயர்வு மட்டுமே போதுமானது என்று மின்வாரியத்திடம் தெரிவித்தது. முன்னர் அறிவித்தது ஒன்று பின்னர் மாற்றுவது குறித்து அதிருப்தி அடைந்த ஊழியர்கள் பிப்ரவரி 16-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் இடையே அதிகாரிகள் திடீரென வெளியேறியதால் பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே நிறைவடைந்தது.

அதன் பின்பு, மூன்றாவது கட்டமாக, இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை அரசே ஒத்தி வைத்தது. 2 ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்காததால், கடும் கோபம் அடைந்துள்ள மின் வாரிய ஊழியர்கள் நாளை முதல் திட்டமிட்டப்படி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும், மின்சார வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம், சிஐடியூ சங்கம்

நாளை திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கங்கள் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இடைக்கால நிவாரணம் அறிவிக்கும் போது சங்கங்களை அழைக்கவில்லை என்று மின் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தமது அணியில் உள்ள 10 சங்கங்கள் சேர்ந்த 40 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர் என்று மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்தால் பாதிப்பு வராது, அமைச்சர்

17 சங்கங்களில் ஐ.என்.டி.யூ.சி உள்பட 14 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தை நடைபெறும்போதே ஒரு சில சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர அன்போடு அழைக்கிறேன், முக்கிய சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்துள்ளன. நாளை வேலைநிறுத்தம் நடைபெற்றால் மின்தடை ஏற்படாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மின்தடை ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை, புகாரளித்தால் நிவர்த்தி செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.