மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கூண்டோடு கலைப்பு! – AanthaiReporter.Com

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கூண்டோடு கலைப்பு!

மதுரை மாநகர் மாவட்டக் கழகம், மற்றும் அந்த மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிக் கழகங்கள், வட்டக் கழகங்கள் ஆகிய அனைத்து அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளன.இதையடுத்து மதுரை மாநகர் மாவட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவாள்ர்கள் கொண்ட தற்காலிக பொறுப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
jun 4 d m k
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அழகிரி பங்கேற்கவில்லை. இது குறித்தும் விமர்சனம் எழுந்தது. நான் எப்போதும் இது போன்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றார்.மேலும் “இனியொரு விதிசெய்வோம்” என்ற தலைப்பில் ஜனவரி 30-ந் தேதி திமுக பொதுக்குழு சென்னையில் நடைபெறும் என்று மதுரை திமுக நிர்வாகிகள் இருவர் ஒட்டிய போஸ்டர் அக்கட்சியில் மேலும் புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து திமுக மேலிடம் கடும் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கழக அமைப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது.இது குறித்து கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:”தலைவர் கலைஞர் கருணாநிதியின் அறிவிப்பை மீறி கட்சியின் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் சிலர் நடப்பதால் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., அமைப்பு கலைக்கப்படுகிறது. இதன்படி பகுதி கழகம், வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பதவி இழக்கின்றனர். முறைப்படி அமைப்பு தேர்தல் நடைபெறும் வரை கட்சியை வழிநடத்த தற்காலிக பொறுப்புக்குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கு கோ.தளபதி தலைமை வகிப்பார். இவரது தலைமையின் கீழ் முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தை வேலு, ஜெயராம், பாக்கியநாதன், சேது முத்துராமலிங்கம், சின்னம்மாள் ஆகியோர் பொறுப்பு குழுவில் இடம் பெறுகின்றனர். இந்த குழுவினர் கட்சியை வழிநடத்தி செல்வர்.”என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.இதில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்புக்குழுவினர் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.