மதுவிலக்கு போராட்டத்துக்காக சென்னை வந்த மாணவிக்கு போலீஸ் தடை! – AanthaiReporter.Com

மதுவிலக்கு போராட்டத்துக்காக சென்னை வந்த மாணவிக்கு போலீஸ் தடை!

மதுரை சட்டக்கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வரும் மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்தார்.இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறியதையடுத்து நந்தினி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
Nandhini anti wine 23
மதுரை சட்டக்கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வரும் மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் உண்ணா விரதம் இருந்த அவர், பின்னர் அதனை கைவிட்டார்.

இந்த நிலையில் நந்தினி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் மதுரையில் இருந்து தனது தந்தை ஆனந்தனுடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.

மாலை 4 மணி அளவில் திருச்சியை வந்தடைந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நந்தினியிடமும், ஆனந்தனிடமும் போலீசார் பேச்சு நடத்தினர்.

ஆனால் சென்னை செல்லும் முடிவில் அவர்கள் உறுதியாக இருந்ததால் 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.பின்னர் நந்தினி தந்தை ஆனந்தனுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார். நேற்று இரவு 6 மணி அளவில் 2 பேரும் குரோம்பேட்டையை வந்தடைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சாப்பிடாமல் பயணம் செய்ததால் சோர்வுடன் காணப்பட்ட இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி குரோம்பேடடை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற் கொண்டனர். பின்னர் போலீசார் மாணவி நந்தினியிடம் பேச்சு நடத்தினர். சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து நந்தினி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவர் மனம் மாறி மீண்டும் சென்னைக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக போலீசாரும் சிறிது தூரம் உடன் சென்றனர்.