நீட் தேர்வு தொடங்கியது : வழக்கம் போல் ஏகக் கெடுபிடி! – AanthaiReporter.Com

நீட் தேர்வு தொடங்கியது : வழக்கம் போல் ஏகக் கெடுபிடி!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் பலத்த சோதனை மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் இத்தேர்வினில் களந்துக்கொள்ள நாடு முழுவதும் சுமார் 13,26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 2,255 மையங்களில் இத்தேர்வு இன்று நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 170 மையங்கள் இடம்பெற்றுள்ளது.

இத்தேர்விற்கு பதிவுசெய்துள்ள தமிழக மாணவர்களில் சுமார் 5000 மாணவர்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் இன்று காலை 7.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 9.45 மணி வரை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளின், தலைகளில் போடப்பட்டிருந்த ஹேர் பேண்டுகள் எடுக்கப்பட்டன. அதேபோல, மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகள், ஸ்டைல் பேண்டுகள், பெல்ட்டுகள் போன்றவைகளும் எடுக்கப்பட்டன. குறிப்பாக, தேர்வு எழுத வந்த மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், மாணவிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படவில்லை.

காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் வரும் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. NEET தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இத்தேர்வின் முடிவுகள் ஜூன் 5-ஆம் நாள் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,500 பேருக்கு கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த மாணவர்கள் ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகள் மூலம் எர்ணாகுளம் சென்றடைந்தனர். கேரள அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த உதவி மையங்கள் காலதாமதமாக திறக்கப்பட்டதால், மாணவர்கள் பலர் எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

தேர்வு மையத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகள் பெரும்பாலானவை நிரம்பிவிட்டதால், தங்க கூட இடம் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்பட்டனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நேற்று மாலை கனமழை பெய்ததால், அங்கு நீட் தேர்வு எழுதச் சென்றுள்ள மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

முன்னதாக தேர்வு அறைக்குள் வரும் மாணவர்கள் அவர்களது ஹால் டிக்கெட்டுடன், அதில் ஒட்டப்பட்டு இருப்பதை போன்ற 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை மட்டும் கொண்டு செல்லவேண்டும். பேனா கொண்டு செல்லக்கூடாது. தேர்வு அறையிலேயே பேனா கொடுக்கப்படும். கைக்கெடிகாரம் அணிந்து செல்லக் கூடாது. மாணவர்கள் அரைக்கை சட்டைதான் அணிந்து செல்லவேண்டும். அதில் பொத்தான் பெரிதாக இருக்கக்கூடாது. அதேப்போல் கால்குலேட்டர், செல்போன், கைப்பை, ஹெட்போன், பென்டிரைவ், கேமரா ஆகியவற்றுக்கும் அனுமதி கிடையாது.

மாணவிகள் சல்வார், பேண்ட் அணிந்து வரவேண்டும். சேலை அணிந்து வர அனுமதி கிடையாது. காதணி, மோதிரம், மூக்குத்தி, சங்கிலி, வளையல் போன்றவை அணிந்திருக்கக்கூடாது. குறைந்த உயரம் கொண்ட செருப்புகளை அணிந்து வரவேண்டும்.

இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்க படமாட்டர் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க்து