மகாத்மா காந்தியின் உடலில் இருந்த 4வது குண்டு! – விசாரணை ஆரமபம்! – AanthaiReporter.Com

மகாத்மா காந்தியின் உடலில் இருந்த 4வது குண்டு! – விசாரணை ஆரமபம்!

மகாத்மா காந்தி 30.1.1948 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய இருவரும் 15.11.1949 அன்று தூக்கிலிடப்பட்டனர். காந்தி கொல்லப்பட்டு 69 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மும்பையைச் சேர்ந்த ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘காந்தி மீது 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. கோட்சே சுட்டது 3 குண்டுகள்தான். 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்று முறையாக விசாரிக்கவில்லை. அந்த 4-வது குண்டுதான் காந்தி உயிரிழக்க காரணம்.

மேலும் 1966-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கே.எல்.கபூர் ஆணையம் உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை. கோட்சே பயன்படுத்திய இத்தாலி பெரட்டா ரக சிறிய துப்பாக்கியை அவருக்கு கங்காதர் தண்டவதே என்பவர் கொடுத்துள்ளார். அவருக்கு ஜெகதீஷ் பிரகாஷ் கோயல் என்பவர் துப்பாக்கியை கொடுத்துள்ளார். இதற்கு மேல் துப்பாக்கி எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கவில்லை. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் பதிவு எண் 606824. இது குவாலியரைச் சேர்ந்த டாக்டர் தத்தாத்ரேயா பர்சுரேவுக்கு சொந்தமானது என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.

அவரைக் கண்டுபிடித்தபோது அவரிடம் அதே பெரட்டா ரக துப்பாக்கி இருந்தது. அதன் பதிவு எண் 719791. ஆனால், அதே பதிவு எண்ணில் குவாலியரைச் சேர்ந்த உதய் சந்த் என்பவரிடமும் ஒரு துப்பாக்கி இருந்துள்ளது. காந்தியின் உயிரைப் பறிக்க காரணமாக இருந்த அந்த நான்காவது குண்டு, பதிவு எண் 606824 மற்றும் 719791 ஆகிய இரண்டு துப்பாக்கிகளில் இருந்தும் வந்தது அல்ல என்று 48-ம் ஆண்டு வெளிவந்த போலீஸ் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்ற மர்மத்தை கண்டறிய மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய  விசாரணையின்போது, காந்தியை சுட்டதில் மற்றொரு நபரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என மனுதாரர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நாங்கள் அரசியலுக்குள் போக விரும்பவில்லை, சட்டப்படி போகவே விரும்புகிறோம். இப்போது ஏன் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

அப்போது வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்தார். இவ்வாறு சுமார் 15 நிமிடங்கள் நடந்த வாதத்தின் முடிவில், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்யும்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்தர் சரணிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

அப்போது நீதிமன்ற அறையில் இருந்த அமரேந்தர் சரண், நீதிமன்றத்திற்கு உதவி செய்வதாக கூறினார். அத்துடன், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை படித்துப் பார்க்க போதிய அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.