பீதியில் இங்கிலாந்து மக்கள்! – மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மிரட்டும் இமோகென் புயல் – AanthaiReporter.Com

பீதியில் இங்கிலாந்து மக்கள்! – மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மிரட்டும் இமோகென் புயல்

இங்கிலாந்தில் மழைக்காலம் தொடங்கி ஒன்பதாவது முறையாக உருவாகியுள்ள புதிய புயல் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியை சூறையாட தயாராகியுள்ளது. இமோகென் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 80 மைல் (சுமார் 130 கிலோமீட்டர்) வேகத்தில் கடலோர நகரங்களை பதம் பார்க்கும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. உள்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை (இன்று) காலை தென் மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியை பலத்த வேகத்தில் புயல் தாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இமோகென் புயல் மற்றும் அதன் விளைவாக பெய்யும் பெருமழையின் பாதிப்பால் சில இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
uk feb 8
குறிப்பாக, தெற்கு வேல்ஸ் மற்றும் தேம்ஸ் நதிக்கரையோரம் உள்ள நகரங்களில் வசிப்பவர்களை ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்து மஞ்சள் அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புயலின் சீற்றத்தால் பேரலைகள் உருவாகலாம் என்பதால் இங்கிலாந்தின் வடக்கு கடலோர பிரதேசங் களான கார்ன்வால், டேவோன் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை 60 முதல் 70 மைல் வேகத்திலும், திறந்தவெளி களில் 80 மைல் வேகத்திலும் தாக்கும் புயல் காற்றுடன், பலத்த மழையும் பெய்யும் என்பதால் சாலை மார்க்கமாக பயணிப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

மரங்களும், கட்டிடங்களும் வேரோடு சாய்ந்து சாலை போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடும், அதை எதிர்கொள்ளும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் ஓரமாக செல்லும் சிறியரக வாகனங்களுக்கு அதிகமாக வழிவிட்டு பெரிய வாகனங்கள் செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கனமழையின் எதிரொலியாக சாலைகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம் என்பதால் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, பாதுகாப்பாக செல்லவும், போகும் வழியில் அவ்வப்போது வெளியாகும் வானிலை அறிக்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.