பாராளுமன்ற தேர்தல் தேதிகள் எப்போது? – AanthaiReporter.Com

பாராளுமன்ற தேர்தல் தேதிகள் எப்போது?

கடந்த 2009 பாராளுமன்ற் தேர்தல் ஏப்ரல் 16 முதல் மே 13-ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்டன. மே 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. முன்னதாக தேர்தல் தேதிகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டன.இந்நிலையில் தற்போதைய தேர்தலையும் அதே காலகட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் பிற்பாதியில் தொடங்கி மே தொடக்கம் வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் தேதிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மக்களவைத் தேர்தலோடு ஆந்திரம், ஒடிசா, சிக்கிம் மாநிலங் களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
jan 6 - election
இந்தியாவில் தற்போது 15-வது பாராளுமன்றம் செயல்பட்டு வருகிறது. இதன் பதவிக்காலம், வரும் ஜூன் 1-ந்தேதி முடிகிறது. புதிய 16-வது பாராளுமன்றம் மே 31-ந்தேதிக்குள் அமைக்கப்படவேண்டும். இதற்கு ஏற்ற வகையில் புதிய பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் வாக்காளர்கள் பட்டியலில் அடுத்த மாத இறுதிக்குள் திருத்தங்கள் செய்து முடிக்க வேண்டும் என அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்து இறுதி செய்யும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 80 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருப்பார்கள். இந்த தேர்தலை 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து தேர்தல் கமிஷன் வட்டாரங்களில் விசாரித்த போது, “தேர்தல் அட்டவணை அடுத்த மாதத்தின் கடைசி நாட்கள் அல்லது மார்ச் மாதம் முதல் 3 தினங்களில் அறிவிக்கப்படலாம்” என தெரிவித்தன.முதல் கட்டத்தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்பாக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பாக, பாராளுமன்ற தேர்தலை சுமுகமாகவும், நேர்மையாகவும், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடத்தி முடிப்பதற்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசின் உள்துறை செயலாளருடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தும்.

அநேகமாக ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கி மே 13-ந்தேதி வரை 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தி முடிக்கப்படும்” என தகவல்கள் கூறுகின்றன.