மழை வருமாம்.. மழை வருமாம்! – குடை கொண்டு போங்க! – AanthaiReporter.Com

மழை வருமாம்.. மழை வருமாம்! – குடை கொண்டு போங்க!

தென் கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை வலுவடைந்தது. இதையடுத்து இன்று தமிழக கடலோரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
jan 4 - rain
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் பொய்த்துவிட்டது. அதன் காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்கிறது. நேற்று மாலை இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டது.

இதனால் நேற்று மாலையில் இருந்தே தென்தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்துள்ளது. அதனால் இன்று தொடங்கி தமிழக கடலோரப் பகுதிகளிலும், காவிரி டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தில் இன்று பரவலாக லேசான மழையும், நாளை சில இடத்தில் கனமழையும் பெய்யும்.