பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு! – AanthaiReporter.Com

பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

சிலைக்கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் இன்று மறுத்துவிட்டது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமிப்பதாகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாகவும் சென்னை கோர்ட் தீர்ப்பு அளித்தது.

இதனிடையே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிலைக்கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுத்துவிட்டது. மேலும் வழக்கு தொடர்பாக மனுதாரர் மற்றும் அரசுத்தரப்பு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.