பொதுத்துறை & தனியார் வங்கிகளை மூட முடிவா? ரிசர்வ் வங்கி மறுப்பு! – AanthaiReporter.Com

பொதுத்துறை & தனியார் வங்கிகளை மூட முடிவா? ரிசர்வ் வங்கி மறுப்பு!

நாடு முழுவதும் உள்ள 15 சிறு பொதுத்துறை வங்கிகளை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான செய்தி தவறானது என்று தகவல் வெளியாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன் ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகள் மூடப்பட்டன. அவை ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதே போல, மேலும் 15 சிறு பொதுத்துறை வங்கிகள் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது. மூடப்படும் வங்கிகள் 5 பெரிய பொதுத்துறை வங்கிகளுடன் ஐக்கியமாகும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் மூட்டப்படும் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது என்றும் கூறப்பட்ட நிலையில் அது வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கிகளின் மூலதனத்தை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டால் இருப்புநிலை அதிகரிக்கும். தற்போது ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகளை ஊக்குவித்து அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. வாராக்கடன் அதிகரித்து, சில பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதுபோன்ற வங்கிகளை விரைவில் மூட திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தியே. தற்போதைக்கு வங்கிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை” என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு சார்பில், ” நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்து, அதனை லாபம் பெறும் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டத்தைத் செயல்படுத்தி வருகிறோம். மேலும் பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உயர்மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போது அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், அது திரும்பப் பெறப்படலாம் அல்லது அச்சடிப்பது நிறுத்தப்படலாம்” என்று சமீபத்தில் ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அந்த தகவல்கள் வதந்தி எனவும், 2000 ரூபாயை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.